டிவிட்டரில் சந்திப்போம்…

டிவிட்டர் உலகின் மேலும் ஒரு முதல்.

ஸ்வீடன் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் பஹ்ரைன் நாட்டு சகாவை உடனடியாக தொடர்பு கொள்ள முயன்றபோது, மற்ற சம்பிரதாயமான வழிகளை நாடாமல் டிவிட்டர் மூலம் தொடர்பு கொண்ட ஆச்சர்யமான நிகழ்வுதான் இவ்வாறு வர்ணிக்கப்பட்டது.

பல வெளியுறவுத்துறை அமைச்சர்கள், குறும்பதிவு சேவையான டிவிட்டரை பயன்படுத்தி வருகின்றனர் என்றாலும் அமைச்சர் ஒருவர் இன்னொரு நாட்டு அமைச்சரை டிவிட்டர் மூலம் தொடர்பு கொள்ள முயன்றது இதுவே முதல் முறை. அதனால்தான் இந்த நிகழ்வு டிவிட்டர் உலகில் ஆச்சர்ய அலைகளை உண்டாக்கி டிவிட்டர் பயன்பாட்டில் இன்னொரு பரிமாணம் என்று பேச வைத்தது.

உண்மையிலேயே இது ஆச்சர்யமான நிகழ்வுதான். பொதுவாக ராஜாங்க தொடர்புகள் மற்றும் அமைச்சர்கள் மட்டத்திலான கருத்து பரிமாற்றம் அவற்றுக்கென உள்ள அதிகாரபூர்வ வழிகளிலேயே நடைபெறும். ஆனால் டிவிட்டர் பயன்பாட்டில் ஆர்வமும், நம்பிக்கையும் கொண்ட ஸ்வீடன் வெளியுறவுத்துறை அமைச்சர் காரல் பில்ட், பஹ்ரைன் வெளியுறவு துறை அமைச்சரை உடனடியாக தொடர்பு கொள்ள விரும்பியபோது ராஜாங்க வழிகளில் நேரத்தை வீணடிக்காமல் அல்கலிபாவின் டிவிட்டர் பக்கத்திற்கு விஜயம் செய்து ஒரு முக்கியமான விஷயம் தொடர்பாக உங்களுடன் பேச விரும்புகிறேன் என பதிவிட்டார்.

பஹ்ரைன் இளவரசர் வெளியுறவு செயலர் வில்லியம் ஹேகை சந்தித்து பேசியது பற்றி கலிபா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதனை பார்த்த பிறகே பில்ட் அவருடன் பேச விரும்பியிருக்கிறார். அதை டிவிட்டர் மூலமே வெளிப்படுத்தவும் செய்தார்.

தனக்கான இந்த டிவிட்டர் அழைப்பை கலிபா பார்ப்பதற்கு முன்னர் பிற டிவிட்டர் பயனாளிகள் பார்த்து டிவிட்டர் மூலம் அமைச்சர் ஒருவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளாரே என்று வியந்து போய் அவர்களில் பலர் இந்த டிவிட்டர் செய்தியை ரீடிவிட் செய்தனர்.

இதை பார்த்து மேலும் பலர் வியப்பில் ஆழ்ந்து தங்கள் கருத்துக்களை வெளியிட ஒரு தகவல் தொடர்பு சாதனமாக டிவிட்டரின் சாத்தியக்கூறுகள் குறித்த சூடான விவாதமும் இணைய உலகில் அரங்கேறியது. அடுத்த சில மணி நேரத்தில் கலிபாவும் இந்த டிவிட்டர் செய்தியை பார்த்து விட்டு, நீங்கள் தொடர்பு கொண்டது மகிழ்ச்சியை தருகிறது என்று பதில் அளித்ததோடு உங்கள் டிவிட்டர் செய்தி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஸ்வீடன் அமைச்சர் கலிபாவை அவசரமாக தொடர்பு கொள்ள முயன்றது எதற்காக, அதன் பிறகு அவர்கள் என்ன பேசினார்கள்
என்து தெரியாவிட்டாலும் டிவிட்டர் மூலம் இரு அமைச்சர்களும் தொடர்பு கொண்டது, டிவிட்டர் உலகின் மைல்கல் என்றே சொல்ல வேண்டும்.
வரும் காலத்தில் மேலும் பல அமைச்சர்கள் டிவிட்டரில் இணையலாம். டிவிட்டர் மூலமே அவர்கள் உரையாடலிலும் ஈடுபடலாம்.

அறைக்குள் ரகசியமாக நடைபெற வேண்டிய பேச்சுவார்த்தை தொடர்பான எந்த தகவலையும் டிவிட்டரில் அவர்கள் பகிர்ந்து கொள்ள வாய்ப்பில்லா விட்டாலும் வழக்கமான வழிகளில் இருந்து விலகி வந்து டிவிட்டரில் பேசுவது ராஜாங்க உலகின் செயல்பாடுகளுக்கான அழகிய ஜன்னலாக அமையலாம்.இதற்கு முன்னோடியாக அமையக் கூடிய வகையில் நிகழ்ந்த இந்த டிவிட்டர் பரிமாற்றத்தில் ஈடுபட்ட பில்ட் மற்றும் அல்கலிபா ஆகிய இருவருமே ஒருவிதத்தில் டிவிட்டர் முன்னோடிகள் என்றுதான் சொல்ல வேண்டும்.

பில்ட் டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடக பயன்பாட்டில் தீவிர ஆர்வம் கொண்டவர். அவர் 1994ல் பிரதமராக இருந்தபோது அப்போதைய அதிபர் பில் கிளிண்டனை இமெயில் மூலம் தொடர்பு கொண்டார். இப்படி பிரதமர் ஒருவர் இமெயில் மூலம் மற்றொரு நாட்டுத் தலைவரை தொடர்பு கொண்டது இதுவே முதல் முறையாகும். அதே போல அல்கலிபாவும் டிவிட்டர் மூலம் தீவிரமாக இயங்கி வருபவர். பஹ்ரைன் நாட்டில் ஜனநாயக கொந்தளிப்பு ஏற்பட்டபோது அது பற்றிய தனது எண்ணங்களையும் அவர் உடனுக்குடன் டிவிட்டரில் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

2 responses to “டிவிட்டரில் சந்திப்போம்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s