தோளின் பின்னே தேவதை

சமயங்களில் அதிகமாக பேசி விட்டோமோ என்று வருத்தமாக இருக்கும். இன்னும் சில நேரங்களில் பேசாமல் வந்தது தவறோ என்று மனது அலைபாயும். எப்படி இருந்தாலும் பேசும் நேரத்தில் சரியா, தவறா என்பது தெரியவில்லை. பேசி முடித்த பின்னர் விளைவுகள் பற்றி ஆராயும் போது தான் இதெல்லாம் புலனாகிறது

இது போன்ற நேரங்களில் மனசாட்சியின் குரல் நம்மை எச்சரிக்கும் அல்லது வழிகாட்டும்.
ஆனால் மனசாட்சியின் குரலை நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அல்லது அந்த குரலை நம்முடைய தடுமாற்றமாக கருதி விடுகிறோம். இதை விட நல்ல நண்பன் தோளில் கை வைத்து ஆலோசனை சொல்வது சரி, தவறை எடுத்துச் சொல்வதாக அமையக் கூடும்.
ஆனால் அத்தகைய நண்பர்கள் எப்போதுமே நமது அருகில் இருக்கும் வாய்ப்பு கிடைத்து விடுவதில்லை. இது போன்ற தருணங்களில் நமது தோளுக்கு பின்னே ஒரு தேவதை அமர்ந்து கொண்டு, நீங்கள் பேசுவது சரி; அல்லது ஓவராக அசடு வழிகிறீர்கள் என்று எச்சரித்தால் எப்படி இருக்கும்?

அமெரிக்காவை சேர்ந்த ஆக்சென்டர் டெக்னாலஜீஸ் நிறுவனம் இத்தகைய டிஜிட்டல் தேவதையை உருவாக்கி இருக்கிறது. இந்த டிஜிட்டல் தேவதையை கச்சிதமாக கையிலிருக்கும் செல்போனுக்குள் அடக்கி விடலாம். தனிநபர்களுக்கான பயிற்சியாளராக இந்த டிஜிட்டல் தேவதையை ஆக்சென்டர் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது.

அதிநவீனமான சென்சார்கள், புளூடூத் வசதி மற்றும் வயர்லெஸ் இணைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து இந்த டிஜிட்டல் தேவதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள சென்சார் ஒரு நல்ல நண்பனை போல, மற்றவர்களோடு  நாம் பேசுவதை அல்லது உரையாற்றுவதை பொறுமையாக கேட்டபடி இருக்கும்.

அதோடு புத்திசாலிதனமான நண்பனை போல அந்த பேச்சின் சாராம்சத்தை பகுத்துணரும் ஆற்றலும் அதற்கு உண்டு. எனவே பேச்சின் போக்கை வைத்துக் கொண்டு அளவாக பேசுகிறாரா அல்லது அளவுக்கு மீறி பேசுகிறாரா என்பதை உணர்ந்து தக்க நேரத்தில் அது பற்றி எச்சரிக்கும்.

இத்தகைய சென்சாரை காதில் மாட்டிக் கொண்டோம் என்றால், உரிய நேரத்தில் நமது காதுக்கு அருகே எச்சரிக்கை குரல் கிசுகிசுப்பாக கேட்கும். அதனை வைத்துக் கொண்டு நாம் உஷாராகி விடலாம். பலவிதமாக இந்த சேவையை பயன்படுத்தலாம் என்கிறது ஆக்சென்டர்.

இதற்கு உதாரணமாக முதல்கட்ட மாக விற்பனை பிரதிநிதிகளுக்கு பயன்படக் கூடிய வகையில் இதனை தயார் செய்திருக்கிறது. விற்பனை பிரதிநிதிகளுக்கு பேச்சுதான் மூலதனம் என்றாலும், வளவள வென்று மட்டும் பேசிக் கொண்டி ருந்தால் காரியமாகாது.
முதலில் வாடிக்கையாளர் சொல்வதை காது கொடுத்து கேட்க வேண்டும். அவரது தேவையறிந்து பேச வேண்டும். ஆனால் பல விற்பனை பிரதிநிதிகள் இந்த பொன்விதியை மறந்து விட்டு பேசிக் கொண்டே இருக்கின்றனர்.

இத்தகைய விற்பனை பிரதிநிதிகள் மேல்சொன்ன டிஜிட்டல் தேவதையை பயன்படுத்தினார்கள் என்றால் வாடிக்கையாளரிடம் தங்கள் நிறுவன தயாரிப்பு பற்றி அவர்கள் பேசிக் கொண்டே இருக்கும் போது சரியான கட்டத்தில் குறுக்கிட்டு எச்சரிக்கை செய்யும். விற்பனை பிரதிநிதி சமாளித்துக் கொண்டு தனது யுக்தியை மாற்றிக் கொள்ளலாம்.

ஒருவேளை விற்பனை பிரதிநிதி சரியாக பேசியிருந்தால் இந்த டிஜிட்டல் தேவதை சபாஷ் என்று மட்டும் சொல்லி ஊக்குவிக்கும். மேலும் எப்படி பேசினோம் என்பதை அறிய செல்போன் மூலம் பேச்சு பற்றிய வரைபட திறனாய்வை டவுன்லோடு செய்தும் பார்த்துக் கொள்ளலாம். இதே தகவலை இன்னும் விரிவான திறனாய்வாக கம்ப்யூட்டரிலும் பார்த்துக் கொள்ளலாம்.

டிஜிட்டல் தேவதை ஒருவர் பேசும் விதத்தை கவனித்து அதன் செயல் திறனை அலசி ஆராய்ந்து இந்த தகவலை அறிக்கையாக சமர்ப்பிக்கும். அடுத்தகட்டமாக ஒருவர் பேசும் போக்கை உன்னிப்பாக கவனித்து அவர் எப்போது சிறப்பாக தகவலை வெளிப்படுத்துகிறார்; எப்போது தடுமாறுகிறார் என்பது போன்ற பரிந்துரைகளையும் இந்த டிஜிட்டல் தேவதை முன்வைக்கக் கூடும்.

மற்றவர்களோடு பேசி தங்கள் மனதில் உள்ள கருத்து அல்லது திட்டத்தை புரிய வைக்க வேண்டிய நிலையில் இருப்பவர்களுக்கு இந்த சேவை நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.
ஒரு நல்ல நண்பனை போல நம்முடைய பேச்சை கவனித்து இந்த டிஜிட்டல் தேவதை ஆலோசனை வழங்கிக் கொண்டே இருக்கும்.

மிக சரியாகவே தனிநபர்களுக்கான பயிற்சியாளர் என்று இதனை வர்ணிக்கும் ஆக்சென்டர் இப்போதைக்கு பரிசோதனையில் மட்டும் ஈடுபட்டு வருகிறது. இந்த தயாரிப்பு சந்தைக்கு எப்போது வரும் என்பது தெரியவில்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s