இசைப்பறவை சிறகுகள் விரிக்க.

இது இசையின் பொற்காலமா என்று தெரியவில்லை. ஆனால் இசைப்பிரியர்களுக்கு நிச்சயம் பொற்காலம்தான். டிஜிட்டல் இசையின் வருகையும், இன்டெர்நெட்டின் ஆற்றலும் இணைந்து இசைப்பிரியர்களுக்கு எண்ணற்ற கதவுகளை திறந்து விட்டிருக்கின்றன. இந்த கதவுகள் வழியே அவர்கள் விரும்பும் இசை தடையின்றி தவழ்ந்து வருகின்றன.

இசைக்கான இணையதளங்களும் பாடல்களை டவுன்லோடு செய்யும் சாப்ட்வேர்களும் போதாது என்பது போல பிடித்தமானதாக இருக்கக்கூடிய பாடல்களை பரிந்துரை செய்யக்கூடிய இணைய சேவைகளும் அறிமுகமாகியிருக்கின்றன.

கேட்க வாய்ப்பில்லாத ஆனால் கேட்க நேர்ந்தால் உச்சிக்குளிர்ந்து போய் விடக்கூடிய பாடல்களையும், பாடகர்களையும் அறிமுகம் செய்து அசத்தும் இணைய தளங்களுக்கு இருக்கின்றன.

இவற்றை எல்லாம் பார்க்கும்போது, நிச்சயம் இசைப்பிரியர்களாக இருக்க இதை விட சிறந்த காலம் இருக்க முடியாது என்றே சொல்லத் தோன்றுகிறது. இந்த எண்ணத்தை இன்னும் கொஞ்சம் உறுதிப்படுத்தும் வகையில் புதிய சேவையாக “சாங்கிக்’ அறிமுகம் ஆகியுள்ளது.

இசைப்பிரியர்கள் தங்கள் அபிமான பாடல்களின் இசை கச்சேரி நடைபெறும் இடங்களை தெரிந்து கொண்டு நேரில் சென்று கேட்டு ரசித்து மகிழ்வதற்கான வழி காட்டும் சேவையாக “சாங்கிக்’ அமைந்துள்ளது.

“சாங்கிக்’ (songkick.com) இணையதளம் வழங்கப்படும் இந்த சேவையின் அருமையை உணர்ந்துகொள்ள, அமெரிக்கா (அ) பிரிட்டனில் இசைப்பிரியராக இருக்க வேண்டும்.

இதற்கு காரணம் இந்த சேவை முதல் கட்டமாக இந்த இரு நாடுகளில் மட்டும்தான் அறிமுகம் செய்யப் பட்டிருக்கிறது என்பது மட்டும் அல்ல. இந்த சேவையின் தேவையை உணர்ந்து பாராட்டக்கூடிய இசை கேட்பு கலாச்சாரம் அந்த நாடுகளில் உள்ள இசைப் பிரியர்களிடம் மட்டுமே இருக்கிறது என்பதும்தான். அதற்காக தம்மவர்களை குறைத்து மதிப்பிடுவ தாக குறைபட்டுக்கொள்ளக்கூடாது.

ஆயிரம்தான் சொன்னாலும், மேல் நாட்டு ரசிகர்கள் இசைக்காக உருகி வழியும் விதமே அலாதியானதுதான்! அதிலும் அபிமான பாடகர்/ இசைக் குழுக்களின் நேரடி இசை நிகழ்ச்சி களை கேட்டு ரசிப்பதில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வம் நம்மிடம் கிடையாது.

அதற்கேற்பவே, பாடகர்களும், ஊர் ஊராகச் சென்று ரசிகர்கள் மத்தியில் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பிரபல இசைக்குழுக்கள் ஒவ்வொரு நகரமாக சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்துவதும் பிரபலமாகவே இருக்கிறது.

“மியூசிக் டூர்’ என்று சொல்லப்படும் இந்த இசை சுற்றுப்பயணங்கள் நம் நாட்டில் அந்த அளவு பிரபலமாகவில்லை. இசைப்பயணம் மேற்கொண்டே முன்னுக்கு வந்த இசைக் குழுக்களும் உண்டு. இவற்றுக்கு நிகராக நம்மூரில் கச்சேரிகளை சொல்லலாம். திருவிழாக்களில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளையும் குறிப்பிடலாம். இருந்தாலும் இவை எல்லாம் இலுப்பை பூ ரகம்தான்!

அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் நேரடி இசை நிகழ்ச்சி கலாச்சாரம் ரொம்பவும் உயிர்ப்புடனே இருக்கிறது. நேரடி இசை நிகழ்ச்சிகளை கேட்டு ரசிக்க வாய்ப்பு இருப்பது போலவே அவற்றை தவற விடும் அபாயமும் தீவிர இசைப் பிரியர்களுக்கு இருக்கிறது.

