டிவிட்டர் வழி இளைத்தல்

ஒரு விதத்தில் பார்த்தால் டிவிட்டர் தற்பெருமைக்கான காரணம். டிவிட்டர் பயனாளிகள் தங்கள் அருமை பெருமைகளையும், திறமைகள் சாதகைளை எல்லாம் குறும்பதிவுகளாக பகிர்ந்து கொள்ளலாம்.
சூப்பர் ஸ்டார் படம் ரிலிசான அன்றே பார்த்து விடுவேன் என்றோ உலக நாயகனின் தசாவதாரத்தை பல முறை பார்த்திருக்கிறேன் என்றோ தினமும் டிவிட்டரில் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
இப்படி நம்மை பற்றி அலட்டுவதற்கு மட்டுமே டிவிட்டரை பயன்படுத்தினால் பின்தொடர்பாளர்கள் கிடைக்க மாட்டார்கள் என்பது வேறு விஷயம்.
ஆனால் டிவிட்டரை நம்மை பற்றி பகிர்ந்து கொள்ள பயன்படுத்தலாம் என்பதே விஷயம்.
ஆனால் அதை செய்தேன், இதை செய்தேன் என்று தம்பட்டம் அடித்து கொள்வதற்கு பதில் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதை டிவிட்டரில் தெரியப்படுத்தினால் அந்த இலக்கை அடைவதற்கான ஊக்கமும், கைதட்டலும் டிவிட்டரில்
சமீபத்தில் இருந்து கிடைக்கலாம்.
அதாவது இலக்குகளை டிவிட்டரில் பகிரங்கமாக பகிர்ந்து கொண்டால் அதற்கான பாதையில் முன்னேறிச் செல்ல பின்தொடர்பாளர்கள் கைகொடுப்பார்கள் என்பதே விஷயம்.
இதற்கு உதாரணம் தேவை என்றால் டிவிட்டர் வழியே உடல் இளைத்த பிரயான் ஸ்டெல்லரையும், கிளாரி மெக்காஸ்கில்லையும் சொல்லலாம்.
டிவிட்டர் வழியே அவர்கள் உடல் இளைத்தலில் வெற்றி பெற்ற அனுபவம், இலக்கை அடைய நினைக்கும் எல்லோருக்கும் ஊக்கம் தரும்.
உடற்பயிற்சி, உணவு தட்டுப்பாடு இரண்டும்தான் உடல் இளைப்பதற்கான வழி. அழகு (அ) ஆரோக்கிய கவலையால் உடல் பருமனை குறைக்க வேண்டும் என்ற ஊக்கமும் உத்வேகமும் வெயிட்டாக இருக்கும் பலருக்கு உண்டாவதும் இயல்புதான். அந்த வேகத்தோடு டயட் உறுதிமொழி எடுப்பார்கள். ஜிம்மில் சேருவார்கள். ஆனால் அந்த வேகமும், உற்சாகமும் எத்தனை நாள் நீடிக்கும் என்று சொல்ல முடியாது. ஜிம்முக்கு போகும் போது தான் சோம்பலாக இருக்கும். பிடித்த உணவை பார்த்தால் டயட் கட்டுப்பாடு பறந்து போகும்.
இப்படி இளைக்கும் படலம் பாதியில் நின்ற அனுபவம் பெரும்பாலானோருக்கு உண்டு. ஆரம்பித்த வேகம் குறையாமல் தொடர்ந்து உடல் இளைக்கும் பாதையில் சீராக முன்னேற என்ன வழி?
நமக்கு நாமே சபதம் செய்து விட்டு மறந்து போவதை விட டிவிட்டரில் அதனை வெளியிட்டு அதன் பிறகு ஒவ்வொரு அடியையும்டிவிட்டர்
வழியே பகிர்ந்து கொண்டால் என்ன?
ஓவர் குண்டாக இருக்கிறேன், பத்து கிலோ எடை குறைக்க திட்டமிட்டுள்ளேன் என டிவிட்டர் பகிர்ந்து கொண்டால் வாக்கு கொடுத்தது போல ஆகி விடாது? வாயை விட்டது போலவும் வைத்துக் கொள்ளலாம்.
டிவிட்டர் நண்பர்களிடம் சொல்லியாகி விட்டதே என்று தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்த கையோடு டிவிட்டரில் அந்த தகவலை பகிர்ந்து கொள்ளலாம். அப்போது ஏதோ சாதனை செய்து விட்டது போல உற்சாகமாகவும் இருக்கும். நடுவே இரண்டு நாள் ஜிம் பக்கம் போகாவிட்டால் டிவிட்டரில் வெற்றிடமாக இருக்கும். அதை தவிர்க்கவே ஜிம்முக்கு ஓடுவோம்.
நான்கு நாள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்தால் டிவிட்டர் நண்பர் ஒருவர், சபாஷ் முயற்சி தொடரட்டும் என டிவிட் செய்து உற்சாகம் தருவார்.
பிரயான் ஸ்டெல்டர் விஷயத்தில் இதுதான் நிகழ்ந்தது. 25 வாரத்திற்குள் 25 பவுண்டு எடை குறைக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்துக் கொண்ட பிரயான் இதில் தன்னையறியாமல் சுணக்கமோ, சோம்பலோ ஏற்படக் கூடாது என கருதி தனது நோக்கத்தை டிவிட்டரில் அறிவித்தார்.
