ஒரு பாடகரின் டிவிட்டர் அனுபவம்

பிரபலங்களுக்கு டிவிட்டரில் பல பின் தொடர்பாளர்கள் கிடைப்பது வழக்கம்தான். ஆனால் பிரபலமாக இருப்பவர் டிவிட்டரில் ஒருவரை பின்தொடர தீர்மானித்தால் என்ன ஆகும் என்பதற்கு பாடகர் கென்யே வெஸ்டிற்கு ஏற்பட்ட அனுபவம் சுவாரஸ்யமான உதாரணம்.
ஒரு விதத்தில் வெஸ்ட்டின் மூக்குடைப்பட்டது போல் அமைந்த இந்த சம்பவம் டிவிட்டரைப் பொறுத்தவரை பிரபலங்களுக்கு ஒரு பாடம்தான்.

பிரபலங்களுக்கு மட்டுமா? டிவிட்டரில் என்ன எதிர்பார்க்கலாம் என்பதில் ரசிகர்களுக்கும் ஒரு பாடம்தான்.
இனி, என்ன நடந்தது என்பதை பார்ப்போம். கென்யே வெஸ்ட் பிரபலமான பாடகர்.

140 எழுத்துக்கள் என்னும் வரம்பிற்குள் தகவல்களை பகிர்ந்து கொள்ள உதவும் குறும்பதிவு சேவையான டிவிட்டரை பயன்படுத்த வெஸ்ட் முன்வந்தபோது அவரது ரசிகர்கள் மத்தியில் ஆமோக வரவேற்பு கிடைத்தது என்றே சொல்ல வேண்டும். அதாவது ரசிகர்கள் அவரை டிவிட்டரில் பின்தொடர லட்சக்கணக்கில் திரண்டனர். எடுத்த எடுப்பிலேயே அவருக்கு நான்கு லட்சம் பின்
தொடர்பாளர்கள் கிடைத்தனர்.

பின் தொடர்பாளர்கள் என்றால் வெஸ்ட் டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளும் தகவல்களை (தங்கள் டிவிட்டர் பதிவில் பெற்று) பின் தொடர முன் வந்தவர்கள்.

டிவிட்டர் உலகில் இந்த பின் தொடர்பாளர் கணக்கை அடிக்கடி கேட்க நேரிடலாம். பின் தொடர்பாளர்களின் அணிவகுப்பு என்பது கிட்டத்தட்ட ஒரு டிவிட்டர் நடைமுறையாகவே ஆகி விட்டது என்று சொல்லலாம்.
டிவிட்டரில் ஒரு பிரபலம் அடியெடுத்து வைக்கும் போதே இது ஆரம்பமாகி விடுகிறது.

ஏதோ வேற்று கிரகவாசி பூமிக்கு வந்திருப்பது போல ஒவ்வொரு முறை நட்சத்திரங்கள் டிவிட்டருக்குள் நுழையும் போது அவர்களின் டிவிட்டர் வருகையே ஒரு செய்தியாகி விடுகிறது. அதன் பிறகு டிவிட்டரில் அவர்களுக்கு கிடைக்கும் பின் தொடர்பாளர்களின் எண்ணிக்கை செய்தியாகிறது.

முதல் நாள் அன்றே (அ) முதல் வாரத்திலேயே இத்தனை லட்சம் பின்தொடர்பாளர்கள் கிடைத்து விட்டனர் என்ற செய்த வெளியாவதோ (அ) இந்த பிரபலம் பின் தொடர்பாளர் எண்ணிக்கையில் இவரை/அவரை மிஞ்சி விட்டார் என்று சொல்லப்படுவதோ சகஜமானது. சில நேரங்களில் இது ஏதோ போட்டியாக கூட கருதப்படலாம்.

டிவிட்டரின் மூலம் பிரபலங்களின் எண்ண பகிர்வை தெரிந்து கொள்ள ரசிகர்கள் தயõராக இருப்பது, அவர்களை பின்தொடர்பாளராக்கி அந்த எண்ணிக்கை மைல்கல்லாக மாற்றப்பட்டு பரபரப்பாக பேசப்படுவது வழக்கமாக இருக்கிறது.

இப்படி தான் பாடகர் வெஸ்ட்டும், 4 லட்சம் பின்தொடர்பாளர்களைப் பெற்று டிவிட்டர் செய்தியானார். அதன் பிறகு வெஸ்ட் தெரிந்தோ, தெரியாமலோ தானும் பின்தொடர்பாளராக தீர்மானித்தார். வெஸ்ட்டின் இந்த செயல் கொஞ்சம் புதுசுதான்.

