சேர்ந்து யோசிக்கலாம் வாங்க,அழைக்கும் இணையதளம்!.


எப்போதும் யோசித்து கொண்டிருப்பவர்கள்,புதிய சேவைகள் அல்லது புதிய பொருட்களை உருவாக்க நினைப்பவர்கள்,அதற்கான அகினிகுஞ்சு எண்ணங்களை மனதில் சுமந்து கொண்டிருப்பவர்கள் ‘யூனிக்.லே’ தளத்தை பார்த்தால் நிச்சயம் கவரப்படுவார்கள்.உற்சாகம் அடைவார்கள்.ஊக்கம் பெறுவார்கள்.

காரணம் இந்த தளம் புதுமையான எண்ணங்களை பகிர்ந்து கொள்வதற்காக என்றே உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த தளத்தை எண்ணக்களை பகிர்ந்து கொள்வதற்கான வலைப்பின்னல் என்று சொல்லலாம்.எண்ணங்கள் என்றால் புதுமையான எண்ணங்கள்!

வளர்த்தெடுக்கப்பட்டால் புதியதொரு பொருளாகவோ அல்லது புதிய தீர்வாகவோ மாறக்கூடிய எண்ணங்கள் பலரது மனதில் இருக்கலாம் அல்லவா?அவை,புதிய நிறுவனத்தை துவக்குவதற்கான எண்ணமாக இருக்கலாம்.நடைமுறை பிரச்சனைக்கும் தீர்வு காணும் சேவையாக இருக்கலாம்.சமூகத்திற்கு பயன் தரக்கூடிய நல்லதொரு கண்டுபிடிப்பாக இருக்கலாம்.ஏன் உலகை மாற்றக்கூடிய மகத்தான யோசனையாக இருக்கலாம்.

இத்தகைய யோசனைகள் ஆர்வமும் சிந்தனையும் கொண்ட பலரிடம் இருக்கலாம்.ஆனால் இவற்றை மனதிலே பூட்டி வைப்பதால் ஒரு பயனும் கிடையாது.யாரிடமாவது பகிர்ந்து கொண்டு அவற்றை மேலும் வளர்த்தெடுக்க வேண்டும்.

ஆனால் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள பொருத்தமானவர்களுக்கு எங்கே போவது?கொஞ்சம் உற்சாகமாக மனதில் உள்ள எண்ணங்களை பேசினால் நல்ல நண்பர்கள் கூட தலை தெறித்து ஓடலாம்.அல்லது ஆசையோடு கேட்டாலும் அந்த எண்ணங்களை மேம்படுத்தக்கூடிய வகையில் யோசனை சொல்லி விவாதிக்க கூடியவர்களாக இருந்தால் தானே பயனுள்ளதாக இருக்கும்.

இப்படி விவாதிக்க கூடிய நண்பர்களை தேடித்தரும் களமாக யூனிக்.லே தளம் அமைந்துள்ளது.

பயன் தரக்கூடிய எண்ணங்கள் உள்ளவர்கள் இந்த தளத்தில் அந்த எண்ணத்தை வெளியிடலாம்.அதாவது மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.

எண்ணங்களை பகிர்ந்து கொள்வது என்பது டிவிட்டரில் குறும்பதிவிடுவது போல தான்.முதலில் இந்த தளத்தில் உறுப்பினராகி(டிவிட்டர் கணக்கு மூலமே உள்ளே நுழையலாம்)அதன் பிறகு புதிய எண்ணத்தை பகிர்வதற்கான பகுதியை கிளிக் செய்து மனதில் உள்ள எண்ணத்தை டைப் செய்து சமர்பித்தால் அந்த எண்ணம் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளப்படும்.

சக உறுப்பினர்கள் இந்த எண்ணத்தை படித்து பார்த்து அது பற்றிய யோசனைகளை தெரிவிக்கலாம்.அந்த எண்ணத்தை மேலும் மேம்படுத்தக்கூடியதாக யோசனைகள் இருக்கலாம்.அப்படியென்றால் அந்த எண்ணம் சார்ந்த செறிவான உரையாடல் நிகழவும் வாய்ப்புண்டு.ஒத்த கருத்துள்ள மேலும் சிலரும் இதில் பங்கேற்றால் உரையாடல் மேலும் செழுமையாகும்.

அதே போலவே இந்த எண்ணத்தால் கவரப்படுவர்கள் அது குறித்த கருத்தை மட்டும் தெரிவித்து ஊக்குவிக்கலாம்.

நீங்களும் உங்கள் பங்கிற்கு மற்றவர்கள் சமர்பித்துள்ள எண்ணங்களை படித்து பார்த்து கருத்து தெரிவிக்கலாம்.உறுப்பினர்களின் எண்ணங்கள் வாழ்வியல்,தொழில்நுட்பம்,கண்டுபிடிப்பு என பல்வேறு தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த எண்ணங்கள் புதிய கண்டுபிடிப்புகளுக்கான அச்சாரமாக இருக்கலாம்.புதிய திசையிலான முயற்சியாக இருக்கலாம்.புதிய சிந்தனையை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம்.வியக்க வைக்கலாம்.நெகிழ வைக்கலாம்.

இப்படி புதிய எண்ணங்களை பகிர்ந்து கொண்டு புதிய தீர்வுகளை உருவாக்குவதற்கான நட்பான சிந்தனை மேடையாக இந்த தளம் அமைந்துள்ளது.

எனவே எண்ணங்களை பகிர்ந்து கொண்டு படைப்பாற்றல் மிக்கவர்களோடு கருத்துரையாடலில் ஈடுபட்டு புதிய வழிகளை காணுங்கள் என்று அழைக்கிறது யூனிக்.லே.

நல்ல விஷயம் தான்.ஆனால் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் போது அவை களவாடப்பட்டு விட்டால்?இயல்பாக எழக்கூடிய இந்த கேள்விக்கு யூனிக்.லேயின் பதில் சிந்தனைக்குறியது.

‘ஒரு எண்ணம் மட்டுமே மதிப்பானது என்று சொல்வதற்கில்லை.உண்மையில் ஒரு எண்ணத்தின் மதிப்பே அதனை கொண்டு பயனுள்ள ஒன்றை உருவாக்குவது தான்.இதற்கு மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு அந்த எண்ணத்தை மேம்படுத்துவது தான் சிறந்த வழி’.இப்படி பதில் அளிக்கும் யூனிக்.லே அழகாக அதற்கான வழியையும் காட்டுகிறது.

இணையதள முகவரி;http://uniq.ly/welcome

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s