சூப்பர் ஹிட்டான ஹாலிவுட் படங்களையும்,விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் யூடியூப் வீடியோக்களையும் மட்டும் பார்த்து ரசித்து கொண்டிருந்தால் போதுமா?ஊக்கத்தையும் உத்வேகத்தையும் அளிக்க கூடிய செய்தி படங்கள் எத்தனையோ இருக்கின்றன,அவற்றை எல்லாம் பார்த்து ரசித்தால் என்ன?
இப்படி கேட்காமல் கேட்கிறது ‘எக்ஸ்பிளோர்’ இணையதளம்.அதற்கேற்ப உலகம் முழுவதும் உள்ள உன்னதமான செய்தி படங்களையும்,நிழற்படங்களையும் பார்த்து ரசிக்க வழி செய்கிறது.
மனித வாழ்க்கையை மேம்படுத்த தங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்பணித்து கொண்ட தன்னலமற்றவர்களின் மகத்துவத்தை விளக்கும் செய்தி படங்களின் தொகுப்பாக இந்த தளம் விளங்குகிறது.அதே போல அசாதரணமாக செயல்பட்ட தனிநபர்களின் சாதனைகளை உணர்த்தும் செய்தி படங்களையும் பார்க்க வழி செய்கிறது.
மாற்றத்தை ஏற்படுத்த பாடுபடும் தனிநபர்கள்,சமூக நலனுக்காக செயல்படும் தொண்டு நிறுவனங்களை மக்களுக்கு அறிமுகம் செய்து அவர்களின் நோக்கம் குறித்த விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும் என்பதும் இந்த தளத்தின் நோக்கமாகும்.
உலகம் முழுவதும் உள்ள தொண்டு நிறுவங்களின் பணிகளை அறிமுகம் செய்து மனிதநேயம் என்பது பாரெங்கும் பொதுவானது என்பதை உணர்த்துவதும் இதன் குறிக்கோளாக அமைந்துள்ளது.இதில் இடம்பெற்றுள்ள செய்தி படங்கள் மற்றும் புகைப்படங்கள் புதிய பாடங்களாகவும் அமையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தளம் அடையாளம் காட்டும் செய்திபடங்கள் அவற்றின் உள்ளடகத்தில் மட்டும் அல்ல அவை எடுக்கப்பட்ட விதத்திலும் கூட அசாதரணமானவை.இந்த படங்கள் எல்லாமே இந்த தளத்தின் பின்னே உள்ள அமைப்பால் அவற்றை உலகிற்கு அறிமுகம் செய்யும் வகையில் எடுக்கப்பட்டவை.
அன்னென்பெர்க் என்னும் அமெரிக்க அறக்கட்டளை அமைப்பு தான் இந்த தளத்தை நிர்வகித்து வருகிறது.சார்லி வெயின்கார்ட்டன் என்னும் அமெரிக்க கொடை வள்ளல் தலைமையில் இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.
சார்லி வழக்கமான கொடை வள்ளல் அல்ல;அவரிடம் கோடி கோடியாக டாலர்களும் இருக்கின்றன.அவற்றை அள்ளி கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது.அதற்காக அவர் பணத்தை வாரி கொடுத்துவிட்டு கொடுக்கும் கடமை முடிந்தது என்று சும்மா இருந்துவிடுவதில்லை.
தன்னையும் கவரும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் செயல்படும் இடங்களுக்கு நேரில் சென்று அவர்களோடு தங்கி அங்கு நடைபெறும் அரும்பணியை நேரில் பதிவு செய்து வந்து அவற்றை வீடியோ காட்சிகளாகவும் புகைப்படங்களாகவும் ஆவணப்படுத்தி வைக்கிறார்.
இப்படி அவரது குழு நேரில் பதிவு செய்த அரும்பணிகளின் பதிவுகளை தான் இந்த தளத்தில் செய்தி படங்களாக பார்க்க முடிகிறது.
பத்திரிகை மற்றும் நாளிதழ்களில் மனித குல மேம்பாட்டிகாக அசாதரணமான முறையில் செயல்பட்டு வரும் தனிநபர்களையும் அமைப்புகளையும் அறிந்து கொண்டு பின்னர் அவர்கள் முயற்சியை ஆவணப்படுத்தும் செயலில் இக்குழுவினர் ஈடுபடுகின்றனர்.
ஆக தொண்டு நிறுவன செயல்பாட்டில் நேரடியாக பங்கேற்ற பின்னரே நிதி அளிப்பதோடு அந்த அமிப்பின் செயல்களை உலகிறகு வெளிச்சம் போட்டு காட்டும் பணியையும் சார்லியின் குழு செய்கிறது.
இப்படி உலகம் முழுவதும் சுற்றி சுழன்று நல்ல மனிதர்களையும் மகத்தான அமைப்புகளின் செயல்களையும் ஆவணப்படுத்தியுள்ளார் சார்லி.
கீரிண்லாந்தில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள பாடுபட்டு வரும் அமிப்பு,ருவாண்டாவில் கொல்லப்படும் கொரில்லாக்களை காக்க பாடுப்பட்டு வரும் அமைப்பு,மும்பையில் விலைமாதரை மீட்டு நல்வழிப்படுத்தும் பெண்மணி,சுரங்க விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வரும் அமைப்பு என்று பல்வேறு சமூக நலப்பணிகளை இக்குழு அடையாளம் காட்டியுள்ளது.
மத்திய கிழக்கில் உள்ளவர்கள் எல்லாம் தீவிரவாதிகளாக இருபார்கள்,சீனாவில் இருப்பவர்கள் எல்லாம் பேராசை பிடித்தவர்களாக இருப்பார்கள் போன்ற பொது புத்தியில் படிந்திருக்கும் தப்பான அபிப்ராயங்களை தகர்க்கவும் இந்த படங்கள் உதவும் என்ற நம்பிக்கை சார்லிக்கு உள்ளது.
இணையதள முகவரி;http://explore.org/
ஊக்கம் தரும் செய்தி ……..
பகிர்வுக்கு நன்றி-ன்னே
சூப்பர் ஹிட்டான ஹாலிவுட் படங்களையும்,விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் யூடியூப் வீடியோக்களையும் மட்டும் பார்த்து ரசித்து கொண்டிருந்தால் போதுமா?
இதைத்தான் எங்கள் அறையிலும் நண்பர் குழாமாக செய்து கொண்டிருக்கிறோம். நல்ல படங்களின் தொகுப்பை தெரிவித்ததற்கு நன்றி.