இது கூகுல் திரைப்படம்

நடிகராக இருந்து இயக்குனராக மாறிய அமெரிக்காவின் ஜிம் கில்லீன் (பெயர் வித்தியாசமாக இருக்கிறது அல்லவா, அதில்தான் விஷயமும் இருக்கிறது) படம் ஒன்றை எடுத்திருக்கிறார்.இந்த படம் உலக மகா காவியமோ அல்லது வர்த்தக ரீதியாக மாபெரும் வெற்றிபெற்ற படமோ இல்லை. சாதாரண செய்திப்பட வகையை சேர்ந்ததுதான். ஆனால் இந்த செய்திப் படத்தை பலரும் பார்க்கக்கூடிய வகையில் மிகவும் சுவாரசியமான முறையில் அதனை எடுத்திருக்கிறார்.

இந்த செய்திப்படத்தின் உள்ளடக்கமும், அது எடுக்கப்பட்ட விதமும்தான் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த ஜிம் கில்லீனை நடிகர் என்று சொல்வதை விட, நடிகராக முயற்சித்தவர் என்றோ அல்லது முயற்சித்து தோல்வி யடைந்தவர் என்றோ கூறலாம்.

ஹாலிவுட் கனவு நிறைவேறாததால், வெறுத்துப்போன அவர் மசாஜ் செய்பவராக பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தார். இதன் நடுவேதான் அவர் கூகுலில் தன்னைத்தானே தேடும் செயலில் ஈடுபடுத்திக் கொண்டார்.

அதாவது, கூகுல் தேடியந்திரத்தில் தனது பெயரை டைப் செய்துவிட்டு, அது தரும் முடிவுகளில் தன்னைப் பற்றிய அறிமுகம் எத்தகையதாக இருக்கிறது என பார்த்துக் கொண்டிருந்தார்.

ஜிம் கில்லீனைப்போல உலகம் முழுவதும் பலர் இப்படி கூகுலில் தங்களைத்தாங்களே தேடிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு ஈகோ சர்பிங் என்று பெயரும் சூட்டப் பட்டுள்ளது. தமிழில் சொல்வதானால், தன்முனைப்புத்தேடல்.

தன்முனைப்பு தாகம் தீர்வதற்கான செயல் அல்லது நேரத்தை கொல்வதற்கான முயற்சி என்றெல்லாம் இது குறிப்பிடப்படுகிறது. என்றாலும் பலர் இந்த செயலில் ஆர்வத்தோடு ஈடுபடுகின்றனர். ஒரு சிலர் தேடலை தங்களோடு முடித்துக் கொள்ளாமல், தங்களை போன்ற பெயரைக்கொண்டவர்கள் பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள முற்படுவதும் உண்டு.

இப்படித்தான் அமெரிக்காவை சேர்ந்த ஆமி ஸ்மித் என்பவர் தன் பெயர் கொண்டவர்களை கூகுல் மூலம் தேடி சந்தித்து அதுபற்றி சுவையான கட்டுரை ஒன்றை எழுதினார்.
தற்போது கில்லீன், இதேபோன்ற செயலில் ஈடுபட்டு கூகுல் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு செய்திப்படம்ஒன்றை எடுத்திருக்கிறார்.

இந்த படம் மிகவும் சுவாரசியமாக வந்துள்ளது. இதற்கான எண்ணம் அவருக்கு ஏற்பட்ட விதமும் சுவாரசியமானதுதான். ஒருநாள் இலக்கில்லாமல் இன்டெர்நெட்டில் உலாவிக்கொண்டிருந்தபோது,உலகில் தன்னுடைய நிலையை அறிந்துகொள்ளும் உத்தேசத்தோடு கூகுல் தேடியந்திரத்தில் தனது பெயரை டைப் செய்து பார்த்தார்.

தன்னைப்பற்றிய அறிமுகம் எப்படி இருக்கிறது என தெரிந்துகொள்வதுதான் அவருடைய எண்ணம். ஆனால் அவரே சற்றும் எதிர்பாராத வகையில், அவரது பெயரில் பல ஜிம் கில்லீன்கள் இருப்பதை கூகுல் முடிவுகள் பட்டியலிட்டுக்காட்டின. அது மட்டுமல்லாமல், அவர்கள் ஒவ்வொருவரும் வேறு வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த நொடியிலேயே அவருக்கு தனது பெயரைக்கொண்டவர்கள் என்பதாலேயே அவர்கள் மீது ஒரு ஈர்ப்பு உண்டானது. அவர்களையெல்லாம் சந்தித்து பேச வேண்டும் என்ற ஆர்வமும் ஏற்பட்டது.

