ஸ்வீடன் சினிமாவின் குரல்

bergmanஇந்தியா என்றால் சத்யஜித் ரே. ஜப்பான் என்றால் அகிரோ குரோசோவா. அதேபோல ஸ்வீடன் என்றால் இங்க்மார்க் பெர்க்மன்.
ஸ்வீடன் திரைப்பட உலகின் அடையாளச் சின்னமாக அறியப் பட்ட பெர்க்மன் வேறு எந்த இயக்குனரை யும் விட தனது நாட்டை சர்வதேச சமூகத்தின் முன் பிரதிநிதித்துவப் படுத்த வேண்டிய பொறுப்பை தோளில் சுமந்து கொண்டிருந்தவர். இந்த சுமையை மகிழ்ச்சியுடனே ஏற்றுக்கொண்ட பெர்க்மன் ஒவ்வொரு ஸ்வீடிஷ் காரரையும் அதற்காக பெருமிதப்பட வைத்தவர்.

உலக சினிமாவின் முன்னோடிகளில் ஒருவராக கருதப்படும் பெர்க்மன் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.
ஸ்வீடன் சினிமாவின் குரலாக அந் நாட்டின் ஆன்மாவையும், கலாச்சாரத்தையும் செல்லுலாய்டில் பிரதிபலிக்கச் செய்தவராக அவர் போற்றிப் புகழப்படுகிறார்.

திரைப்படத் துறையின் உத்திகளை செழுமைப்படுத்தி தந்த பெர்க்மன் தனி நபராக ஸ்வீடன் சினிமாவை சர்வதேச தரத்துக்கு உயர்த்தி உலக சினிமா வரைபடத்தில் அந்நாட்டிற்கு மறுக்க முடியாத இடத்தை ஏற்படுத்தி தந்தவர்.

மதபோதகர் ஒருவருக்கு மகனாக பிறந்த பெர்க்மன் தன்னுடைய 19வது வயதில் வீட்டை விட்டு வெளியேறி நாடக அரங்கை நோக்கி பயணமானார்.
1944ம் ஆண்டு புகழ்பெற்ற நாடகத் தியேட்டர் ஒன்றில் இயக்குனராக சேர்ந்தார். அதே ஆண்டு தன்னுடைய முதல் திரைக்கதையை அவர் தயார் செய்தார்.

அடுத்த சில மாதங்களிலேயே அவருடைய முதல் திரைப்படமான கிரைசஸ் வெளியானது. அடுத்து அவர் இயக்கிய படங்கள் பெரிய அளவில் கவனத்தை ஈர்க்காமல் போனாலும் 1950களில் அவரது வெற்றிக்கொடி பறக்கத் தொடங்கியது. 1951ம் ஆண்டு வெளியான சம்மர் இன்டர்லியூட் மற்றும் இரண்டு ஆண்டுகள் கழித்து 1003ல் வெளியான சம்மர் அண்டு மோனிகா திரைப்படங்கள் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றன.

திரைப்படக்கலையில் அவரது மேதமையையும் இந்த படங்கள் உலகுக்கு பறைசாற்றின.

1957ம் ஆண்டு வெளியான தி செவன்த் சீல் திரைப்படம் அவரை உலகப்புகழ் பெற வைத்தது. அதன் பிறகு அவர் உலகம் பாராட்டிய பல படங்களை இயக்கியிருக்கிறார்.

தனது வாழ்க்கையில் 54 படங்களை இயக்கிய பெர்க்மன், 1982ம் ஆண்டு பேனி அண்டு அலெக்சாண்டர் படத்திற்காக ஆஸ்கர் விருதை வென்றார். சிறந்த வெளிநாட்டுப் படப்பிரிவில் இந்த படம் ஆஸ்கரை தட்டிச்சென்றது.

திரைப்பட மேதைகளில் ஒருவராக சர்வதேச அளவில் போற்றப்படும் பெர்க்மன் உண்மையில் திரைப்படத் துறையோடு நின்றுவிடவில்லை. ஸ்வீடன் நாட்டில் அவர் கால் வைக்காத கலைத்துறையே கிடையாது என்று சொல்லிவிடலாம். அத்தனை துறைகளிலும் முத்திரை பதித்தவர்.

