படிப்பதற்கு ஒரு அறை இருந்தால்

சில பயணங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடும். அமெரிக்காவின் ஜான்வுட்  பத்தாண்டுகளுக்கு முன்னர் நேபாளத்துக்கு மேற்கொண்ட பயணம் இப்படி தான் அவரது வாழ்க்கையையே மாற்றி விட்டது.  அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் உலகம் முழுவதும் பல நாடுகளில் உள்ள ஏழை மாணவர்களின் வாழ்க்கை யையே மாற்றிக் கொண்டிருக்கிறது.

ஜான்வுட் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் அவரே கூட  சற்றும் எதிர்பாராத விதமாக  இந்த மாற்றம் நிகழ்ந்தது.  மிகவும்  இளம் வயதிலேயே உயர் பதவிக்கு வந்து ஜான் வுட் கை நிறைய  சம்பளத்தோடு மிகவும் மகிழ்ச்சியாக  வாழ்ந்து கொண்டிருந்தார். பணிச் சுமைக்கு நடுவே  ஓய்வெடுக்க விரும்பிய அவர்  1998ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நேபாளத்திற்கு  சுற்றுலா சென்றார். 

நேபாளத்தின் ஷாங்கரிலா பகுதியில் மலையேறும்  செயலில் ஈடுபட்டிருந்த அவர் தற்செயலாக  அந்த பகுதியில் வசித்த பள்ளி ஆசிரியர் ஒருவரை சந்தித்தார். அப்போது, ஜான் வுட்டை தனது  இருப்பிடத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

நேபாள  கிராமத்தை நேரில் பார்க்கலாமே என்னும் எதிர்பார்ப்போடு ஜான்வுட்  இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு அவருடன் சென்றார்.

பள்ளி ஆசிரியர் கிராமத்து விருந்தோம்பலில் மகிழ்வித்த பிறகு அவரை  தனது பள்ளிக்கு அழைத்துச் சென்றார்.

இந்திய கிராமங்களில் பார்க்கக் கூடிய பள்ளிகளைப் போலவே அந்த பள்ளியும் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் பரிதாபமாக காட்சி அளித்தது. பின்னர் ஆசிரியர் அவரை  பள்ளியின் நூலகத்திற்கு அழைத்துச் சென்றார்.  அங்கே அதிக  புத்தகங்கள் இல்லை. சொற்பமான புத்தகங்களே இருந்தன.  அந்த புத்தகங்கள் பொக்கிஷம் போல பெட்டியில் பூட்டி வைக்கப்பட்டிருந்தன.

விடையனுப்பும்  போது, ஆசிரியர், “அடுத்தமுறை நேபாளம் வந்தால் கொஞ்சம் புத்தகங்களை கொண்டு வாருங்கள்’ என்று ஜான் வுட்டிடம் பணிவான வேண்டுகோளை வைத்தார்.

ஏற்கனவே  அந்த பள்ளியின் பரிதாப நிலையை கண்டு நிலை குலைந் திருந்த  அவர், இந்த அன்பான வேண்டு கோளை  கேட்டு நெகிழ்ந்துப் போனார்.  எளிமையான அந்த கோரிக்கையை  ஏற்று ஏதாவது செய்ய வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. 

அங்கிருந்து காட்மாண்டு நகருக்கு வந்தவுடன் முதல் வேலையாக இன்டெர்நெட் மையத்தை தேடிச் சென்ற அவர், தன்னுடைய நண்பர் களிடம் புத்தகங்களை அனுப்பி வைக்குமாறு  கோரிக்கை  வைத்தார். அவருக்கு உலகம் முழுவதும் நண்பர்கள் உண்டு.  அவர்களில் பலர் புத்தகங்களை அனுப்பினால் சில நூறு புத்தகங்கள் சேர்ந்துவிடும் என எதிர்பார்த்தார்.
ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் முதல் மாதத்திலேயே 3000 புத்தகங்கள் வந்து குவிந்துவிட்டன. தொடர்ந்து குவிந்த வண்ணம் இருந்தன.

நேபாளத்துக்கு சுற்றுலா சென்று திரும்பி ஓராண்டு ஆன நிலையில், சேகரித்த  புத்தகங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு இந்த முயற்சியில் தனக்கு துணை நின்ற தந்தையையும் அழைத்துக் கொண்டு மீண்டும் அதே பள்ளிக்குச் சென்றார். 

போக்குவரத்து  வசதி இல்லாததால் கழுதைகள் மீது புத்தக மூட்டைகளை  ஏற்றிக் கொண்டு சென்றார். பள்ளி ஆசிரியரிடம் புத்தகங்களை  வழங்கிய போது அவர் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது. அதை விட, புத்தகங்களை பார்த்த மாணவர்கள்  அவற்றை எடுத்து பாடிக்க போட்டி போட்டுக் கொண்டு  பாய்ந்தனர். பின்னர் அவர்கள் மிகுந்த ஆனந்தத் தோடு படிக்கத் தொடங்கினர்.

இந்த அனுபவத்தால் உணர்ச்சிமயமான ஜான் வுட் அன்றிரவு,  தனது தந்தையுடன் இது பற்றி பேசிக் கொண்டிருந்தார்.  உலகம் முழுவதும் இதே நிலையில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் இருக்கும் போது ஒரு பள்ளிக்கு மட்டும் உதவினால் போதுமா என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டார். அந்த நொடியில் அவர் தனது வேலையை உதறிவிட்டு  ஏழை பள்ளிகளுக்கு நூலக வசதியை  ஏற்படுத்தி தரும் முயற்சியை  முழு வீச்சில் மேற்கொள்வது என தீர்மானித்தார். கையில் இருந்த சேமிப்பை கொண்டு புத்தகங்களை  சேகரித்து, ஏழ்மையான பள்ளிகளுக்கு வழங்குவதற்காக  “ரூம்டு ரீட்’ என்னும் அமைப்பை ஏற்படுத்தினார்.

 அதன் பிறகு புத்தகங்களை சேகரித்து வழங்குவதையே முழுநேர தொழிலாக மேற்கொண்டு வருகிறார்.

இதுவரை நேபாளம், இந்தியா உள்ளிட்ட ஆறு ஆசிய நாடுகளில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  பள்ளிகளில் நூலகங்களை அமைத்து தந்திருக்கிறார். மேலும் பல நூறு நூலகங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  மேலும் கிராம மக்களுடன்  இணைந்து புதிய பள்ளிகளையும் கட்டித் தந்திருக்கிறார். 

உள்ளூர் மொழிகளில் சிறுவர் களுக்கான  நூல்கள் போதுமானவை இல்லை என்பதை புரிந்து கொண்டு அந்தந்த பகுதி  மொழிகளில் நல்ல புத்தகங்களை பதிப்பிக்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறார்.

One response to “படிப்பதற்கு ஒரு அறை இருந்தால்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s