புகையை மறக்க ஒரு இணையதளம்

மனம் இருந்தால் மார்க்கம் உண்டென்பது புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு பொருந்த வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. காரணம், புகை பிடிப்பவர்கள் பலருக்கும் அந்த பழக்கத்தை விட்டு விட வேண்டும் என்ற எண்ணம் அல்லது விருப்பம் இருந்தாலும் அதிலிருந்து விடுபட வழி தெரியாமலேயே தவித்திருக்கின்றனர். சிகரெட் பிடிப்பவர்களை பொறுத்தவரை விட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் போதாது. கூடுதலாக ஏதாவது தேவை.
.
அன்பான மனைவி, அழகான காதலி, நேசமிகு நண்பன் என யாராவது வலியுறுத்திக் கொண்டிருந்தால் சிகரெட்டை விட வேண்டும் என்ற எண்ணத்தை நடைமுறைப்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்த அன்பு சங்கிலியையும் மீறி பலரும் புகைபிடித்துக் கொண்டேதான் இருக்கின்றனர்.

இப்படி புகை பிடிப்பதை விடமுடியாமல் தவிப்பவர்களுக்கு இப்போது இணையம் வழியே உதவி காத்திருக்கிறது. குவிட் ஜூஸ் என்னும் இணையதளம் சிகரெட் பிடிப்பவர்கள் அந்த பழக்கத்திலிருந்து விடுபட வழி காட்டுகிறது. அடி மேல் அடி வைத்தால் அம்மிக் கல்லும் நகரும் என்று சொல்வது உண்டல்லவா, அதே போல் இந்த தளமும் தினமும் புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவதற்கு தூண்டுகோலாக விளங்கக்கூடிய தகவல்களை அனுப்பி வைக்கிறது.

அதாவது, புகை பழக்கம் எப்படி உயிர் கொல்லியாக மாறக்கூடும் என்பதை சுட்டிக்காட்டும் செய்திகள், புள்ளிவிவரங்கள், ஆய்வு தகவல்கள், மருத்துவர்களின் ஆலோசனைகள் போன்ற தகவல்களை தொடர்ச்சியாக அனுப்பிக் கொண்டே இருக்கிறது. இந்த தகவல்களோடு புகை பிடிப்பதில் இருந்து விடுபட உதவும் அக்கப்பூர்வமான குறிப்புகள் மற்றும் ஆலோசனைகளையும் அனுப்புகிறது.

இந்த சேவையை பயன்படுத்தி கொள்ள முன்வருபவர்கள் செல்போன் மூலம் அல்லது இமெயில் வாயிலாக இந்த தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். செல்போன்கள் என்றால் ஸ்மார்ட் போன்கள்தான் தேவை என்றில்லை. சாதாரண செல்போனே கூட போதுமானது. செல்தான் வேண்டும் என்றில்லை. லேண்ட் லைனில் கூட தகவல்களை பெறலாம். எஸ்எம்எஸ் வடிவில் அல்லது வாய்ஸ் மெயிலாகவும் பெறலாம்.

புகைப்பிடிப்பதால் ஏற்படக்கூடிய புதிய விளைவுகளை விளக்கும் தகவல்களை தொடர்ச்சியாக எஸ்எம்எஸ் வடிவில் பெறும்போது கையில் இருந்துகொண்டிருக்கும் சிகரெட்டை வீசி எறிந்துவிட தோன்றும் அல்லவா! அப்படி வீசிய பிறகு மறுநாள் அல்லது அதற்கு மறுநாள் மீண்டும் புகைப்பிடிக்கும் ஆர்வம் கட்டுக் கடங்காமல் ஏற்படும் போது மீண்டும் எஸ்எம்எஸ் வடிவில் எச்சரிக்கை தகவல் அல்லது ஆலோசனை குறிப்புகள் வந்து சேரும்போது, சிகரெட்டே வேண்டாம் என்று உறுதியாக இருக்க முடியும் அல்லவா.

குவிட் ஜூஸ் இணைய தளம் இதைத்தான் செய்ய முயல்கிறது. இந்த சேவை நிச்சயம் செயல்படக் கூடியதாக இருக்க வேண்டும். காரணம் இந்த இணைய தளத்தை அமைத்திருக்கும் ஜெர்மி வில்லியம்ஸ் எனும் அவரும் புகைப்பிடிக்கும் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர் தான். இந்த இணைய தளத்தை உருவாக்கும் எண்ணும் ஏற்படுவது குறித்து அவர் சுவாரஸ்யமான கதை ஒன்றை கூறியிருக்கிறார்.

தினந்தோறும் சிகரெட்டை விட்டு விடுங்களேன் என்று கெஞ்சிக் கொண்டிருந்த அவரது மனைவி புகைப்பிடிப்பதன் தீமையை விளக்கக்கூடிய செய்திகள், கட்டுரைகள், ஆய்வறிக்கை அடங்கிய காகித கட்டுகளை கொண்டு வந்து அவர் முன் போட்டு இதை படித்தாவது திருந்த பாருங்கள் என்று கூறிச் சென்று விட்டார்.

