உட்கார்ந்த இடத்திலிருந்தே உளவு

இதுவரை கிரவுட் சோர்சிங் தொழில்நுட்பம் பாராட்டுதலுக்குத் தான் ஆளாகியிருக்கிறது. தற்போது இண்டர்நெட் ஐஸ் இணைய தளத்தின் மூலமாக முதல் முறையாக சர்ச்சைக்கு இலக்காகி இருக்கிறது. உண்மையில் சர்ச்சைக்கு ஆளாகி இருப்பது கிரவுட் சோர்சிங் அல்ல. இண்டர்நெட் ஐஸ் இணைய தளம் அதனை பயன்படுத்த தேர்வு செய்திருக்கும் முறையே சர்ச்சைக்கும் விமர்சனத்துக்கும் இலக்காகி உள்ளது.

இணைய விழிகள் எனும் கவித்துவமான பொருள் தரக்கூடிய பெயரோடு கூடிய இண்டர்நெட் ஐஸ் இணைய தளத்தின் செயல்பாடு ஏன் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது என்பதை பார்ப்பதற்கு முன்பாக கிரவுட் சோர்சிங் பற்றி சுருக்கமாக தெரிந்துகொள்வோம். அவுட்சோர்சிங் தெரியும். அதென்ன கிரவுட் சோர்சிங் என்று கேள்வி எழலாம்.

இணைய உலகில் தற்போது புதிய அலையாக உருவெடுத்துள்ள கூட்டு முயற்சி யின் மற்றொரு வடிவமாக கிரவுட் சோர்சிங் அமைகிறது. அதாவது ஒரு நிறுவனம் தனது செயல்பாடுகளை மற்றொரு சிறிய நிறுவனத்திடம் ஒப்படைக்கும் பணி அவுட் சோர்சிங் என்று சொல்லப்படுகிறது. இது முழுக்க முழுக்க வர்த்தக நோக்கிலானது. இதற்கு நேர்மாறாக பணிகளை இணையத்திடம் கூட்டத்தின் வசம் ஒப்படைப்பது கிரவுட் சோர்சிங் என்று சொல்லப்படுகிறது. அதாவது உலகம் முழுவதும் சிதறி கிடக்கும் இணையவாசிகளின் பங்களிப்பைகொண்டு எந்த ஒரு வேலையையும் நிறைவேற்றிக் கொள்வது என்று பொருள்.

முற்றிலும் ஜனநாயகமயமானது மற்றும் புதிய வீச்சை ஏற்படுத்தக் கூடியது என்று கருதப்படும் கிரவுட் சோர்சிங் பயன்படுத்தப்படும் விதங்களுக்கு அழகான ஆயிரம் உதாரணங்களை சொல்லலாம். கண்காணிப்பு கேமிராக்களை கண்காணிப்பதற்கும் இப்படி இணைய வாசிகளை பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளதே இண்டர்நெட் ஐஸ் இணையதளம். இதன் அடிப்படை நோக்கம் கண்காணிப்பு பணியில் இணையவாசி களின் பங்களிப்பை பயன்படுத்திக் கொள்வது என்றாலும் இதனால் ஏற்படக்கூடிய நடைமுறை சிக்கல்களே சர்ச்சையை உண் டாக்கி உள்ளது.

கண்காணிப்பு கேமிராக்களின் அவசியமும் முக்கியத்துவமும் தீவிரமாக உணரப்பட்டு வரும் காலம் இது. இதனால் விமான நிலையங் கள், ரெயில் நிலையங்கள் போன்ற பொது இடங்கள் மட்டுமல்லாது வர்த்தக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள் போன்றவற்றிலும் கண் காணிப்பு காமிராக்கள் பொருத்தப் பட்டு வருகின்றன. குற்றவாளிகளை கண்டறிய கண்காணிப்பு காமிரா கைகொடுக்கும் என்பது பரவலான நம்பிக்கை. ஆனால் இது அத்தனை எளிதல்ல. கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகும் காட்சிகளை தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும். பெரும்பாலான நேரங்களில் இந்த காட்சிகள் அலுப்பூட்டக்கூடியவவையாக பயனற்றவையாக அமைந்திருக்கும். இடையே எப்போதாவதுதான் கவனிக்கக் கூடிய சலனங்கள் பதிவாகும். அதாவது திருடர்கள் போன்ற மர்ம ஆசாமிகள் நுழைந்தால் அந்த காட்சி கவனத்திற்குரியதாக அமையும். இதற்கு தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