பின் தொடர்வது என்பது எப்படி ஒரு வசதியோ அதே போல பதிலுக்கு பின்தொடர்வது என்பதும் டிவிட்டரில் உள்ள ஒரு வசதிதான்.
நம்மை யார் பின்தொடர்கின்றனரோ அவர்கள் பதிவுகளை படிக்க விரும்பினால் நாமும் அவரை டிவிட்டரில் பின்தொடரலாம்.

இதை பதில் மரியாதையாக கருதுபவர்களும் இருக்கிறார்கள். பரஸ்பர தொடர்பாக நினைப்பவர்களும் உண்டு. நீ என்னை பின்தொடர்ந்தால் நானும் உன்னை பின்தொடர்வேன் என்று எழுதப்படாத ஒப்பந்தம் செய்து கொள்பவர்களையும் பார்க்கலாம். நான் பின்தொடர்ந்தும் நீ பதிலுக்கு பின்தொடரவில்லையே என்று கோபித்து கொள்வது கூட நடக்கலாம்.

எது எப்படியோ பின் தொடர்வது என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது. ஆனால் பிரபலங்கள் என்று வரும் போது பின்தொடர்வதற்கான அர்த்தமும் கொஞ்சம் மாறி விடுகிறது.

முதல் விஷயம் பிரபலங்களை ரசிகர்கள் பின்தொடர்ந்து மொய்க்கின்றரே தவிர அவர்கள் தங்களை பின் தொடர வேண்டும் என நினைப்பதில்லை. அப்படி பின்தொடர்ந்தால் தாங்கள் அதிர்ஷ்டம் செய்தவர்களாக நினைத்து அகமகிழ்ந்து போய் விடுவார்கள். அது மட்டுமல்ல ஒரு பிரபலம் வேறு யாரை எல்லாம் பின் தொடர்கிறார் என்பது முக்கியத்துவம் பெற்றதாகி விடுகிறது. சக நட்சத்திரத்தையே போட்டியாக கருதப்படுபவரை ஒரு நட்சத்திரம் பின்தொடர முன்வந்தால் அது கவனிக்கப்பட்டு செய்தியாகி விடுகிறது.

அதே போல ஒரு நட்சத்திரம் குறிப்பிட்ட ஒரு ரசிகரை பின்தொடரும் போது அதுவே மிகப் பெரிய அங்கீகாரமாகி விடுகிறது.
நட்சத்திரங்கள் இந்த அங்கீகாரத்தை ரசிகர்களுக்கு தரும் பரிசாக கூட நினைக்கலாம். தவிர ஒரு நட்சத்திரம் தன்னை பின்தொடரும் லட்சக்கணக்கானவர்களையும் பின் தொடர வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அதனால் அதிக பயனும் விளையப் போவதில்லை.

டிவிட்டருக்கு வரும் அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் ஒரு பின்தொடர்பாளர் கிடைத்தவுடன் அவரை பதிலுக்கு பின்தொடர்பாளராக சேர்த்துக் கொள்ள தயாராக இருக்கின்றனர். அவரது கருத்துக்களை தெரிந்து கொள்வதற்கான ஆர்வம் என்பதை விட ஆதரவாளர்களை பெருக்கி கொள்ளும் நோக்கமே இதன் அடிப்படை என்பதை சுலபமாக புரிந்து கொள்ளலாம்.

ஒரு சில பிரபலங்கள் தங்களுக்கென சில நூறு பின்தொடர்பாளர்களை சேர்த்துக் கொள்கின்றனர். இவர்களில் ரசிகர்களும் இருக்கலாம். ரசிக நண்பர்களாகவும் இருக்கலாம்.

பல பிரபலங்கள் யாரையுமே பின்தொடர்வதில்லை. இதனை நட்சத்திர கர்வம் என்றும் சொல்லலாம். பிரபலங்களின் யதார்த்தம் என்றும் புரிந்து கொள்ளலாம்.

பிரபலங்களை ரசிகர்கள் பின் தொடர்வது இயல்பாக இருப்பது போல பிரபலங்கள் பின்தொடர்வது அத்தனை இயல்பாக இல்லை. இந்த பின்னணியில் எவரையுமே பின் தொடராத ஒரு நட்சத்திரம் ஒரு குறிப்பிட்ட ரசிகரை பின்தொடர்பாளராக ஆக்கி கொண்டால் அதற்கு முக்கியத்துவம் ஏற்படுத்தவே செய்யும்.