அபிமான இசைக்குழுக்களின் நிகழ்ச்சி நிரலை தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பை, இணையதளங்களும், வலைப் பின்னல் தளங்களும் ஏற்படுத்தி தந்தாலும், பல நேரங்களில் நிகழ்ச்சி நடைபெறும் தகவல் கவனத்திற்கு வராமலே போய்விடலாம்.

தான் இருக்கும் நகருக்கே அபிமான இசைக்குழு வந்து சென்றிருக்கும் நிலையில் அதுபற்றிய தகவல் தெரிய வராமல், அந்நிகழ்ச்சிக்கு சொல்ல முடியாமல் போவது இசைப் பிரியர்களுக்கு ஏமாற்றத்தையும், வேதனையையும் தரக்கூடியது. இந்த ஏமாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவே “சாங்கிக்’ உதயமாகி இருக்கிறது.

இந்த தளத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டால், அதன்பிறகு குறிப்பிட்ட அந்த உறுப்பினரின் மனங்கவர்ந்த பாடகர்களும் இசைக்குழுக்களும் எப்போது அவரது நகருக்கு விஜயம் செய்தாலும் அது பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டு, நிகழ்ச்சிக்கான டிக்கெட்டும் வழங்கப்படுகிறது.

இசைக்குழுக்களின் பெயரை கூகுல் தேடியந்திரத்தில் டைப் செய்து நிகழ்ச்சிநிரலை தெரிந்துகொள்வதை விட இது சுலபமானது. மேம்பட்டது. ரசிகர்கள் தாங்கள் விரும்பி கேட்கும் பாடகர்களை குறிப்பிட்டால் போதும், அந்த பாடகர்களின் நிகழ்ச்சிகளை தவற விடாமல் பின்தொடர்வதற்கான வழியை இந்த தளம் ஏற்படுத்தி தந்து விலகுகிறது.

பிரபலமான பாடகர்கள் மட்டும் அல்லாமல், புதிய மற்றும் அறிமுகமான பாடகர்களின் நிகழ்ச்சிகளை தெரிந்துகொள்ளும் வசதியையும் சாங்கிக் அளிக்கிறது. அது மட்டும் அல்ல நமக்கு அறிமுகமானதை இசைக்குழுக்களின் நிகழ்ச்சிக்கான பரிந்துரை வசதியையும் அதன் கூடுதல் சிறப்பம்சமாக விளங்குகிறது.

இப்படி பரிந்துரைக்கப்படும் புதிய குழுக்கள் அநேகமாக மனதுக்கு பிடித்தமானதாக ஆகிவிடக்கூடிய குழுவாக இருக்கும் என்பது தான் விசேஷம். உறுப்பினர்கள் கேட்டு ரசிக்கும் பாடல்களை இனங்கண்டு கொண்டு அந்த ரசனைக்கு பொருந்தி வரக்கூடிய பாடல்கள் பற்றி பிலாக் தளங்களில் குறிப்பிடுவதை கண்டுபிடித்து, இந்த பரிந்துரைகள் மேற்கொள்ளப் படுகின்றன.

இவற்றை தவிர குறிப்பிட்ட இசைக்குழுவுக்கு உள்ள பிரபலத்தன்மையை அறியும் வசதியையும் இந்த தலம் அளிக்கிறது. இந்த தளத்தின் பக்கம் போய்விட்டால் அதன்பிறகு அபிமான இசைக்குழுவின் வருகையை தவறவிடும் வாய்ப்பு குறைவு என்பதோடு, புதிய இசைக்குழுவை அறிமுகம் செய்துகொள்ளும் வாய்ப்புகளும் அதிகம்.

பிரிட்டனைச் சேர்ந்த இயான் ஹோகர்த் என்னும் வாலிபர் தனது கல்லூரி சகாக்களோடு இணைந்து இந்த இணைய சேவையை உருவாக்கி இருக்கிறார். ஒரு முறை நண்பரோடு பேசிக்கொண்டிருந்த போது, இசைக்குழுவின் நிகழ்ச்சிகளை தவறவிடுவது பற்றி அவர் ஏமாற்றத்தோடு குறிப்பிட்டதை கேட்க நேர்ந்தவுடன் இந்த சேவையை அளிப்பதற்கான உத்வேகம் பிறந்ததாக ஹோக்வொர்த் கூறுகிறார்.

வாரம் ஒரு முறை இசை நிகழ்ச்சிக்கு தவறாமல் செல்ல விரும்புகிறவர்களுக்கு ஏற்படக்கூடிய ஏமாற்றத்தை தவிர்த்து எல்லையில்லா இசை இன்பம் அளிப்பதை தனது கடமையாக கருதி இந்த சேவையை உருவாக்கியதாகவும் அவர் உற்சாகமாக கூறுகிறார்.

————–
link;

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s