டிவிட்டரில் கலக்கிய அமெரிக்க மேயர்

டிவிட்டர் பயன்பாட்டின் ஒரு மைல்கல் நிகழ்வு இது! 2010ல் வழக்கத்துக்கு அதிகமான பனிப்பொழிவால் அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, பனியால் முடக்கப்பட்ட நகரங்களின் மேயர்களும், அதிகாரிகளும், கடும் விமர்சனத்திற்கு இலக்கான நிலையில், நேவார்க் நகர மேயர் மட்டும் பாராட்டுக்களுக்கு ஆளாகி, பனியில் இருந்து மக்களை மீட்ட பாதுகாவலனாக புகழ் மாலைகளை சூடிக் கொண்டிருந்தார். இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன.

ஒன்று, பனிப்பொழிவில் சிக்கிய கார்களை மீட்பது, பனி மூடிய சாலைகளில் இருந்து பனியை அகற்றி பாதையை சீராக்கியது என கடமையை அவர் சரியாக செய்தார். இரண்டாவதாக, இந்த செயல்களை டிவிட்டர் மூலம் பகிர்ந்து கொண்டார் அதாவது, மற்றவர்களுக்கு பறைசாற்றிக் கொண்டார்.
|
2வது குறுக்குச் சந்தில் பனியில் சிக்கிக் கொண்டிருந்த காரை, ஊழியர்களின் உதவியோடு மீட்டு வந்தேன் என்று, உடனுக்குடன் டிவிட்டரில் தனது செயற்பாடுகளை பதிவு செய்தார். அதிகாலை ஆகிறது, இன்னமும் என் பணி முடிவுக்கு வரவில்லை, அவசர உதவிக்காக விரைந்து கொண்டிருக்கிறேன் என்று, செய்ய இருப்பதையும் பகிர்ந்து கொண்டு, ஓய்வின்றி பனியின் பாதிப்பை குறைக்கும் பணியில் தான் ஈடுபட்டு வந்ததை தனது டிவிட்டர் பின்தொடர்பாளர்களுக்கு எடுத்துரைத்தபடி இருந்தார்.

விளைவு, நேவார்க் மேயர் “கோரி புக்கர்’ நகர மக்களுக்கு உதவ எப்படி சுறுசுறுப்பாக பணியாற்றுகிறார் என அனைவரையும் பாராட்ட வைத்துவிட்டார். இதை படித்ததுமே, தனது செயல்களை அழகாக விளம்பரப்படுத்திக் கொண்ட புத்திசாலியான மேயர் என்று நினைக்கத் தோன்றும். இது ஓரளவு உண்மையே என்றாலும், கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், மக்களோடு தொடர்பு கொள்ள மேயர் புக்கர் டிவிட்டரை பயன்படுத்திக் கொண்டார் என்பதும், அதை சரியாக செய்ததால், விளம்பரம் தானாக கிடைத்தது என்பதும்தான்.

அதாவது, டிவிட்டரின் உடனடித் தன்மையை பயன்படுத்திக் கொண்டு பனியை அகற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை குறும்பதிவுகளாக்கி, தானும் நகர நிர்வாகமும் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை அவர், அவை நிகழும்போதே உணர்த்திக் கொண்டிருந்தார். உதாரணத்திற்கு பனியால் போக்குவரத்து ஸ்தம்பித்து போயிருந்த பிரதான நெடுஞ்சாலை அதிகாலை முதல் பனி அகற்றப்பட்டு, இப்போது வாகனங்கள் செல்கின்றன என ஒரு குறும்பதிவு தெரிவித்தது. இன்னொரு பதிவோ, வயதான பெண்மணி ஒருவர், தனது வீட்டின் வாயில்பகுதி முழுவதும் பனியால் மூடியிருப்பதாக தெரிவித்ததை அடுத்து, அரை மணி நேரத்தில், அவரது வீட்டு வாசலில் இருந்த பனி அகற்றப்பட்டதை தெரிவித்தது.

இதனிடையே மேயர், தான் நள்ளிரவுவரை கண் விழித்து இருந்ததையும், மதிய உணவோ, இரவு சாப்பாடோ கூட சாப்பிடாமல் டயட் கோக் மட்டுமே குடித்தபடி, மீட்பு பணிகளை முடுக்கி விட்டுக் கொண்டிருப்பதையும் பதிவு செய்தார். அது மட்டும் அல்ல, இளம்பெண் ஒருவர், தனது சகோதரி பனி பொழிவின் காரணமாக, குழந்தைக்கு தேவையான டப்பாக்கள் வாங்க கூட செல்ல முடியாமல் தவிப்பதாக டிவிட்டரில் முறையிட்ட போது, மேயர் புக்கர் உடனடியாக கடையில் டப்பாக்களை வாங்கிக் கொண்டு அந்த பெண்ணின் சகோதரி வீட்டிற்கு சென்று ஒப்படைத்து வந்ததையும் டிவிட்டரில் வெளியிட்டார்.

