ஒரு இந்திய தேடியந்திரம்

ஒரு வெற்றிகரமான இந்திய தேடியந்திரம் என்பது ஒரு இந்திய கனவாகவே இருக்கிறது.  இந்தியத் தன்மையோடு விளங்கும் குருஜி டாட் காமை ஓரளவு வெற்றி பெற்ற இந்திய தேடியந்திரம் என்று கூற முடியும் என்றாலும் இன்றளவும் கூகுலே இந்தியர்கள் விரும்பி நாடும் முதன்மை தேடியந்திரமாக தொடர்கிறது.
யவுபாவால் இந்த குறையை போக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் இந்திய தேடியந்திரம் எனும் பெருமையோடு அது அறிமுகமாகி இருக்கிறது. அது மட்டுமல்ல உலகிலேயே பாதுகாப்பான முதல் தேடியந்திரம் என்றும் யவுபா தன்னை வர்ணித்துக்கொள்கிறது.
இன்டர்நெட்டில் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது பற்றிய கவலையும் விழிப்புணர்வும் அதிகரித்து வரும் நிலையில் யவுபா அறிமுகமாகி இருக்கிறது. பொதுவாக எல்லா புதிய தேடியந்திரங்களும் சொல்லக்கூடியது போல இன்டர்நெட்டில் தகவல்கள் தேடப்படும் விதத்தை மாற்றி அமைக்கும் திறன் கொண்டதாக யவுபா தன்னை வர்ணித்துக்கொள்கிறது.  ஆனால் பத்தோடு ஒன்னு என்று இந்த தேடியந்திரத்தை புறந்தள்ளி விட முடியவில்லை .
உண்மையிலேயே வித்தியாசமானது என்று சொல்லக்கூடிய மூன்று முக்கிய அம்சங்களோடு இந்த தேடியந்திரம் அமைந்துள்ளது. அவற்றில் முதல் அம்சமான உலகின் முதல் பாதுகாப்பான தேடியந்திரம் என்ற பட்டத்தை சுயமாக சூட்டிக்கொள்ள வைத்திருக்கிறது.
பாதுகாப்பான தேடியந்திரம் என்பதை இணையவாசிகளுக்கான பாதுகாப்பான தேடியந்திரம் என்று புரிந்துகொள்ளலாம். அதாவது இணையவாசிகளின் தேடல் தடத்தை எந்த விதத்திலும் பதிவு செய்துகொள்ளாமல்  இருக்கும் தேடியந்திரம். இன்டர்நெட்டை எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளை பார்க்கும்போது இது மிகவும் முக்கியமானது.
கூகுலே உள்ளிட்ட எல்லா தேடியந்திரங்களுக்கும் ஒரு கெட்டப்பழக்கம் இருக்கிறது. இணையவாசிகளின் ஒவ்வொரு தேடல் அடியையும் அவை குறித்து வைத்துக்கொள்கின்றன. யார், யார் எதனை தேடுகின்றனர், எப்படி தேடுகின்றனர் போன்ற அம்சங்களை எல்லாம் அவை பதிவு செய்து பாதுகாத்து வைக்கின்றன. இப்படி இணையவாசிகளின் தேடல் சரித்திரம் முழுவதும் தேடியந்திரங்களில் சேமிக்கப்பட்டு வருகிறது.
இணையவாசிகளின் எதிர்கால தேடல் தேவைகளை புரிந்துகொண்டு பொருத்தமான தேடல் முடிவுகளை வழங்குவதற்கு இந்த சேமிப்பு அவசியம் என்று சொல்லப்பட்டாலும் இதில் எதிர்பாராத சிக்கல்கள் இருக்கின்றன. தேடல் சரித்திரம் பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்படுவதால் தேவையில்லாத விளம்பரங்களுக்காக குறி வைக்கப்படுவதோடு உள்பட பல்வேறு வகையில் இணையவாசிகள் தாக்குதலுக்கு இலக்காகலாம். அவர்கள் பற்றிய விவரங்கள் வேறு நிறுவனங்களுக்கு விற்கப்படலாம்.
