டிவிட்டர் மூலம் மலர்ந்த காதல்

டிவிட்டர் நட்பை வளர்க்கும்; வர்த்தகத்தை வளர்க்கவும் உதவும். சில நேரங்களில் காதல் மலரவும் இந்த குறும்பதிவு சேவை கைகொடுக்கும்.

கண்ணும் கண்ணும் பார்க்க வேண்டாம், பார்க், பீச் என்று சுற்ற வேண்டாம், ஒருவரை மற்றவர் கவர்ந்திழுக்க பிரத்யேகமாக எதையுமே செய்ய வேண்டியதில்லை.  டிவிட்டரில் பின் தொடர்ந்தால் போதும் காதல் மலரும்.டிவிட்டர் மூலம் காதலர்களாக மாறிய அமெரிக்காவின் கிரேடன் டிரிப் மற்றும் மேகன் பிளவர் ஜோடியே இதற்கு சாட்சி.

காணாமலே காதல், கடிதம் மூலம் காதல் என்றெல்லாம் இருப்பது போல இது டிவிட்டரில் மலர்ந்த புதுயுக காதல்.
140 எழுத்துக்களில் கருத்துக்களை பதிவிட உதவும் டிவிட்டர் சிறந்த வெளியீட்டு சாதனமாக இருப்பது பல முறை நிரூபணமாகி இருக்கிறது. வேலைவாய்ப்பினை தேடிக் கொள்ளவும் வர்த்தக தொடர்புகளை உருவாக்கிக் கொள்ளவும் கூட டிவிட்டர் உதவி வருகிறது.

டிவிட்டர் மூலமே காதலிப்பதை சொல்லி கல்யாணம் செய்து கொண்ட ஜோடியும் கூட இருக்கிறது.ஆனால் டிவிட்டர் மூலமே காதலர்களாவது சாத்தியமா?டிரிப் மற்றும் பிளவர் ஜோடியின் அனுபவத்தை பார்த்தால் இதற்கான பதில் கிடைக்கும். டிரிப் அமெரிக்காவின் போஸ்டன் நகரில் வசிப்பவர். பிளவர் பக்கத்து நாடான கனடாவில் வான்காவூர் நகரில் வசிப்பவர்.
வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் இந்த இருவரும் பார்த்துக் கொள்வதற்கான வாய்ப்பே இல்லாத நிலையில் டிவிட்டர் இவர்களை காதலர்களாக சேர்த்து வைத்தது.

டிவிட்டரில் சக டிவிட்டர்காரர்களை பின்தொடரும் வசதி இருக்கிறது. ஒருவருடைய டிவிட்டர் கணக்கு பயனுள்ள பதிவாக இருப்பதாக கருதினாலோ அல்லது சுவாரசியமாக இருப்பதாக உணர்ந்தாலோ பின்தொடரலாம். இப்படித்தான் டிரிப் மற்றும் பிளவர் ஆகிய இருவரும் பரஸ்பரம் பின்தொடர்பாளராக மாறியிருந்தனர். ஒருவரை மற்றவர் பின்தொடரும் போது அவர்களுக்குள் பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் இருக்கவில்லை. ஏதோ சுவாரசியமாக இருப்பதாக நினைத்து பின்தொடர்ந்தனர்.

டிவிட்டரில் பின்தொடரும் வசதி இருப்பது போலவே பதிவுகளை படித்து விட்டு கருத்து தெரிவிக்கும் வசதியும் உண்டு. இந்த வசதி உரையாடல் தன்மையை ஏற்படுத்தி டிவிட்டரை உயிரோட்டமிக்கதாக மாற்றுகிறது. டிரிப், பிளவருடைய குறும்பதிவுகளால் கவரப்பட்டு ஒரு வாழ்த்துச் செய்தியை தன்னுடைய கருத்தாக பதிவு செய்தார். ஒரு அருமையான குறும்பதிவு சேவையை வைத்திருப்பதற்காக பாராட்டுக்கள் என்று அவர் கூறியிருந்தார்.

