சாம் பிட்ரோடாவின் டிவிட்டர் சந்திப்பு;ஒரு அலசல்!.

சாம் பிட்ரோடா டிவிட்டரை எப்படி பயன்படுத்தலாம் என்று காட்ட முயன்று டிவிட்டரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அவரே பாடம் கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.இதை பிட்ரோடா எதிர்பார்த்திருப்பாரா என்று தெரியவில்லை.ஆனால் அவருடைய‌ டிவிட்டர் செய்தியாளர் சந்திப்பு நடந்து முடிந்த விதம் இதை தான் உணர்த்துகிறது.

ஆனால் பிட்ரோடாவின் முயற்சியை அலசுவதற்கு முன் அவரது செயலை முதலில் பாராட்ட வேண்டும்.காரணம் இந்தியாவின் முதல் டிவிட்டர் செய்தியாளர் சந்திப்பை அவர் நடத்தி காட்டியிருக்கிறார்.அதாவது டிவிட்டரிலேயே கேள்விகளை எதிர்கொண்டு டிவிட்டரிலேயே பதில் அளித்திருக்கிறார்.

செய்தியாளர் சந்திப்பு என்றால் அதற்கு ஒரு அமைப்பு இருக்கிறது.அதற்கு இரு அரஙகம் தேவை,அதன் நடுநாயகமாக பேட்டி தருபவர் அமர்ந்திருப்பார்.அவர் முன் அமர்ந்திருக்கும் செய்தியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பார்.

குறும்பதிவு யுகத்தில் இத்தகைய சம்பிரதாயங்கள் இல்லாமல் அழகாக டிவிட்டரிலேயே செய்தியாளர் சந்திப்பை நடத்துவது சாத்தியம் தான்.

இந்தியாவை பொருத்து வரை சாம் பிட்ரோடா இந்த சாத்தியத்தை நிகழ்த்தி காட்டியிருக்கிறார்.

பிரோடா இந்திய தொலை தொடர்பு துறையின் முன்னோடி என்று வர்ணிக்கப்படுபவர்.தொழில்நுட்ப பயன்பாட்டில் வழிகாட்டியாக விளங்குபவர்.தற்போது பிரதமரின் தொழில்நுட்ப‌ ஆலோசகராக இருப்பவர்.அவர் இந்தியாவின் முதல் டிவிட்டர் செய்தியாளர் சந்திப்பை நடத்த முன் வந்தது பொருத்தமானது தான்.

இந்தியாவில் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் சேவைகள் மீது தணிக்கை கத்தி வீசப்பட்டும் பின்னணியில் ,பிரதமர் அலுவல‌கமே டிவிட்டர் கணக்குகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் அதிகார வர்கத்தை சேர்ந்த தொழில்நுடபவாதியான பிட்ரோடா டிவிட்டரில் கேள்விகளை எதிர் கொண்டு பதில் அளிக்க முன் வந்தது வரவேற்கத்தக்கதே.

‘தகவல்களை ஜனநாயகமாயமாக்குவது’ என்னும் தலைப்பின் கீழ் இந்த சந்திப்புக்கு பிட்ரோடா ஏற்பாடு செய்திருந்ததும் பொருத்தமானதே.காரணம் வழக்கமான செய்தியாளர் சந்திப்பு என்றால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் மட்டுமே அதில் பங்கேற்க முடியும்.ஆனால் டிவிட்டர் சந்திப்பு என்றால் எல்லோரும் அதில் பங்கேற்று கேள்வி எழுப்பலாம்.ஒரே ஒரு டிவீட் போதும் அதற்கு!

இந்த ஜ‌னநாயக‌த்தன்மை டிவிட்டர் சந்திப்பின் முக்கிய அம்சமாக கொண்டாடப்படுகிறது.

இதன் காரணமாகவே பிட்ரோடா டிவிட்டர் சந்திப்பு பற்றி அறிவித்ததுமே டிவிட்டர் பயனாளிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உண்டானது.பலரும் இந்த‌ செய்தியாளர் சந்திப்புக்காக ஆர்வத்தோடு காத்திருந்தனர்.