இந்நிலையில் யவுபாவோ இணையவாசிகளின் தேடல் பழக்கத்தை எந்த விதத்திலும் நாங்கள் கவனிப்பதும் இல்லை; சேமிப்பதும் இல்லை என்ற கர்வத்தோடு கூறுகிறது. மற்ற தேடியந்திரங்கள் போல இணையவாசிகளின் தேடல் சுவடுகளை மாபெரும் சர்வர் பண்ணைகளில் சேர்த்து வைக்கும் நோக்கம் தனக்கில்லை என்று உறுதிபட கூறும் இந்த தேடியந்திரம் தேடல் முடிவுகள் தொடர்பான எல்லா துறைகளையும் உடனுக்குடன் அழித்துவிடுவதாக தெரிவிக்கிறது.
எனவே யவுபாவில் நீங்கள் யார் என்ற அடையாளத்தை விட்டுச் செல்லாமலே தேடலில் ஈடுபட முடியும் என்றும் தெரிவிக்கிறது. இதன் காரணமாகவே உலகின் மிகவும் பாதுகாப்பான தேடியந்திரம் என்று யவுபா தன்னை வர்ணித்துக்கொள்கிறது.
உலகின் பாதுகாப்பான தேடியந்திரம் என்பதற்கான அத்தாட்சியாக தன்னுடைய அந்தரங்க கொள்கை விளங்குவதாக யவுபா தெரிவிக்கிறது. இணைய வாசிகளின் எந்த நடவடிக்கையையும் பின் தொடராமல் இருப்பதன் காரணமாக அதிக விளக்கங்களோ வியாக்கியானங்களோ தேவையில்லாமல் மிகச் சுருக்கமான அந்தரங்க விளக்கத்தை யவுபா தந்திருக்கிறது. மொத்தம் ஒன்பதே வார்த்தைகள் கொண்டதாக இந்த விளக்கம் அமைந்துள்ளது.
அந்தரங்க ஊடுருவலுக்காக சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் சமூக வலைப்பின்னல் தளமான பேஸ்புக்கின் அந்தரங்க விளக்க அறிக்கையானது 5 ஆயிரம் வார்த்தைகளைக்கு மேற்பட்டதாக அமெரிக்கா அரசியல் சாசனத்தை விட பெரியதாக இருப்பதாக விமர்சிக்கப்படுவதை இங்கே நினைவில் கொள்க. சொன்னதை செய்வோம் என்பதைப்போல அந்தரங்க விஷயத்தில் பேச்சளவில் மட்டுமல்லாமல் செயல் அளவிலும் யவுபா உறுதியாக நிற்கிறது. இணையவாசிகளுக்கான பாதுகாப்பு ஒருபுறம் இருக்க யவுபாவின் தேடல் உத்தி சிறந்ததாகவே இருக்கிறது.
உண்மையில் ஞானமுள்ள தேடியந்திரம்  இப்படித்தான் யவுபா தனது தேடல் சித்தாந்தத்தை குறிப்பிடுகிறது. மற்ற தேடியந்திரங்கள் போல் (குறிப்பாக கூகுல்) மிகப்பெரிய இணையப் பட்டியலை வைத்திருப்பதாக நாங்கள் பெருமைப்பட்டுக்கொள்ளவில்லை. அதுபற்றிய அக்கறையும் இல்லை. நாங்கள் கவலைப்படுவது எல்லாம் தேடல் புத்திசாலித்தனத்தை பற்றித்தான் என்கிறது யவுபா.