டிவிட்டரில் நான்கு லட்சம் பின்தொடர்பாளர் படையை பெற்றிருந்த பாடகர் கென்யே வெஸ்ட் பதிலுக்கு யாரையும் பின்தொடராத நிலையில் தனக்கான முதல் பின்தொடர்பாளரை தேர்வு செய்து அறிவித்தார். அப்போது ஆரம்பமானது டிவிட்டர் நாடகம்.

ஒரு ரசிகரை பின் தொடர வேண்டும் என்ற எண்ணம் பாடகர் கென்யே வெஸ்ட்டிற்கு எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. அவரது டிவிட்டர் பதிவை பார்க்கும் போது யாரை பின்தொடர்வது, எதற்காக பின் தொடர்வது என்ற யோசனை எல்லாம் இல்லாமல் சீட்டு குலுக்கிப் போட்டு ஒருவரை தேர்வு செய்தது போலவே இருந்தது.

ஸ்டீபன் ஹோம்ஸ் என்ற ரசிகர் தான் இப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அதிர்ஷ்டசாலி. காவென்ட்ரி நகரைச் சேர்ந்த ஹோம்ஸ் தனது அபிமான பாடகர் வெஸ்ட் டிவிட்டரில்
அடியெடுத்து வைத்தது தெரிந்ததுமே அவரது பின்தொடர்பாளராக சேர்ந்து விட்டார். வெஸ்ட்டின் குறும் பதிவுகளை ஆர்வத்தோடு படித்து வந்த ஹோம்ஸ் பாடகர் வெஸ்ட்டிடம் டிவிட்டர் கேள்வி ஒன்றையும் ஆர்வத்தோடு கேட்டிருந்தார்.

வெஸ்ட் தனது வைர பல்லுக்கு எந்த பற்பசையை பயன்படுத்துகிறார் என்பதுதான் அந்த கேள்வி?
வெஸ்ட் இந்த கேள்விக்கு பதில் தந்தாரோ இல்லையோ ஹோம்சை தனது பின்தொடர்பாளராக ஆக்கிக் கொண்டார். அவ்வளவுதான் டிவிட்டர் உலகில் இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தி ஹோம்சை பிரபலமான ரசிகராக மாற்றி விட்டது.

ஆயிரத்தில் ஒருவன், லட்சத்தில் ஒருவன் என்பதைப் போல் நான்கு லட்சத்தில் ஒருவரல்லவா அவர்.

மற்ற 3 லட்சத்து 99,999 ரசிகர்களுக்கும் அவர் மீதுலேசான பொறாமை கூட ஏற்பட்டிருக்கலாம். பாடகர் வெஸ்ட்டால் பின்பற்றப்படும் ஒரே ரசிகர் என்றும் அடையாளம் ஹோம்சை பற்றி பலரையும் பேச வைத்தது.

பல ரசிகர்கள் அவரை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். சிலர் ஸ்லாகித்தனர். சிலர் திட்டவும் செய்தனர்.
ஒரு ரசிகர் தனது பட டிரைவரை பார்த்து கருத்து சொல்ல முடியுமா என கேட்டிருக்கிறார். இன்னொருவர் தான் மெட்டு போட்ட பாடலை அனுப்புவதா என கேட்டிருந்தார். இன்னும் சிலர் ஒரு படி மேலே சென்று வெஸ்ட் பின்தொடர்பவரை நாமும் பின் தொடர்வோம் என்று ஹோம்ஸின் பின்தொடர்பாளர் பட்டியில் சேர்ந்து விட்டனர். ஒரு சில நாட்களில் இப்படி 4 ஆயிரம் பேர் ஹோம்சின் பின்தொடர்பாளராகி விட்டனர்.

ஹோம்ஸ் இந்த திடீர் புகழால் திக்குமுக்காடிப் போனார்.
பாடகர் வெஸ்ட் தன்னை பின்தொடர்கிறார் என்றதுமே அவரது ரசிகரான ஸ்டீபன் ஹோம்சுக்கு  ஒரு வித பதட்டம் உண்டாகி விட்டது.
இதுவரை டிவிட்டர் பதிவுகளை வெயிடுவது குறித்து அதிகம் யோசிக்கவில்லை. மனதில் பட்டதை பேசுவதைப்போல  இஷ்டத்திற்கு டிவிட்டரில் பதிவுகளை வெளியிட்டு வந்தார்.