அரசு அமைப்புகள் மற்றும் பெரிய வர்த்தக நிறுவனங்கள் இதற்கென்றே தொழில் முறையிலான நிபுணர்களை பணிக்கு நியமித்து காமிரா காட்சிகளை கண் காணிக்கிறது. ஆனால் சிறிய நிறுவனங்களுக்கு இது சாத்தியமில்லை. இந்த குறையை போக்கும் நோக்கத்தோடு உதயமானதுதான் இண்டர்நெட் ஐஸ் அதன் செயல்பாடுகள் மற்றும் சர்ச்சைகளை நாளை பார்ப்போம். கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்க தனியே நிபுணர்களை நியமிக்கும் அளவுக்கு வசதி இல்லாத சிறிய நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு இந்த சேவையை வழங்கும் நோக்கத்தோடு உண்டாக்கப்பட்ட இண்டர்நெட் ஐஸ் இணையதளம். இந்த பொறுப்பை இணையவாசிகளின் வசம் ஒப்படைப்பதன் மூலம் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள இந்த தளம் வழி செய்கிறது. இந்த தளத்தில் உறுப்பினராக சேர்பவர்கள் அதாவது, கண்காணிக்கும் பணியை மேற்கொள்ள முன்வருபவர்களுக்கென்று, ஏதாவது இரண்டு கண்காணிப்பு கேமிரா காட்சிகள் ஒதுக்கப்படும். கேமிராவில் பதிவாகும் காட்சிகள் அனைத்தும் அவர்களுடைய கம்ப்யூட்டரில் ஒளிபரப்பாகிக்கொண்டே இருக்கும். அந்த காட்சியை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். விவகாரமாக ஏதாவது தென்பட்டால் உடனே அது பற்றி தகவல் அளிக்க வேண்டும். அந்த தகவல் இண்டர்ஐஸ் மூலமாக உரிய நிறுவனத்திற்கு தெரிவிக்கப்படும். இவ்வாறு அளிக்கப்படும் துப்புகளுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் அதிக புள்ளிகள் பெறும் இணையவாசிகளுக்கு அதற்குரிய பரிசு வழங்கப்படும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல இந்த சேவையானது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் இணையவாசிகள் ஆகிய இரு தரப்பினருக்குமே பயன் அளிக்கிறது. நிறுவனங்கள் தங்களது கேமிராவில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்கும் பொறுப்பை மற்றவர்களிடம் ஒப்படைக்க முடிகிறது. இணைய வாசிகளோ தாங்களும் ஒரு துப்பறியும் நிபுணர் போல குற்றங்களை தடுப்பதற்கான கண்காணிப்பு முயற்சியில் ஈடுபடும் திருப்தியை பெறலாம். இதற்காக அவர்கள் தனியே விசேஷமாக எதையும் செய்ய வேண்டியதில்லை. கம்ப்யூட்டரில் மற்ற வேலைகளை பார்த்துக்கொண்டே அதற்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் பின்னணியில் கேமிரா காட்சிகளை கவனித்தபடி இருக்கலாம். அப்படியே தற்செயலாக குற்றவாளிகள் நுழைவதை கண்டுபிடித்தால் போதுமானது.