அது என்ன தேடல் புத்திசாலித்தனம்? மனிதர்களைப்போலவே தகவல்களை தேடி புரிந்துகொள்வதாகும். தேடல் பட்டியல் எத்தனை பெரியதாக இருக்கிறது என்பது முக்கியமல்ல. தேடல் முடிவுகள் எந்த அளவுக்கு பொருத்தமாக இருக்கிறது என்பதே முக்கியம். இதற்கு உதாரணமாக ஜாவா எனும் வார்த்தையை தேடிப் பாருங்கள் என்று சவால் விடுகிறது யவுபா. சராசரி தேடியந்திரங்கள் ஜாவா வார்த்தையை எதிர்கொள்ளும்போது அது இந்தோனேசியா அருகே உள்ள தீவைக் குறிக்கிறதா அல்லது பிரபலமான புரோகிராம் மொழியை குறிக்கிறதா அல்லது காப்பியை குறிக்கிறதா என பகுத்துணர முடியாமல் குழம்பிப்போய் நிற்கின்றன.
ஆனால் யவுபா இதுபோன்ற பதங்களை எதிர்கொள்ளும்போது இணையவாசி எந்த நோக்கில் தேடுகிறார் என்பதை புரிந்துகொண்டு தேடல் முடிவை முன் வைப்பதாக கூறிக்கொள்கிறது.
நம்ம ஊருக்கு ஏற்ற உதாரணத்தை சொல்ல வேண்டுமென்றால் கிரிக்கெட் என்ற வார்த்தையை டைப் செய்தால் வழக்கமான தேடியந்திரங்கள் காட்டுவது போல கிரிக்கெட்டிலும் பூச்சிக்கான முடிவு முதலில் வந்து நின்றால் கடுப்பாகி விடலாம். இந்த விஷயத்தில் யவுபா இணையவாசிகளை கவரக்கூடிய புத்திசாலித்தனத்தை கொண்டுள்ளதாக சொல்கிறது.
இதேபோல இணையவாசிகள் தங்கள் தேவை என்ன? அதனை பெறுவது எப்படி? என்பது பற்றியெல்லாம் கவலைப்பட தேவையில்லை. அதற்கான பகுத்துணரலையும் தானே பார்த்துக்கொள்வதாக யவுபா உறுதி அளிக்கிறது. கம்ப்யூட்டர் சயின்ஸில் பிஎச்டி பட்டம் பெற்ற ஆய்வாளர்கள் இதற்காக உழைத்து இணையவாசிகள் மனம் அறிந்து முடிவுகளை கொண்டு வந்து தரும் வழிமுறையை உருவாக்கி தந்திருக்கின்றனராம். எனவே நீங்கள் கிளிக் செய்தால் போதும் மற்றவற்றை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்கிறது யவுபா.
எல்லாம் சரி, யவுபாவின் தேடல் அனுபவம் எப்படி இருக்கிறது? கூகுலின் வெளிர் பின்னணியிலான முகப்பு பக்கத்தை ஒப்பிடும்போது அடர்ந்த நீல பின்னணியில் தேடல் கட்டத்தை கொண்டு இருக்கும் இதன் முகப்பு பக்கம் பளிச்சென இருக்கிறது. அதுமட்டுமல்ல இதில் தேடுவதும் சுலபமாகவே இருக்கிறது.
முதல் பாதி தேடல் கட்டத்தில் நம்முடைய குறிச்சொல்லை டைப் செய்துவிட்டு அருகே உள்ள கட்டத்தில் கிளிக் செய்தால், இணைய முழுவதுமா, தற்போதைய முடிவுகளா, புகைப்படங்களா என எந்த வகையான முடிவுகள் தேவை என்பதற்கான பட்டியல் வந்து நிற்கிறது. அந்த வகையில் இது மிகவும் சிறப்பான ஏற்பாடு.
டெல்லி மற்றும் பெங்களூரில் உள்ள ஐஐடி, அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலை மற்றும் எம்ஐடி பல்கலை ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட 25 ஆண்டு கால ஆய்வு மற்றும் இந்த திட்டத்திற்கான 3 ஆண்டு கால உழைப்பின் பலன் என்று யவுபா தன்னைப் பற்றி குறிப்பிடுகிறது.  இந்தியாவில் மிகச் சிறந்த தேடியந்திரமாக உருவாவது மட்டுமல்ல, அகில உலகிலும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பது இதன் இலக்காம்.

————

http://www.yauba.com/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s