செலவு கணக்கிற்கு ஒரு கேல்குலேட்டர்.

டாஸ்மார்க் பாரில் ஒரு குவாட்டரின் விலை என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காகவே ஒரு இணையதளம் இருந்தால் எப்படி இருக்கும்?

விவகாரமான வில்லங்கமான கேள்வியாக தோன்றுகிறதா?கவலைப்பட வேண்டாம்,இது குடிப்பழக்கத்தை ஆதரிக்கும் வகையில் கேட்கப்படும் கேள்வியோ அல்லது குடிப்பதை அங்கீகரிக்கும் நோக்கத்திலான கேள்வியோ அல்ல!மாறாக இந்த கேள்வியின் நோக்கமே குடிப்பழகத்தின் தீமைகளை பொருளாதார நோக்கில் கணக்கிட வைப்பது தான்.

அது எப்படி என்பதை பார்க்கும் முன் இன்னொரு சுவாரஸ்யமான இணையதளத்தை அறிந்து கொள்ளலாம்.உண்மையில் வாட் டி ஐ வொர்க் ஃபார் இட் என்னும் அந்த இணையதளம் தான் டாஸ்மார்கிற்கான விலை கணக்கு தளம் பற்றி சிந்திக்க வைக்கிறது.

இணைய கேல்குலேட்டர் வகையை சேர்ந்த இந்த தளம் அடிப்படையில் மிகவும் எளிமையானது.அடிப்படையில் என்ன மொத்தமுமே எளிமையானது தான்.

ஒரு பொருளை வாங்குவதற்கு ஒருவர் எத்தனை மணி நேரம் உழைக்க வேண்டியுள்ளது என்பதை இந்த தளம் கணக்கிட்டு சொல்கிறது.

அதாவது ஒருவர் எந்த பொருளை வாங்யிருக்கிறாரோ அந்த பொருளுக்கான விலையை இந்த தளத்தில் குறிப்பிட்டு கூடவே அவரது மொத்த வருமானம் மற்றும் வருமான வரி விவரங்களையும் குறிப்பிட்டால் அவற்றின் அடிப்படையில் அந்த பொருளை வாங்க அவர் எத்தனை மணி நேரம் உழைக்க வேண்டியிருக்கிறது என்பதை இந்த தளம் கணக்கிட்டு சொல்கிறது.

கணித பாடத்தில் பயன்படுத்தப்படும் சூத்திரங்களை போல இந்த தளமும் ஒரு செலவு கணக்கிறகான ஒரு நிரலியின் அடிப்படையில் ஒருவர் சம‌ர்பிக்கும் சம்பளம் மற்றும் வருமான வரி தகவல்களை கொண்டு குறிப்பிட்ட விலையிலான பொருளின் மதிப்பை பணத்தில் அல்லாமல் அவ‌ர்களின் உழைப்பின் அடிப்படையில் கணக்கிட்டு சொல்கிறது.

உதாரண‌த்திற்கு ஒரு புதிய செல்போனின் விலை சில ஆயிரங்களாக இருந்தாலும் அது மலிவானதா விலை அதிகமானதா என்பது அதனை வாங்குபவரின் சம்பளத்தை கொண்டு பார்க்கும் போது மலிவானதாகவோ விலை கூடுதலாகவோ தெரிய வரும்.அதாவது செல்போனின் விலை 4000 என்று பார்ப்பதைவிட பத்து நாள் சம்பளம் என்று பார்க்கும் போது அதன் மதிப்பையும் தேவையையும் இன்னும் துல்லியமாக புரிந்து கொள்ள முடியும் தானே.

பொருட்களின் மதிப்பை அதை வாங்கியவரின் சம்பாதிக்கும் திறனோடு ஒப்பிட்டு கணக்கு போட்டு சொல்லும் இந்த தளம் முதல் பார்வைக்கு வெறும் சுவாரஸ்யமாக தெரியலாம்.ஆனால் ஒவ்வொரு பொருளுக்கும் எந்த அளவுக்கு பாடுபட வேண்டியிருக்கிறது என்பதை தெரிந்து கொண்டால் அது தேவை தானா என்னும் கேள்விக்கு சரியான பதிலை பெற முடியும்.