அடுத்த நிமிடமே, அவர்களைத்தேடி புறப்பட்டுவிட்டார். முதலில் அயர்லாந்தில் உள்ள ஜிம்கில்லீனை தேடிச்சென்றார். இப்படி கூகுல் மூலம் தனக்கு தெரிய வந்த 26 ஜிம் கில்லீன்களில் பலரை தேடிச்சென்று பார்த்தார்.

ஒவ்வொருவரிடமும் குறிப்பிட்ட சில கேள்விகளைக் கேட்டு அவர்கள் அளித்த பதில்களை பதிவு செய்துகொண்டார். இந்த காட்சிகளையெல்லாம் ஒன்றாக சேர்த்து “கூகுல்மீ’ என்னும் செய்திப்படத்தை உருவாக்கினார்.

இந்த படத்தை யூ டியூப் தளத்தின் மூலம் அவர் வெளியிட்டு பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறார். இதற்காகவென்று தனியே ஒரு இணையதளத்தையும் உருவாக்கி அதில் இந்த செய்திப்படத்தின் டிவிடிக்களையும் விற்பனை செய்வதாக அறிவித்திருக்கிறார். முகம் தெரியாத நடிகராக இருந்த அவர், இந்த முயற்சியின் மூலம் ஒரு இயக்குனராக பலருக்கு அறிமுகம் ஆகியிருக்கிறார்.

அவருடைய இந்த செய்திப்படம் சிந்தனையை தூண்டுவதாக இருப்பதாக பாராட்டப்பட்டிருக்கிறது. இன்டெர்நெட் யுகத்தில் சாத்தியமாகும் புதுமையான அனுபவத்தை இந்த முயற்சி உணர்த்துவதாக பலரும் கருதுகின்றனர்.

இந்த முயற்சியில் ஈடுபட்ட ஜிம் கில்லீனே கூட தனக்கு புதிய உலகிற்கான வாசல்கள் இதன்மூலம் திறந்துவிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். “பெயரளவில்’ மட்டுமே தொடர்புடைய அறிமுகம் இல்லாத நபர்களை சந்தித்து பேசிய அனுபவம் புதிய விஷயங்களை புரிய வைத்திருக்கிறது என்று கூறிய அவர், பெயர் என்பதன் பின்னே உள்ள முக்கியத்துவம் மற்றும் அர்த்தம் பற்றிய புரிதலும் மாறியிருக்கிறது என்கிறார்.

கில்லீனைப்போல யார் வேண்டுமானாலும் கூகுலில் சுய தேடலில் ஈடுபடலாம். ஆனால் அதற்கு பெயர் ராசி மிகவும் முக்கியம். அதவாது அந்த பெயர் மிகவும் பரவலாக வைக்கப்படும் பெயராக இருக்கக்கூடாது.

அதேநேரத்தில், யாரோ சிலர் மட்டுமே வைத்திருக்கக்கூடிய பெயராக இருக்கக்கூடாது. இரண்டுக்கும் இடைப்பட்ட அளவுக்கு இருந்தால்தான் கூகுலில் தேடி சந்தித்துப்பேசுவது சாத்தியம். ஜிம் கில்லீன் அத்தகைய பெயர்தான்.
————-
LINK;www.googlemethemovie.com

3 responses to “இது கூகுல் திரைப்படம்

  1. //ஜிம் கில்லீனைப்போல உலகம் முழுவதும் பலர் இப்படி கூகுலில் தங்களைத்தாங்களே தேடிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு ஈகோ சர்பிங் என்று பெயரும் சூட்டப் பட்டுள்ளது. தமிழில் சொல்வதானால், தன்முனைப்புத்தேடல்.//

    ஹி ஹி ஹி நான் கூட தேடி பார்த்தேன்.. 😉

    பதிவு சுவாராசியமாக இருந்தது

  2. பேரில் என்ன இருக்கு என்று நினைத்து கொண்டிருந்த எனக்கு இது ஒரு வித்தியாசமான தகவல். நன்றி.

    நேரமிருந்தால் என்னுடைய வலைபக்கத்துக்கும் வருகை தாருங்களேன்.

    http://pattaampoochi.blogspot.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s