இன்னொரு பதிவோ, எங்கள் தெரு மிக மோசமாக இருக்கிறது என்று தெரிவித்திருந்த வாலிபருக்கு, “அருகில்தான் இருக்கிறோம். விரைவில் நானே வருகிறேன்’ என பதில் அளித்திருந்தார். பம்பரமாக சுழல்வது என்பார்களே, அப்படி ஒரு சுறுசுறுப்புடன் மேயர் புக்கர் பனி பொழிவு முடக்கிப் போட்ட மக்களுக்கு கைகொடுப்பதற்காக செயல்பட்டு வருவதை இந்த டிவிட்டர் பதிவுகள் தெளிவாக புரிய வைத்தன. அமெரிக்க நாளிதழ்களும் இந்த பதிவுகளை இனம் கண்டு, மேயரின் கடமை உணர்ச்சியையும், டிவிட்டரை அவர் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தையும் பாராட்டின.

அதிலும், நேவார்க் நகரம் அமைந்துள்ள நியுஜெர்ஸி மாகாண கவர்னர் பனிபொழிவு பற்றி கவலைப்படõமல் குடும்பத்தோடு டிஸ்னிலாண்டில் ஓய்வெடுக்க சென்றுவிட்டதை சுட்டிக் காட்டி புக்கருக்கு புகழ் மகுடம் சூட்டின. அடுத்த சில மணி நேரங்களில் சர்வதேச நாளிதழ்களும், இணையதளங்களும் அமெரிக்க நாளிதழ்களில் வெளியான செய்தியை மேற்கோள் காட்டி இவரல்லவோ “மக்கள் தொண்டர்’ என்று புக்கனை பாராட்டின. இந்த அளவுக்கு புகழ் பெறுவோம் என்பதை புக்கரே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார். சொல்லப்போனால், புக்கர் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் டிவிட்டரை பயன்படுத்தவில்லை. பனிப்பொழிவின் மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும், உடனடியாக உதவி தேவைப்படும் இடங்களை தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்கவுமே டிவிட்டரை ஒரு தகவல் சாதனமாக பயன்படுத்திக் கொண்டார். அதனால்தான், பனிபொழிவால் பாதிக்கப்பட்டவர்கள் தன்னை டிவிட்டரில் தொடர்பு கொண்டு உதவி கோரலாம் என்று தெரிவித்தார். அப்படியே மிக இயல்பாக தானும், தனது குழுவும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் பகிர்ந்து கொண்டார்.

டிவிட்டர் மூலம் தெரிவித்தால், அதே போன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த இந்த பதிவுகள் தூண்டுகோலாக அமைந்தன. ஆனால் ஒன்று, என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்று பெருமையாக சொல்லிவிட்டு, உதவி கோரியவர்களை அவர் அலட்சியப்படுத்தி விடவில்லை. எங்கெல்லாம் துரித செயல்பாடு அவசியமோ, அங்கெல்லாம் ஊழியர்களை அனுப்பி வைத்ததோடு, இயன்ற இடங்களில் தானே போய் நின்றார்.

வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்குவது போல, பனியை அகற்றும் வேலையை அவரே மேற்கொள்ளவும் செய்தார். அதனால்தான், டிவிட்டர் பதிவில் சிலர் முறையிட்ட போது, இடத்தை தெரிவியுங்கள், நானே வருகிறேன் என தெரிவித்து, கையில் பனி அகற்றும் சாதனத்தோடு விரைந்து சென்றார். கர்ப்பிணி பெண்மணி தவிப்பதாக அறிந்தபோது தனது காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். உடனடியாக உதவி செய்ய முடியாதபோது, விரைவில் ஊழியர்களை அனுப்பி வைப்பதாக உறுதி அளித்தார்.

ஆக, டிவிட்டரில் அவர் நகர மக்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு உரையாடலில் ஈடுபட்டிருந்தார். இந்த உரையாடல், மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்தது. மேயர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்று அவர்கள் கேட்கவில்லை. அவர் செய்வதை டிவிட்டரில் பார்த்துக் கொண்டிருந்தனர். செய்ய வேண்டும் என எதிர்பார்த்ததையும் டிவிட்டரின் மூலமே பகிர்ந்துகொண்டனர். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்னும் கேள்விக்கு விடை அளிக்க உதவுவதே டிவிட்டரின் அடிப்படை நோக்கம் என்னும்போது, பனி நடுவே தான் செய்த பணியை, மேயர் புக்கர் டிவிட்டர் வழியே வெளிப்படுத்தி, டிவிட்டரை மக்கள் சேவையில் இருப்பவர்கள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கான முன்னுதாரணமாக மாறியிருக்கிறார்.

Advertisements

One response to “டிவிட்டரில் கலக்கிய அமெரிக்க மேயர்

  1. While recognising the greatness of this American Mayor it is appropriate to recollect the way the Thiruvannamalai MLA celebrated his birthday in a grand manner when thousands of poor villagers in his constituancy were terribly affected by the recent torrential rains which not only inflicted heavy loss to them but most of their goats and fouls also died. Vikatan should personally bring this article to his personal notice.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s