அசத்தலான புதிய வீடியோ சேவை ஏர்டைம்.


நேப்ஸ்டர் ஹீரோ ஷான் ஃபேனிங் இணையத்திற்கு திரும்பியிருக்கிறார்.அதுவும் எப்படி கைத்தட்டி வரவேற்க கூடிய வகையில் மகத்தான புதிய சேவையோடு வந்திருக்கிறார்.

பியர் டு பியர் என்று சொல்லப்படும் நண்பர்களிடையிலான பகிர்வு தொழில்நுட்பம் மூலம் இணையத்தில் பாடல்கள் பகிர்வதை எளிமையாக்கி இசைத்தட்டு நிறுவங்களை நடுங்க வைத்த ஃபேனிங்கின் நேப்ஸ்டர் பின்னர் காப்புரிமை வலையில் சிக்கி மூடப்பட்டது எல்லாம் பழைய கதை.

இணையத்தில் இசை பகிர்வுக்கான வாயிலை அகல திறந்து விட்ட ஃபேனிங் நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது ஏர்டைம் என்னும் புதிய சேவையை இணையவாசிகளுக்கு அறிமுகம் செய்திருக்கிறார்.

ஒரு வரியில் சொல்வதாயின் ஏர்டைம் பழைய‌ மற்றும் புதிய நண்பர்களுடன் வீடியோ மூலம் உரையாடுவதற்கான சேவை.இன்னொரு விதத்தில் சொல்வதாயின் வீடியோ வழி உரையாடலுக்கு புத்துணர்ச்சி தந்திருக்கும் சேவை.

ஏர்டைமின் அருமையை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அதனை பயன்படுத்தி பார்க்க வேண்டும்.

வீடியோ முலம் உரையாடும் வசதி ஒன்றும் புதிதல்ல தான்.இணையத்தில் வெப்கேம் வழியே உரையாடலாம்.சாட்ரவுலெட் தளம் வழியே முன்பின் தெரியாதவர்களோடு உரையாடலாம்.வீடியோ கான்பிரன்சிங் மூலம் தொழில் முறையில் உரையாடலாம்.

ஆனால் ஏர்டைமோ இந்த உரையாடலில்களில் இல்லாத நட்புறவை மையமாக கொண்டிருக்கிறது.இதற்கு காரணம் இந்த சேவை பேஸ்புக்கை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது.

ஷான் ஃபேனிங்கே கூட,இணைய உலகில் நீக்கமற நிறைந்திருக்கும் சேவையாக பேஸ்புக் உருவாகியிருக்கும் நிலையில் தான் இந்த சேவை சாத்தியாமாகியிருக்கிறது என்கிறார்.

ஆக பேஸ்புக்கின் சாவியை கொண்டே இந்த சேவையையும் பயன்படுத்த துவங்கலாம்.

அதாவது பேஸ்புக் கணக்கு மூலமே இந்த தளத்திலும் நுழையலாம்.நுழைந்த பிறகு தான் ஆச்சர்யமும் அற்புதமும் காத்திருக்கிறது.

அதற்கு முன்னர் தரமான வெப்கேம்,நேர்த்தியான மைக் மற்றும் பிளாஷ் வசதி ஆகியவற்றை உறுதி செய்து கொள்ளுங்கள்.காரணம் நீங்கள் வீடியோ உரையாடலில் ஈடுபட்டு முற்றிலும் புதிய உலகில் லயிக்கப்போகிறீர்கள்.

ஆம் ஏர்டைமில் நுழைந்த பிறகு வலது பக்கத்தில் உங்கள் பேஸ்புக் நண்பர்களின் பட்டியல் வந்து நிற்கிறது.அவர்களில் யாரை வேண்டுமானாலும் அழைத்து வீடியோ உரையாடலில் ஈடுபடலாம்.

எந்த நண்பரை உரையாடலுக்கு அழைக்கிறீர்களே அவர்களுக்கான செய்தியை டைப் செய்து அனுப்பும் வசதியும் இருக்கிறது.அவர்களும் இதற்கு பதில் அளிக்கலாம்.

நண்பர் உரையாடலுக்கு ரெடி என்றால் வீடியோ வழியே பேசத்துவங்கி விட‌லாம்.

