பிடிக்காத சொற்களை பிலாக் செய்யும் சேவை.

கவிஞர் விக்கிரமாதித்யன் இண்டெர்நெட் மீதோ தொழில்நுட்பம் மீதோ அதிக ஆர்வம் கொண்டவர் இல்லை.ஆனால் கூகுல் குரோம் அறிமுகம் செய்துள்ள புதிய வசதியை பார்க்கும் போது அவர் தான் நினைவுக்கு வருகிறார்.அதாவது அவரது கவிதை தான் நினைவுக்கு வருகிறது.

‘அருவியை நீர்விழிச்சி என்று யாரேனும் சொல்லி விட்டால் மனம் பதறுகிறது’என்பது தான் அந்த கவிதை.விக்கிரமாதித்யனின் கவிதைகளில் தமிரபரணியின் சலசலப்பையும் குற்றாலத்தின் சாரலையும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

அலங்கார பூச்சு இல்லாமல் அவர் பயன்படுத்தும் எளிய சொற்களில் கவிதையின் உணர்வுகளை எளிதாக வெளிப்படுத்தி விடுவார்.இயற்கை மற்றும் மண் மனத்தின் தன்மைகளில் அவரது வரிகளில் காணலாம்.

அதனால் தான் அருவி என்று சொல்லும் போது கிடைக்க கூடிய அனுபவம் நீர்விழிச்சி என்று சொல்லும் போது கிடைக்காமல் போவதாக அவர் பதறுவதை உணரலாம்.

அருவி என்றால் குற்றாலம் தான்.குற்றாலத்தை அருவி என்று தான் சொல்ல வேண்டும்.

கவிஞர் என்றில்லை,எல்லோருக்குமே சொற்களின் பிரயோகத்திலும் பயன்பாட்டிலும் விறுப்பு வெறுப்பு உண்டு.

குறிப்பிட்ட சொற்களை பயன்படுத்துவதையோ ஏன் பார்ப்பதை கூட பலர் வெறுக்கலாம்.சில சொற்கள் உச்சரிக்கப்படும் விதம் அல்லது அவற்றுக்கான எழுத்துக்கள் எழுதப்படுவதை பார்த்து சிலர் ஆவேசப்படலாம்.உதாரண‌த்திற்கு ஆங்கிலத்தில் கலர் எனும் சொல்லை எழுதும் போது நடுவே வரவேண்டிய யு எழுத்தை விடப்படுவது ஆங்கில தூய்மை விரும்பிகளுக்கு அதிருப்தி தரலாம்.

இப்படி எண்ணற்ற உதாரணங்களை சொல்லலாம்.

இது போல எரிச்சல் தரும் சொற்களை இணையத்தில் உலாவும் போது கண்ணில் படக்கூடாது என நீங்கள் நினைத்தால் அத்தகைய சொற்களை அப்படியே தடுத்து நிறுத்தி அதற்கான மாற்றும் சொல்லை தோன்றச்செய்யும் வசதியை குரோம் பிரவுசர் மூலம் கூகுல் வழங்குகிறது.

இதற்காக இன் மை வேர்ட்ஸ் என்னும் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள பிரவுசர் நீட்சி வசதியை டவுண்லோடு செய்து கொண்டால் பார்க விரும்பாத சொற்களை அதில் குறிப்பிட்டு அவற்றை தடுக்க கேட்டுக்கொள்ளலாம்.அதன் பிறகு அந்த சொற்கள் எங்கே தோன்றினாலும் அவை மறைக்கப்பட்டு அதற்கு பதிலாக நீங்கள் குறிப்பிட்ட சொல்லே தோன்றும்.

எடுத்துகாட்டாக பேஸ்புக் என்ற சொல் உங்களுக்கு பிடிக்கவில்லை என்று வைத்து கொள்ளுங்கள் அதன் பிறகு பேஸ்புக் தொடர்பான கட்டுரை அல்லது செய்திகளில் அத‌ற்கு பதிலாக புக்பேஸ் என்ற வார்த்தை வருமாறு கூட செய்து கொள்ளலாம்.இவ்வளவு ஏன் கூகுல் பெயரை கூட மாற்றிக்கொள்ளலாம்.

ஆங்கில மொழிக்கான வசதி தான் என்றாலும் தமிழிலும் இது போன்ற வ‌சதி இருந்தால் நீர்விழிச்சி எல்லாம் அருவியாகட்டும்.

இணையதள முகவரி;https://chrome.google.com/webstore/detail/in-my-words/ifallpipodahhpbnemkhiddofdkhlekg

3 responses to “பிடிக்காத சொற்களை பிலாக் செய்யும் சேவை.

 1. என்ன சொல்லி விட்டீர்.
  அருவி அருமையான தமிழ் அன்றோ ? பயன் படுத்துவதில் ஏன் தயக்கம் ? உமது கட்டுரையில் சாரல்- என்பது சாறல் ஆகிஉள்ளது பிழை.மேலும் வீழ்ச்சி என்பது விழிச்சி ஆகி உள்ளது விருப்பு சரி விறுப்பு பிழை.முகநூல் என்று கூறலாமே ஏன் புக்பேஸ் அல்லது பேஸ் புக் என எழுத வேண்டும் ?விக்கிரமாதித்தன் சிறப்பான கவிஞர்.அவரை மதிக்காவிடினும் இழிவு செய்யாதீர்.கவிஞர் ஆரா.நல் நாள் ஆகுக.

  • கவிஞருக்கு வணக்கம்.தங்கள் கவலையும் கோபமும் புரிகிறது.ஆனால் அருவி என்னும் அழகான தமிழ் சொல் மீது எனக்கு எந்த பிரச்ச‌னையும் இல்லை.கேட்கும் போதே இனிமை தரும் அழகான சொல்.

   கவிஞர் விக்கிரமாதித்யன் மீது அதிக பற்று உள்ளவன் நான்.அதனால் தான் இந்த பதிவில் அவரை தொடர்பு படுத்தியுள்ளேன்.

   கவிஞரின் கவிதையே அருவியை நீர்வீழ்ச்சி என்று சொல்வது பற்றி தான்.

   அப்படியிருக்க அருவி மீது எனக்கேன் கோபம்.மேலும் நீர்வீழ்ச்சியெல்லாம் அருவியாகட்டும் என்று தானே சொல்லியிருக்கிறேன்.

   மேலும் இது தொழில்நுட்பம் மொழி சார்ந்து வழங்கும் சின்ன அழகான சேவை பற்றிய பதிவு.இதில் உதாரணமாக சுட்டிகாட்டியுள்ளேனே தவிர எந்த விவாதத்திலும் ஈடுபடவில்லை.

   தமிழ் மீது தீவிர ஆர்வமும் தாகமும் உள்ளவன் நான்.அதனால் தான் தொழில்நுட்பம் பற்றி தமிழில் எழுதி வருகிறேன்.

   எந்த விதத்திலும் தமிழ் சொல் பற்றிய தவறான நோக்கத்தோடு இந்த பதிவு எழுதப்படவில்லை.

   அன்புடன் சிம்மன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s