அந்நாட்டின் கலாச்சார சின்னமாக அவர் இன்றளவும் மதிக்கப்பட்டு வருகிறார். திரைப்படங்களில் மட்டுமல்லாது நாடகம், எழுத்து என பல்வேறு துறைகளிலும் அவர் செயல்பட்டிருக்கிறார். வானொலி நாடகங்களை இயக்கியுள்ள அவர் தொலைக்காட்சிக்கும் பல படைப்புகளை வழங்கியிருக்கிறார்.

புகழ்பெற்ற நாவல்களையும் அவர் எழுதியிருக்கிறார். எனினும் திரைப்படத்துறையில் அவருடைய தனி முத்திரையைக் காணலாம்.
ஸ்வீடன் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையின் தனித் தன்மைகளை அதன் எல்லைகளுக்கு சென்று வண்ணக்காவியமாக பெர்க்மன் படைத்திருக்கிறார்.

ஸ்வீடன் ரசிகர்கள் மத்தியில் அவருடைய இரண்டு படங்கள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தின. சீன்ஸ் பிரம் ஏ மேரேஜ் திரைப்படம் ஒவ்வொரு ஸ்வீடன் தம்பதிகளாலும் பார்க்கப்பட்ட படம் என்று வர்ணிக்கப்படுகிறது.

மணவாழ்க்கையின் நுட்பங்களை விவரித்த இந்த திரைப்படம் ஸ்வீடனில் திருமணம் மற்றும் விவாகரத்து பற்றிய நாடு தழுவிய விவாதத்தை உண்டாக்கியது. பொதுவாக அவருடைய படங்கள் அதன் அதிநவீனமான தன்மையால் இளைஞர்களால் பெரிதும் விரும்பிப் பார்க்கப்பட்டன. ஆனால் இந்த திரைப்படத்தை அவரை கடுமையாக விமர்சித்து வந்த மூத்த தலைமுறையினரும் பார்த்து ரசித்தனர். அந்த அளவுக்கு ஸ்வீடன் நாட்டையே பாதித்த படம் அது.
மற்றொரு படமான தி மேஜிக் புளூட்70களின் மத்தியில் ஸ்வீடன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட போது பாதிக்கும் மேற்பட்டோர் அதனைப் பார்த்தனர்.

பெர்க்மன் பற்றி கேள்விபட்டால், அவரது படங்களை உடனடியாக பார்க்கத் தோன்றும். அந்த மேதையைப் பற்றி மேலும் விவரங்களை அறிய ஆவலாக இருக்கும். அவ்வாறாயின், பெர்க்மனுக்காக அமைக்கப்பட்டுள்ள ingmarbergman.se இணைய தளத்துக்கு சென்று பார்க்கலாம்.
ஒரு திரைப்பட இயக்குனரின் இணையதளம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய அளவுக்கு சிறப்பாக இருக்கும் இந்த தளம் பெர்க்மன் பற்றி மிகச்சரியான அறிமுக களஞ்சியமாக விளங்குகிறது.

அவருடைய திரைப்படங்கள், எழுத்துக்கள், நாடகங்கள், தொலைக் காட்சி தொடர்கள், திரைக்கதைகள் என அனைத்தும் தனித்தனி பகுதியில் அழகாக தொகுக்கப்பட்டுள்ளன. அவருடைய படங்கள் எங்கெல்லாம் திரையிடப்படுகின்றன. டிவிடியாக எவையெல்லாம் கிடைக்கின்றன போன்ற தகவல்களும் தளத்தில் மின்னிக்கொண்டிருக்கின்றன.

அதோடு பெர்க்மன் தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகள் தளத்தின் முகப்பு பக்கத்தில் தவறாமல் இடம்பெற்று தளத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது

————-

link;

2 responses to “ஸ்வீடன் சினிமாவின் குரல்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s