மற்ற எந்த வீடியோ உரையாடல் களத்தையும் விட மிக அழகான மிக துல்லியமான தோற்றம் திரையில் தோன்றுகிறது.அதில் ஒரு பாதி உங்களின் வீடியோ தோற்றம் மறு பாதி உங்கள் நண்பரின் வீடியோ தோற்றம்.

உங்கள் நண்பரின் முகத்தையும் அவரது அங்க அசைவுகளையும் பார்த்து கொண்டே பேசலாம் .இதனால் நேரில் பார்த்து பேசுவது போலவே இருக்கும்.

அது மட்டும் அல்ல,இருவரும் என்ன பேசுவது என்பதை கூட தானாக தீர்மானித்து கொள்ளலாம்.

இதற்கு உதவும் வகையில் இருவரின் விருப்பங்கள்,பொது தன்மைகள்,படித்த புத்தகங்கள் பார்த்த வீடியோக்கள் போன்ற தகவல்கள் இருவரின் அறிமுக பக்கத்தில் சுட்டிக்காட்டப்படும்.அதனடிப்படையில் பேசுவதற்கும் பகிர்ந்து கொள்வதற்குமான விஷயங்கள் கிடைத்து கொண்டே இருக்கும்.

ஆக இது வெறும் வீடியோ உரையாடல் அல்ல.நட்பு செறிந்த உயிரோட்டமான உரையாடல்.

உரையாடலுக்கு அழைக்கும் நேரத்தில் நண்பர் இணையத்தில் இல்லை என்றால் வீடியோ செய்தியையும் அவருக்காக விட்டு செல்லலாம்.

சமீபத்தில் பார்த்த படம்,மனதை கவர்ந்த புத்தகம் ,நேற்று கேட்டு ரசித்த பாடல்.லேட்டஸ்ட் ரிங்டோன் என்று எத்த்னையோ விஷயங்கள் பற்றி பேசித்தீர்க்கலாம்.

இதே முறையில் புதிய நண்பர்களையும் தேடிக்கொள்ளலாம்.யாருடனாவது பேசுங்கள் என்னும் வசதி இதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.இதனை கிளிக் செய்தால் யாராவது ஒரு நபருடனான வீடியோ தொடர்பு ஏற்படுத்தி தரப்படுகிறது.அந்த நபரோடு பேசத்துவங்கலாம்.

அறிமுகம் இல்லாதவர் என்ற போதிலும் அவர் யாரோ ஒரு நபராக இருக்க மாட்டார்.அடுத்த சில நிமிடங்களிலேயே அவரை நீங்களும் உங்களை அவரும் அறிமுகம் செய்து கொண்டு பரஸ்பட்ம் ஆர்வம் உள்ள விஷயங்களை தெரிந்து கொண்டு பொதுவான ஆர்வத்தின் அடிப்படையில் நண்பர்களாகி விடலாம்.

அதவது இருவருக்கும் அறிமுகமான நண்பர் பரஸ்பரம் அறிமுகம் செய்து வைத்தது போல ஒருவித நட்புண‌ர்வோடு அறிமுகமாக இணக்கமாகலாம்.

புதிய நண்பர்களை தேர்வு செய்யும் போதே கூட இருவருக்கும் இடையிலான பொதுவான ரசனையை பரிசிலித்து பார்த்து கொள்ளலாம்.

பேஸ்புக் மூலம் அறிமுகமாகும் நண்பர்களோடு நெருக்கமாவதை விட இப்படி வீடியோ உரையாடலில் ஏற்படும் நட்பு நெருக்கமானதாக இருக்க வாய்ப்புள்ளது.

இந்த வீடியோ உரையாடல் வசதியை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.ஒரே வீடியியோவை பார்த்து ரசித்து அது பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொள்ள பயன்ப‌டுத்தலாம்.

விரைவில் குழு உரையாடல் மற்றும் நண்பர்கள் இசையை சேர்ந்து கேட்பது போன்ற வசதிகளும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாம்.அப்போது இந்த சேவை இன்னும் களை கட்டும்.

பேஸ்புக்கையும் வீடியோவையும் இணைத்து நட்பிலும் உற‌விலும் புதிய அத்யாயத்தை துவக்கி உள்ளது இந்த ஏர்டைம்.

இணையதள முகவரி;https://www.airtime.com/

3 responses to “அசத்தலான புதிய வீடியோ சேவை ஏர்டைம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s