கே.பாலசந்தர் பட பாணியில் புதிய பைக் கேட்கும் பிள்ளையிடம் அப்பா அதற்கான விலையை இந்த தளத்தில் கணக்கிட்டு எனது 489 மணி நேர உழைப்பை செலவிட்டு இதனை வாங்கிதர வேண்டுமா என்று கேட்க‌லாம்.

இல்லத்தலைவரோ அல்லது தலைவியோ ஒரு பொருளை வாங்க செல்லும் முன் அதற்கான விலையை இந்த தளத்தில் கணக்கிட்டு தங்களை பொருத்தவரை அதற்கான உணமையான விலையை தெரிந்து கொண்டு முடிவெடுக்கலாம்.

இது அமெரிக்க இணையதளம் என்பதால் அமெரிக்கர்களின் ஊதிய அடிப்படையில் செய‌ல்படுகிறது.நம்மவர்களுக்கு இந்த தளம் பயன்படாது என்ற போதிலும் இந்த கருத்தாக்கம் நம‌க்கு பயன்படும்.

நம்மூர் சம்பள கணக்கின் அடிப்படையில் இது போல பொருட்களின் விலையை
ஒருவரின் உழைப்பால மதிப்பிடக்கூடிய தளத்தை உருவாக்கி கொள்ளலாம்.

அந்த நிரலானது ஒருவரின் சம்பளம் மற்றும் வருமான வரியை மட்டும் உள்ளடக்கியிராமல் மற்ற முக்கிய குடும்ப செலவுகளையும் கருத்தில் கொண்டிருந்தால் வாங்கிய பொருளின் மதிப்பை இன்னும் சரியாக தெரிந்து கொள்ளலாம்.

இப்போது டாஸ்மார்க் கணக்கிறகு வருவோம்.ஒரு குவாட்டரின் விலை ஐம்பதோ நூறோ அது ஒரு புறம் இருக்கட்டும்,மாதம் பத்தாயிரத்துக்கு மேல் சம்பாதிக்கும் ஒருவருக்கு அது ஒரு மணி நேர சம்பளமாக இருக்கலாம்.ஆனால் தினக்கூலி ஒருவருக்கு அது ஒன்னரை நாள் சம்பளமாக இருக்கும்.

ஒவ்வொருவரின் சம்பாதிக்கும் திறனின் அடிப்படையில் செலவை கணக்கிட்டால் ஒவ்வொரு பொருளின் விலையை மனித உழைப்பின் அளவில் புரிந்து கொள்ள முடியும்.இந்த கணக்கின்படி டாஸ்மார்க் மதுவிற்கும் விலையை கணக்கிட்டு பார்த்தால் ஒவ்வொரு குவாட்டருக்கும் ஒருவர் எத்தனை மணி நேர உழைப்பை செலவிட வேண்டியிருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

இந்த கணக்கு ஒரு குவாட்டருக்கான உண்மையான விலையை புரிய வைத்து குடிப்பது தேவையா என்னும் கேள்வியை எழுப்பக்கூடும்.

எல்லாம் சரி தினமும் 200 ரூபாய் சம்பாதிப்பவர் 50 ரூ கொடுத்து குவாட்டர் வாங்கினால் தந்து கால் நாள் சம்பளஃம் அது என்பதை அறியாமால் இருப்பாரா என்று கேட்கலாம்?இருப்பினும் நமது செலவுகளையும் செயல்களையும் வேறு ஒரு அளவுகோளினை கொண்டு அளப்பதற்காக இது போன்ற சேவைகள் புதிய புரிதலை கொடுக்கவே செய்யும்/.

http://www.whatdidiworkforit.com/

4 responses to “செலவு கணக்கிற்கு ஒரு கேல்குலேட்டர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s