இப்படி உட்கார்ந்த இடத்திலிருந்தே உளவு பார்க்கலாம். நாடு முழுவதுமுள்ள இணையவாசிகள் இந்த சேவையை வழங்க முன்வரும்போது ஒருவர் தவற விட்டாலும் கூட வேறொருவர் கண்டுபிடித்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. 24 மணி நேரமும் கண்காணித்துக்கொண்டிருக்கும் நிபுணர்கள் கூட அலட்சியமாக இருக்கும் நேரத்தில் குற்றவாளி தப்பித்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் வெவ்வேறு இடங்களில் இணையவாசிகள் கேசுவலாக கண்காணிக்கும் பணியை மேற்கொள்ளும்போது குற்றவாளிகள் தோன்றும் காட்சி கண்ணில் சிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ள நிறுவனங்கள் தங்களது கேமிரா காட்சிகளை இந்த இணைய தளத்தில் இணைக்க ஒப்புக்கொண்டால் மட்டுமே போதுமானது. கண்காணிப்பு பணியை பரவலாக்கும் இந்த சேவை முற்றிலும் புதுமையானது என்று பாராட்டப்படுகிறது. அதேநேரத்தில் இந்த சேவையின் பக்க விளைவுகள் குறித்த கவலையும் எழுந்துள்ளது. இங்கிலாந்து ஏற்கனவே கண்காணிப்பு கேமிராக்கள் அதிகம் உள்ள நாடாக விளங்குகிறது. குடி மக்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் கண்காணிக்கப்படுவது அந்தரங்கத்தின் ஊடுருவலாக கருதப்படுகிறது. ஆனால் பாதுகாப்பு கருதி இதனை பொறுத்துக்கொள்ள வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது.

இந்த அந்தரங்க ஊடுருவலை பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு கட்டத்திற்கு இண்டர்ஐஸ் எடுத்துச் சென்று விடுவதாக குற்றஞ்சாட்டப் படுகிறது. கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகும் காட்சிகளை தொழில் முறையிலான நிபுணர்கள் பார்வையிடுவது என்பது வேறு, யார் யாரோ பார்வையிடுவது என்பது வேறு. எங்கோ மூலையில் அமர்ந்திருக்கும் முகம் தெரியாத நபர்கள் வணிக வளாகம் போன்றவற்றில் நுகர்வோர் பொருட்களை வாங்கும் காட்சிகளையெல்லாம் பார்க்க முடிவது என்பது நினைத்துப் பார்க்க முடியாத விபரீதங்களுக்கெல்லாம் வழிவகுத்து விடாதா என்ற கேள்வியும் எழுகிறது. விற்பனை மையம் ஒன்றுக்கு மளிகை சாமான் வாங்கச் செல்லும் இல்லத் தலைவி ஒருவர் அந்த காட்சியை எங்கோ உள்ள ஒருவர் கண் காணித்துக்கொண்டிருப்பார் என்பதை உணர முடிந்தால் அவருக்கு எத்தகைய சங்கடம் ஏற்படக்கூடும் என்பதை நினைத்து பாருங்கள். அதுமட்டுமல்ல கேமிரா காட்சியை இணையவாசிகளில் யாராவது ஒருசிலர் பதிவு செய்து வேறுவிதமாக பயன்படுத்தக்கூடும் அல்லவா என்ற அச்சமும் எழுந்துள் ளது.

இந்த கேள்விகளும் அச்சமுமே இண்டர்நெட் ஐஸ் தளத்தை சர்ச்சைக்குரியதாக ஆக்கி இருக்கிறது. கண்காணிப்பு பணியை கிரவுட் சோர்சிங் முறையில் பகிர்ந்துகொண்டு குற்றங்களை தடுக்க உதவுவதுதான் இந்த தளத்தின் மைய நோக்கம் என்றாலும் இதன் விளைவாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது என்கின்றனர் இணைய நிபுணர்கள். இணைய தள முகவரி: http://www.interneteyes.co.uk

Advertisements

5 responses to “உட்கார்ந்த இடத்திலிருந்தே உளவு

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s