ஆனால்  இப்போது நிலைமை மாறி விட்டது.  பாடகர் வெஸ்ட் தன்னை பின்தொடர்வது தெரிந்ததுமே. அவருக்கு சுவாரஸ்யம் அளிக்கக் கூடிய வகையில் பதவிட வேண்டுமே என்ற கவலை பற்றிக் கொண்டது. இது இயல்பானது தானே. நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஒருவர் தன்னுடைய பதிவுகளை படிக்க இருக்கிறார் என்று தெரிந்த உடன், பதிவுகளும் அந்த அளவுக்கு நட்சத்திர அந்தஸ்து மிக்கதாக இருக்க வேண்டும் என்தீற எண்ணம் ஏற்படத்தானே செய்யும்.
இந்த எண்ணம் பதட்டத்தையும் கொண்டு வரத்தானே செய்யும் ஹோம்சும் இப்படித்தான் கலவரம் அடைந்தார். மேலும் இந்த கவலையை டிவிட்டர் மூலமே பகிர்ந்து கொண்டார்.

பாடகர் வெஸ்ட் இந்த கவலையை ரசித்தபடி தைரியாக டிவிட் செய்யவும் என உற்சாகம் அளித்தார்.
இதனிடையே உள்ளூர் பத்திரிகை ஒன்று அவரை பேட்டி கண்டு வெளியிட்டது. தொடர்ந்து மற்ற பத்திரிகைகள் மற்றும் சர்வதேச நாளிதழ்களும் தொடர்பு கொண்டு பேட்டி கேட்டன.
இந்த கட்டத்தில் ஹோம்ஸ் வெறுத்துப் போகத் துவங்கினார். பாடகர் வெஸ்ட்டால் பின்தொடரப்படுபவர் என்னும் மகுடம் கொண்டு வந்த திடீர் புகழ் அவருக்கு ஏற்புடையதாக இல்லை. முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் எல்லாம் தன்னோடு தொடர்பு கொண்டு பேசுவதை அவர் விரும்பவில்லை.
பெரும்பாலான ரசிகர்கள் இந்த புகழை விரும்பவே செய்வார்கள். பலர் ஏங்கவும் செய்யலாம். ஆனால் ஹோம்சோ வேறு விதமாக நினைத்தார். இனியும் வேண்டாம் இந்த புகழ் என்று டிவிட்டர் பதிவு மூலம் ஒரு வேண்டுகோளை வைத்தார்.
நான் மிக சாதாரணமானவன். இந்த கவலை தனக்கு தேவையில்லை என்று எழுதியவர் ஆச்சரியப்படும் வகையில் எல்லோருமே பிரபலமாக நினைப்பதில்லை. எனவே தயவுசெய்து என்னை யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
நான் பாடகர் வெஸ்ட்டின் பாடல்களை விரும்பி கேட்டேனே தவிர அவரது தீவிர ரசிகன் எல்லாம் அல்ல என்று ஏற்கனவே அளித்த பேட்டியில் அவர் கூறியிருந்தார்.
புகழ் என்பது ஒரு போதும் தன்னை ஈர்த்ததில்லை என்றும் பிரபலங்களின் மோகம் ஒரு கலாச்சாரமாகவே இருக்கிறது என்றும் அவர் கூறியிருந்தார்.
எல்லோருமே புகழை விரும்புவதில்லை என்னும் ஹோம்சின் அடக்கமான கருத்து இசை உலகில் புகழ் பெற்று விளங்கும் வெஸ்ட்டிற்கான பதிலடியா?
என்னால் பின்தொடர தேர்வு செய்த அதிர்ஷ்டசாலி நீ என அவரால் மகுடம் சூட்டப்பட்ட ஒருவர் நான் ஒன்றும் உங்களின் தீவிர ரசிகன் என்று சொல்ல நேர்ந்தது. எதிர்பாராத திருப்பம் தானே. இதனை பாடகரின் நட்சத்திர கர்வத்தின் மீது விழுந்த அடியாக எடுத்துக் கொள்ள முடியுமா? இல்லை எல்லாமே தற்செயலானதா? எது எப்படி இருப்பினும் ரசிகர்களை பின் தொடரும் விஷயத்தில் இனி பிரபலங்கள் யோசித்தே நடந்து கொள்ள வேண்டும்.
டிவிட்டர் புதிய கலாச்சாரத்தையும், புதிய பிரச்சனைகளையும் கொண்டு வருகிறது என்பதே விஷயம்.

Advertisements

5 responses to “ஒரு பாடகரின் டிவிட்டர் அனுபவம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s