டிவிட்டர் கட்டளை கேட்டு நடப்பேன்

ஒரு வெப் கேமை வைத்துக்கொண்டு என்னவெல்லாம் செய்ய முடியும் என்று நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.
.
அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பெரேஸ் என்பவர் “என் வாழ்க்கை உங்கள் கையில்’ என்று சொல்லி, இணையவாசிகள் கட்டளைப்படி நடந்து இந்த காட்சிகளை வெப் கேம் மூலம் படம் பிடித்து தன்னுடைய இணைய தளத்தில் ஒளிபரப்பி வருகிறார். இந்த உண்மையான சோதனை முயற்சிக்கு “டேவிட் ஆன் டிமாண்ட்’ என பெயரிட்டு இருக்கிறார்.

தங்கள் சித்தம் என் பாக்கியம் என்று சொல்வது போல டேவிட்டும் இணைவாசிகளின் டிவிட்டர் கட்டளைகளை ஏற்று நடந்து வருகிறார். அதாவது டிவிட்டர் செய்தி மூலம் அவருக்கு இணையவாசிகள் எந்த கட்டளை பிறப்பித்தாலும் அதனை அவர் நிகழ்த்தி காட்டுவார். தனியாகவோ, சுயமாகவோ எதனையும் செய்ய மாட்டார். எல்லாமே இணையவாசிகள் சொல்வதைத்தான் செய்வார்.

அதுதான் இந்த சோதனையின் முக்கிய அம்சமாகும். ஆறு நாட்கள் இப்படி இணையவாசிகள் சொல் கேட்டு நடப்பது என அவர் தீர்மானித்திருக்கிறார். இதற்காக இணையவாசிகள் @ டேவிட் ஆன் டிமாண்ட் எனும் டிவிட்டர் முகவரியில் அவருக்கான கட்டளைகளை சமர்ப்பிக்கலாம்.

சட்ட விரோதமாக இல்லாத எதனையும் சமர்ப்பிக்கலாம். டேவிட் அதனை நிறைவேற்றிக் காட்டுவார். நாம் சொல்வதை அவர் செய்கிறாரா என்ற சந்தேகமே வேண்டாம். காரணம் டேவிட் தன்னுடைய மூக்கு கண்ணாடியில் சின்னஞ்சிறிய வெப் கேமிராவை பொருத்தி அதன் மூலம் தனது செயல்களை படம் பிடித்து அந்த காட்சிகளை இந்த சோதனைக்காகவே அமைக்கப்பட்டுள்ள டேவிட் ஆன் டிமாண்ட் இணைய தளத்தில் ஒளிபரப்பி வருகிறார்.

இந்த தளத்தின் வலது பாகத்தில் அவருக்கான டிவிட்டர் கட்டளைகள் வரிசையாக இடம்பெற்றுக்கொண்டிருக்க இடது பக்கம் முழுவதும் அவர் ஏற்று நடந்த செயல்களின் வெப் கேம் காட்சிகள் அணிவகுத்து நிற்கின்றன. அவற்றை கிளிக் செய்தால் டேவிட்டின் நடவடிக்கைகளை பார்த்து ரசிக்கலாம்.

எதற்காக இந்த பரிசோதனை? கவனத்தை ஈர்ப்பதற்கான இன்னொரு இணைய ஸ்டண்டா இது? இணையவாசிகளிடம் தங்களது வாழ்க்கையை ஒப்படைத்து அவர்கள் சொல்வதை கேட்டு நடப்பது போன்ற பரிசோதனைகள் ஏற்கனவே இணையத்தில் அரங்கேறி உள்ளன. அந்த வரிசையில் டேவிட் இப்போது டிவிட்டர் வழி ஆணைகளுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டிருக்கிறார். 
இது கவனத்தை ஈர்ப்பதற்கான அல்லது மலிவான வகையில் பிரபலமடைவதற்கான யுக்தி அல்ல.

டிவிட்டர் யுகத்தில் விளம்பரத்துறையில் உருவாகிக்கொண்டிருக்கும் நவீன போக்கு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான முயற்சியாகும். டேவிட் அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற லியோபர்னட் எனும் விளம்பர நிறுவனத்தில் பணியாற்றுகிறார். 

விளம்பரத்துறையினரைப் பொறுத்தவரை கான்ஸ் விளம்பர விருது விழாவானது இத்துறையினருக்கான ஆஸ்கராக கருதப்படுகிறது.

விளம்பர துறையில் உள்ள ஒவ்வொருவருக்கும் இதில் பங்கேற்பது என்பது லட்சியமாகவே இருக்கும். டேவிட்டுக்கும் அந்த ஆசை இருந்தது. தயவு செய்து என்னை கான்ஸ் விழாவுக்கு அனுப்பி வையுங்கள் என்று அவர் மேலதிகாரிகளிடம் மன்றாடிய போது டேவிட் ஆன் டிமாண்ட் சோதனைக்கான யோசனையை சொல்லி இதற்கு ஒப்புக் கொண்டால் ஓகே சொல்லுவோம் என கூறியுள்ளனர். டேவிட்டும் தயங்காமல் ஒப்புக்கொண்டு வெப் கேம் பொருத்தி இருக்கிறார்.

லியோ பர்னட் நிறுவனம் நவீன மார்க்கெட்டிங் யுக்திகள் தொடர்பாக ஒரு கருத்தரங்கை நடத்த உள்ளது. டிவிட்டர் போன்ற உடனுக்குடன் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் வழிகள் வந்த பிறகு இந்த நொடியில் விளம்பரங்களை மேற்கொள்வது குறித்தும் புதுமையான வழிகளில் வாடிக்கையாளர்களோடு நேரடியாக தொடர்புகொள்வது குறித்தும் இந்த கருத்தரங்கு விவாதிக்க உள்ளது.

இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த பரிசோதனை முயற்சி.  இந்த சோதனை 6 நாட்களில் முடிந்து விடும் என்றாலும் கான்ஸ் விழாவில் பங்கேற்கும்போது அந்த அனுபவத்தையும் டேவிட் வெப் கேமில் இணைய தளம் வழியே பதிவு செய்ய இருக்கிறார்.

=========

http://davidondemand.com/

One response to “டிவிட்டர் கட்டளை கேட்டு நடப்பேன்

  1. அன்பின் சைபர் சிம்மன்

    நம்ப இயலவில்லை – இருக்கலாம் – இப்படியும் மக்கள் இருக்கிறார்களே !

    ம்ம்ம்ம்ம்

    நல்வாழ்த்துகள் சைபர்சிம்மன்
    நட்புடன் சீனா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s