அறிவித்தபடி 25 ம் தேதி பிட்ரோடா இந்த செய்தியாளர் சந்திப்பையும் நடத்தி முடித்தார்.வரும் காலத்தில் பிரதமரும் முதல்வர்களும் இன்னும் பிற முக்கிய புள்ளிகளும் கூட டிவிட்டரிலேயே மக்களை சந்தித்து அவர்கள் கேள்விக்கு பதில் சொல்ல வழிவகுக்கலாம் என்பதால் இந்த சந்திப்பை வரவேற்கவே செய்யலாம்.

ஆனால் இந்த சந்திப்பு நிகழ்ந்த விதம் கொஞ்சம் ஏமாற்றம் தந்து விட்டது.பிட்ரோடா கேட்கப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் போனதோடு சர்ச்சைக்குறிய கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்காமல் மழுப்பிவிட்டதாக பலரும் கருதுகின்றனர்.

பிடரோடா அன்று மாலை 3.30 மணிக்கு டிவிட்டரில் ஆஜரானார்.அதன் பிறகு 45 நிமிடங்களுக்கு அந்த சந்திப்பு நீடித்தது.ஆனால் 45 நிமிடமும் அவர் கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டிருக்கவில்லை.

முதல் கேள்வியை எதிர் கொள்வதற்கு முன்பாக முதலில் அவர் டிவிட்டர் செய்தியாளர் சந்திப்புக்கு நல்வரவு கூறிவிட்டு இந்த சந்திப்பு தொடர்பான யூடியூப் வீடியோ விளக்கம் ஒன்றை பார்த்துவிட்டு வருமாறு குறிப்பிட்டு அதற்கான இணைப்பும் கொடுத்திருந்தார்.

இதன் மூலம் கேள்விகளை கேட்க தயாராவதா அல்லது வீடியோவை பார்ப்பதா என தெரியாமல் குழம்ப வைத்தவர் அடுத்து தொடர்ச்சியாக தனது நோக்கத்தை விளக்கும் குறும்பதிவுகளாக வெளியிட்டு கொண்டிருந்தார்.அதாவ்து அவரே பேசிக்கொண்டிருந்தார்.

பத்து குறும்பதிவுகளுக்கு மேல் வெளியிட்ட பிறகே அவர் சரி இனி கேள்விகள் கேடகாலம் என அனுமதி தந்தார்.

இதற்குள் இந்திய டிவிட்டர் வெளியில் பிட்ரோடா பெயரும் ,இந்த சந்திப்புக்காக அவர் உருவாக்கியிருந்த டிஓஐ என்னும் ஹாஷ்டேகும் முன்னிலை பெற்றிருந்தன.

அதன் பிறகு பிரபல பத்திரிகையாளர்கள் உடபட பலரும் டிவிட்டர் குறும்பதிவுகளாக கேள்வி கனைகளை வீசினர்.

முதல் கேள்வியே நெத்தியடியாக தான் வெளியானது.

நமது அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் முற்போக்கான மாற்றம் வராமல் தகவல்கள் ஜன்நாய‌கமாயமாவது சாத்தியமாகுமா?என்பது தான் அந்த கேள்வி.

இல்லை,ஆனால் நாம் இப்போது துவங்கியிருக்கிறோம்,இன்னும் நீண்ட தூரம் போக வேண்டும் என பிட்ரோடா ராஜதந்திர மொழியிலேயே பதில் அளித்தார்.

தகவல்களுக்கான வழி இல்லாத போது தகவல்களை ஜனநாயகமாக்குவது என்பது கிராமவாசிகளுக்கு என்ன பொருள் தரும்?என அடுத்த குறும்பதிவு இன்னும் நேரடியாக தாக்கியது?

அவர்களுக்கு தகவல்களை கிடைக்க செய்வது தான் நோக்கமே என்று பிடரோடா பொதுவான பதிலை கூறினார்.

தொடர்ந்து அரசின் கொள்கை முடிவுகள் தொடர்பான கேள்விகளுக்கு பிட்ரோடா ஒரு அதிகாரி போலவே பதில் அளித்தார்.

ஆனால் டிவிட்டர் மீதான தணிக்கை நடவடிக்கை பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் நேரடியாக பதில் அளிக்காமல் மழுப்பியது பலரை அதிருப்தி அடைய வைத்தது.