இந்த டிவிட்டர் பதிவை பிளவர் கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்து விட்டார். இதனை டிரிப்பும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தொடர்ந்து பிளவரோடு டிவிட்டர் உரையாடலில் ஈடுபட்டார்.

டிவிட்டரின் இயல்புபடி இன்று காலை நல்ல காபி சாப்பிட்டேன் என்பது போன்ற தகவல்களை பகிர்ந்து கொண்டு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்கும் வகையில் அமைந்திருந்த இந்த பதிவுகள் நாளடைவில் அவர்களுக்குள் ஒரு உறவை ஏற்படுத்தியது.
டிவிட்டரில் மேலும் ஒரு வசதியும் உண்டு. கொஞ்சம் நெருக்கமாக உணர்ந்தால் அல்லது தனிப்பட்ட செய்திகளை அனுப்ப வேண்டுமென்றால் நேரடி செய்தி வசதியை பயன்படுத்தலாம்.

பிளவர் மற்றும் டிரிப் இந்த வசதியை பயன்படுத்தி அந்தரங்கமான உரையாடலில் ஈடுபட ஆரம்பித்தனர்.ஒரு கட்டத்தில் இந்த பரிமாற்றம் காதலை மலர செய்யும் அளவுக்கு உருவானது. கனடாவிலிருந்து பிளவர்தான் முதலில் காதலை வெளிப்படுத்தினார். ஆரம்பத்தில் டிரிப் அதனை நம்பவில்லை. தனக்கு 9 வயதில் மகள் இருப்பதை சொல்லி தட்டிக்கழிக்க பார்த்திருக்கிறார். ஆனால் பிளவர் உறுதியாக இருக்கவே டிரிப்பும் அவரது காதலை ஏற்றுக் கொண்டார்.

இது அத்தனையும் டிவிட்டர் பரிமாற்றம் மூலமே நிகழ்ந்தது. அதுவரை இருவரும் நேரில் பார்த்துக் கொண்டதில்லை. டிவிட்டர் பதிவுகளின் விளைவாக இருவரும் நேரில் சந்தித்துக் கொள்வதென தீர்மானித்தனர். போஸ்டன் நகரில் டிரிப் ஏற்பாடு செய்திருந்த சமூக நோக்கிலான ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிளவர் கனடாவிலிருந்து பறந்து வந்தார். டிவிட்டரில் அறிமுகமான யாரோ ஒருவரை நம்பாதே என்று அவரது அம்மா பல முறை எச்சரித்தும் பிளவர் தனது மனதை கவர்ந்த காதலனை சந்திக்க பூங்கொத்துக்களோடு போஸ்டனில் வந்து இறங்கினார்.

விமான நிலையத்தில் முதல் முறையாக இருவரும் சந்தித்தபோது இதுவரை நேரில் பார்த்ததில்லை என்பதை மீறி இருவருக்குள்ளும் ஒரு பரவசம் உண்டானது. அதுவே அவர்களது காதலை உறுதி செய்தது. டிவிட்டர் மூலம் டிரிப், ப்ளவர் ஜோடி காதலர்கள் ஆனது வியப்பை ஏற்படுத்தலாம். ஆனால் டிவிட்டர் மூலம் ஒருவரை புரிந்துகொள்வது சாத்தியமே என்று டிரிப் உற்சாகத் தோடு கூறுகிறார்.

டிவிட்டரில் ஒருவர் வெளிப்படுத் தும் கருத்துக்கள் அவர் யார், எப்படிப்பட்டவர் என்பதை உணர்த்தக் கூடியது என்பதால் நிஜ உலகில் ஏற்படுவது போலவே டிவிட்டரிலும் ஒருவரை பின்தொடரும் போது அவரை புரிந்துகொள்வதும் சாத்தியமாகும் என்கிறார் அவர். இந்த புரிதல் காதலிலும் முடியலாம்.

Advertisements

One response to “டிவிட்டர் மூலம் மலர்ந்த காதல்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s