எப்படியும் உணவு கட்டுப்பாட்டை விடக் கூடாது என உறுதி செய்து கொண்டவர் சாப்பிடுவது, சாப்பிட்டதும் டிவிட் செய்வது என தீர்மானித்துக் கொண்டார்.
முதல் சில நாட்கள் சாப்பாட்டின் அளவு போன்ற விவரங்களை உற்சாகமாக குறும்பதிவிட்டார். ஆனால் ஒரு வாரத்தில் அந்த உற்சாகம் குறைந்து டிவிட்டர் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. சில நாட்கள் கழித்து சொன்னபடி செய்யவில்லையே என்ற குற்ற உணர்ச்சி வாட்டவே அன்றைய தினமே உடற்பயிற்சி செய்து விட்டு அதனை டிவிட்டரில் தெரிவித்தார்.
கொஞ்ச நாட்களில் பார்த்தால் அவரது பதிவுகளை பின்தொடர கணிசமான நபர்கள் சேர்ந்திருந்தனர். அது மட்டுமல்ல, அதில் சிலர் நல்ல இலக்கு! வெற்றி பெற வாழ்த்துக்கள் என பதில் டிவிட் மூலம் செய்தி அனுப்பியிருந்தார். இன்னும் சிலர் உங்களை கைதட்டி ஊக்கப்படுத்த தயாராக இருக்கிறோம் என்று சொல்லியிருந்தனர்.
இவற்றை பார்த்த பிரயான் உற்சாகமாகி தினமும் உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்து உடற்பயிற்சி விவரங்களை பகிர்ந்து கொண்டார். இதில் சுணக்கமோ, சிக்கலோ ஏற்பட்டால் அதையும் பகிர்ந்து கொண்டார். அவரை பின்தொடர்ந்தவர்களும் கருத்து சொல்லி ஊக்கம்அளித்துக் கொண்டிருந்தனர்.
இந்த கைதட்டல்கள் அவரை தொடர்ந்து இயக்குகிறது. விரைவிலேயே 25 பவுண்ட் எடை குறைந்தார். மேலும் 25 பவுண்டு எடை குறைக்கப் போவதாக அறிவித்தார்.
உடனே பின் தொடர்பாளர் ஒருவர், உங்களை நினைத்து பெருமைபடுகிறேன் என வாழ்த்தினார். இன்னொருவர், நீங்கள் சாக்லெட்டை தொடுவதில்லை என்று படித்த போதே தம்பி ஜெயித்து விடுவார் என நினைத்தேன் என பாராட்டினார்.
பெண்மணி ஒருவரோ சபாஷ் தம்பி என பாராட்டியதோடு நானும் உங்களோடு சேர்ந்து 50 பவுண்டு குறைத்தேன் என்று தெரிவித்தார்.
வேறு சில நண்பர்களும் உங்களை பின் தொடர்ந்து நாங்களும்
உடற்பயிற்சி செய்தோம் என நன்றியோடு குறிப்பிட்டிருந்தனர்.
அதுவரை தனது உடல் எடையை வெளியிட தயங்கி கொண்டிருந்த பிரயான், இப்போது நம்பிக்கை பெற்றவராக உடல் எடையை வெளிப்படையாக அறிவித்தார். எல்லாம் டிவிட்டர் செய்த மாயம்.
இதே போலவே கிளாரி மெக்காஸ்கில்லும் டிவிட்டர் உதவியோடு உடல் இளைப்பதில் வெற்றி கண்டார்.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினராக கிளாரி, உடல் எடையை குறைக்க முற்பட்டபோது அதில் உறுதியாக இருக்க, தட்டி கொடுக்கவும், தவறினால் குட்டு வைக்கவும் நண்பர்கள் தேவை என்று நினைத்து தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த இலக்கை அறிவித்தார்.
ஏற்கனவே தனது செயல்பாடுகளை குறும்பதிவுகளாக அவ்வப்போது வெளியிட்டு வந்தவர் இப்போது உடற்பயிற்சி விவரங்களையும் சேர்த்துக் கொண்டார்.
அதன் பிறகு டிவிட்டரில் கிடைத்த ஊக்கமும், கருத்துக்களும் அவரை உற்சாகப்படுத்தின. 5 மாதங்களில் இலக்கை அடைந்து விட்டேன் என டிவிட்டர் மூலம் பெருமைபட்டுக் கொண்டார்.
டிவிட்டரில் பகிர்ந்து கொள்வதற்கேனும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றும் நிர்ப்பந்தம் அவரை இயக்கியது.
இவர்களை போலவே ட்ரூ மெக்காரி என்னும் அமெரிக்கரும், டிவிட்டர் வழியே இளைத்து காட்டியிருக்கிறார். டிவிட்டரில் தினமும் தனது உடல் எடையை வெளியிட்டு வந்தவர் 5 மாதங்களில் 60 பவுண்ட் எடையை குறைத்து காட்டினார். அது உடல் இளைக்க ஊக்கம் தேவையா டிவிட்டரில் கைகொடுக்க காத்திருக்கிறது.
உடல் இளைக்க மட்டுமல்ல, வாரம் ஒரு புத்தகம் படிக்க வேண்டும் என நினைப்பவர்கள் கூட டிவிட்டர் வழியே முயன்று பார்க்கலாம்.
மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் வாங்குவேன் என்று சபதம் போட்டு தினமும் நள்ளிரவு வரை படிக்கலாம்.
டிவிட்டரில் வானமே எல்லை!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s