கேள்விகளை எதிர் கொண்டால் மட்டும் போதுமா அதற்கு நேரடியாக நேர்மையாக பதில் அளிக்க வேண்டாமா? என பலரும் ஆவேசம் கொண்டனர்.

அது மட்டும் அல்ல ரெயில்வேயின் இணைய தளம் பற்றி வைக்கப்பட்ட விமர்சங்களுக்கும் சரியான பதில் வரவில்லை.

கிட்டத்தட்ட 900 மேல் கேள்விகள் சமர்பிக்கப்பட்டு அவற்றில் 20 கேள்விகளுக்கு மட்டுமே அவர் பதில் அளித்திருந்தார்.

முக்கிய கேள்விகளுக்கு மழுப்பலான பதில் அளித்தது ஏமாற்றமாக இருந்ததாக பலரும் குறும்பதிவுகளை வெளியிட்டனர்.

அது மட்டும் அல்ல,பிட்ரோடா கடைபிடித்த டிவிட்டர் நடைமுறைகளும் விமர்சனத்திற்கு ஆளாகி முதலில் டிவிட்டரை எப்படி பயன்படுத்துவது என தெரிந்து கொள்ளுங்கள் என சிலரை சொல்ல வைத்தது.

ஆக பிட்ரோடா டிவிட்டரில் கேள்விகளை எதிர் கொண்டது பாராட்டத்தக்கது என்றாலும் இந்த ச‌ந்திப்பை உயிரோட்டமாக மாற்றத்தவறியதாகவே பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

45 நிமிட சந்திப்பில் எல்லா கேள்விகளுக்கும் பதில் அளித்து விட முடியாது என்பது உண்மை தான்.ஆனால் பிட்ரோடா தந்த உண்மையான ஏமாற்றம் என்னவென்றால் இந்த சதிப்புக்கு பின் அவர் டிவிட்டரில் இருந்து காணாமல் போனது தான்.

ஆம் செய்தியாளர் சந்திப்பு முடிந்த பிறகு பிட்ரோடா அது குறித்து எந்த கருத்தையும் குறும்பதிவாக வெளியிடவில்லை.நன்றி கூறி விடைபெற்ற பிறகு இரண்டு நாட்களுக்கு ஒரு புதிய குறும்பதிவை கூட வெளியிடவில்லை.

பிட்ரோடா தீவிர டிவிட்டர் பயனாளி என்று சொல்ல முடியாது.அவர் மொத்தமே 235 குறும்பதிவுகளை தான் வெளியிட்டுள்ளார்.எனவே டிவிட்டரில் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருப்பவர் இல்லை.

ஆனாலும் கூட டிவிட்டர் செய்தியாளர் சந்திப்பு நடந்து முடிந்த பிறகு எல்லோரும் அது பற்றியே பேசி விவாதித்து கொண்டிருக்கும் நிலையில் பிட்ரோடா இந்த விவாதத்தை கவனித்து இதில் ப‌ங்கேற்று இருக்க வேண்டும் என்பதே பரவலான எதிர்பார்ப்பு.

சந்திப்பு பற்றி முன் வைக்கப்பட்ட பலவிதமான கருத்துக்களுக்கு குறும்பதிவுகள் முலமே அவர் விளக்கம் அளித்திருக்கலாம்.இது மேலும் உயிரோட்டமான விவாதமாக மாறி நல்லதொரு கருத்து பரிமாற்றத்திற்கு வித்திட்டிருக்கும்.

இருப்பினும் பிட்ரோடாவின் டிவிட்டர் கணக்கை ஆர்வத்தோடு சென்று பார்த்தால் ‘எல்லோருடனும் உரையாடியது மகிழ்ச்சி தருகிறது,அடுத்த முறை விரிவாக பேசுவோம் ‘என விடைபெற்று சென்ற குறும்பதிவுக்கு பிறகு எந்த பதிவும் இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது.

—————-

http://twitter.com/pitrodasam

2 responses to “சாம் பிட்ரோடாவின் டிவிட்டர் சந்திப்பு;ஒரு அலசல்!.

  1. உங்கள் தகவலுக்கு நன்றி……

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s