வன்முறைக்கு இடமில்லை

உலகில் வன்முறையே இருக்கக்கூடாது என்று நினைப்பவரா நீங்கள்? வன்முறை எந்த வடிவில் வந்தாலும் அது கண்டிக்கத்தக்கது என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? அதிலும் குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்முறையை தொடரஅனுமதிக்கக்கூடாது என்ற உறுதி உங்களிடம் உள்ளதா?

இவற்றுக்கெல்லாம் உங்கள் பதில் ஆம் என்றால், நீங்கள் உடனடியாக செய்ய வேண்டிய காரியம் ஒன்று இருக்கிறது.  ஐ.நா. அமைப்பின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய இணையதளத்துக்கு சென்று  அங்கு வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் புத்தகத்தில் உங்களது கையெழுத்தை இடம்பெற செய்ய வேண்டும்.

அப்படி செய்தீர்கள் என்றால், பெண்களுக்கெதிரான வன்முறைக்கு எதிராக நீங்களும் குரல் கொடுத்திருக்கிறீர்கள் என்றுஅர்த்தம். ஐக்கியநாடுகள் சபை, மனிதஉரிமை மீறல்களை களைவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை பெண்களுக்கெதிரான வன்முறையையும் ஒரு மனித உரிமை மீறலாகவே பார்க்கிறது.  மிகவும் முக்கியமான மனித உரிமை மீறலாக இதனை ஐக்கிய நாடுகள் சபை கருதுகிறது.

வீட்டிலும், வெளியிலும் பல விதங்களில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறையை தடுப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை புதிய திட்டத்தை வகுத்துள்ளது. இதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பெண்களுக்கான நிதி என்னும் அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகை நிகோலோ கிட்மேன் இதன் நல்லெண்ண தூதராக விளங்கி வருகிறார்.

கிட்மேனும் இந்த அமைப்பும் சேர்ந்து பெண்களுக்கெதிரான வன்முறைக்கு முடிவு கட்டும் வகையில் புதிய பிரச்சார இயக்கத்தை தொடங்கியுள்ளனர். இதற்காகத்தான் சே நோடு வயலன்ஸ் டாட் ஓஆர்ஜி (saynotovoilence.org) என்னும் இணைய தளம் அமைக்கப் பட்டுள்ளது. இந்த தளத்தில் பெண்களுக்கெதிரான வன்முறைக்கு முடிவு கட்டுவோம் என அறைகூவல் விடுக்கும் டிஜிட்டல் புத்தகம் தயார் செய்யப்பட்டுள்ளது.

அதில் உலகம் முழுவதும் உள்ள வன்முறைக்கெதிரானவர்களிடமிருந்து கையெழுத்தை சேகரித்து வருகின்றனர். இந்த புத்தகத்தில்தான் உங்களையும் கையொப்பமிட அழைக்கின்றனர். ஆயிரக்கணக்கான, இயலுமானால் லட்சக்கணக்கான கையெழுத்துக் களை திரட்டி வன்முறைக்கு எதிரான செய்தியை வலுவாகவே உலகத்துக்கு உணர்த்த திட்டமிட்டுள்ளனர்.

இதற்கான பிரச்சாரத்தை நிகோலோ கிட்மேன் தொடங்கி வைத்துள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறை கவலை தரும் மனித உரிமை மீறல் என்று கூறியுள்ள அவர், நாம் நினைத்தால் இதனை தடுக்க முடியும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார்.

இதனை உணர்த்துவதற்காகத்தான் இந்த கையெழுத்து இயக்கத்தை முன் நின்று நடத்தி வருவதாகவும் அவர் கூறுகிறார். இந்த கையெழுத்துக்களின் மூலம் உலக நாடுகளின் அரசுகளை பெண்களுக்கெதிரான வன்முறைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதில் போதிய கவனம் செலுத்த வைக்க முடியும் என்று அவர் நம்புகிறார்.

இந்த அமைப்பின் செயல் இயக்குனரான சான்டிலர், பெண்களுக் கெதிரான வன்முறை குறித்த விழிப்புணர்வு பரவலாகியிருப்ப தாகவும், இந்தியா உள்ளிட்ட 89 நாடுகளில் இதனை தடுக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டிருப்ப தாகவும் தெரிவிக்கிறார். ஆனால் இந்த சட்டங்கள் செயல்படுத்தப்படுவதில் சுணக்கம் காட்டப்படுவதாகவும், அதனை மாற்ற வேண்டுமானால் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறுகிறார்.

அந்த பணியைத்தான் இணையதள மூலம் இந்த அமைப்பு செய்து வருகிறது. மார்ச் மாதம் 8ந் தேதி வரை இந்த விளம்பர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு கையெழுத்துக் கள் சேகரிக்கப் படவுள்ளன. சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ந் தேதி இந்த பிரச்சாரம் முற்றுப்பெற உள்ளது.

பெண்கள் மீதான வன்முறையை ஒடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு முறை இந்த தளத்திற்கு விஜயம் செய்து பார்க்கலாம். அப்படியே மறக்காமல் தங்களது கையெழுத்தையும் இடம்பெறச் செய்யலாம். மேலும் தங்களது நண்பர்களுக்கு இந்த தளத்தை பரிந்துரைக்கலாம்.

இந்த முயற்சியின் மூலமாக பெண்களுக்கெதிரான வன்முறை விழிப்புணர்வில் அடுத்த கட்டத்திற்கு சென்றடையலாம் என்று ஐநா சபை நம்புகிறது. பெண்களுக்கெதிரான வன்முறை என்று குறிப்பிடும்போது, வீட்டில் நடைபெறும் தாக்குதல்கள், ஆட்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான வன்முறைகளும் கருத்தில் கொள்ளப்படுகின்றன.

.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s