அந்த காகிதங்களில் சிலவற்றை படித்த பார்த்த வில்லியம்ஸ் உண்மையிலேயே திகைத்துப் போனார். சிகரெட் எத்தனை பெரிய உயிர் கொல்லி என்பதை விளக்கும் அந்த கட்டுரைகள் அவரை யோசிக்க வைத்தது. ஆனால் அந்த கட்டுரைகள் ஏற்படுத்திய அச்சத்தை மீறி அவற்றை தொடர்ந்து படித்து முடிக்க இயலவில்லை.

மனச்சோர்வு காரணமாக அவற்றை தூக்கி வைத்துவிட்டு வேறு வேலை பார்க்கச் சென்று விட்டார். அப்பொழுது அவருக்கு ஒரு விஷயம் புரிந்தது. சிகரெட் பிடிப்பதற்கு எதிரான விஞ்ஞான பூர்வமான தகவல்களை தெரிந்துகொள்ளும் போது, சிகரெட்டை விட்டு விட வேண்டும் என்ற எண்ணம் உண்டாகிறது. ஆனால் இந்த தகவல்கள், மனதில் தோன்றிக்கொண்டே இருந்தால்தான்
அந்த எண்ணம் செயலாக்கம் பெறுவதற்கான வாய்ப்பு உண்டு. இருப்பினும் எல்லா கட்டுரைகளையும் படித்துப் பார்க்கும் பொறுமை இல்லையே என்ற விஷயம் அவருக்கு புரிந்தது. அதன் பிறகு மீண்டும் ஒரு முறை அவர் புகைப்பிடிப்பதை விட முயன்றபோது மற்றொரு முறை அந்த கட்டுரைகளை யெல்லாம் படித்துப் பார்க்க விரும்பினார். சோதனையாக அந்த காகித கட்டை எங்கோ தவற விட்டு விட்டார்.

அந்த நேரத்தில்தான் அவருக்கு இந்த கட்டுரை மற்றும் செய்திகளில் உள்ள தகவல்களையெல்லாம் சுருக்கமாக யாராவது தனக்கு தொடர்ச்சியாக கிடைக்கச் செய்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் தோன்றியது. தனக்கு மட்டுமல்ல தன்னை போன்ற சிகரெட் அடிமைகள் எல்லோருக்குமே இத்தகைய ஒரு சேவை தேவை என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன் பயனாக இந்த சேவையை தானே ஏன் உருவாக்கக் கூடாது என்ற உத்வேகத்தோடு இமெயில், எஸ்எம்எஸ் வாயிலாக புகைப்பிடிப்பதற்கு எதிரான தகவல்களை தொடர்ச்சியாக அனுப்பி வைத்து அந்த பழக்கத்திலிருந்து விடுபட உதவும் குவிட் ஜூஸ் இணைய தளத்தை துவக்கினார்.

புகைப்பிடிப்பதை விட நினைப்பவர்கள் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். புகைப்பிடிக்காதவர்களும் தங்கள் நண்பர்களுக்கு இந்த சேவையை பரிந்துரைக்கலாம். அவர்கள் சார்பில் செல்போன் எண் அல்லது இமெயில் முகவரியை இந்த தளத்தில் சமர்ப்பித்தாலேயே போதுமானது.

சிகரெட்டிலிருந்து விடுபடுவதற்கான முகவரி: www.quitjuice.com

9 responses to “புகையை மறக்க ஒரு இணையதளம்

  1. Pingback: புகையை மறக்க ஒரு இணையதளம் « mathi's space·

  2. ஒவ்வொரு 12 நிமிடங்களுக்கு ஒன்று என புகைத்த செயின் ஸ்மோக்கர் நான். ஆனால் இன்று இல்லை.எனக்கே ஆச்சர்யமாயிருக்கிறது.விட்டு 20 வருடங்கள் ஆகிறது. எவ்வளவோ பேர் எவ்வளவோ எடுத்துசொல்லியும் கேட்டதேல்லை.இருமலோ அல்லது வேறு எந்த பாதிப்பும் அனுபவித்தது இல்லை.ஆனால் விட்டுவிட வேண்டும் என்ற வேட்கை மட்டும் இருந்துவந்தது.அந்நியர்கள் முன்னாள் மற்றும் தூங்கும்போதும் புகை பிடிப்பது இல்லை.இவை இரண்டையும் வைத்து, இரண்டு சிகராட்டின் இடையே உள்ள இடைவெளியை படிபடியாக அதிகபடுத்தி அந்த [தவிப்பிலிருந்து விடுபட்டேன். தனிமைலிருந்து முக்கியமா விடுபட்டு கூட்டத்தோடு இருந்தால் கொஞ்சம் கொஞ்சமா குறைதிடலாம். வாழ்த்துக்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s