விருப்பங்களை நிறைவேற்றி கொள்ள ஒரு இணையதளம்.

 
 
இவை தான் நான் விரும்பும் பரிசுகள் என்று நண்பர்களுக்கு தெரிவிக்க உதவும் விருப்ப பட்டியலை  பகிர்ந்து கொள்வதற்கான‌ இணையதளங்கள் சுவாரஸ்யமானவை தான்.ஆனால் விஷ்டேப்ஸ் இணையதளம் இன்னும் கூட சுவாரஸ்யமானது.
 
இந்த இணையதளம் நீங்கள் விரும்பும் பரிசுகளை நண்பர்களுக்கு தெரிவிக்க உதவுவதோடு அவற்றை வாங்கி கொள்ள தேவையான நிதி உதவியை நண்பர்களிடம் இருந்து திரட்டி கொள்ளவும் வழி செய்கிறது.
அதாவது எல்லோருக்குமே குறிப்பிட்ட சில பொருட்களை வாங்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும்.விடுமுறையின் போது எடுத்து செல்லக்கூடிய டிஜிட்டல் காமிரா,அழகான புத்தக அல்லது டிவிடி அலமாரி,ஸ்மார்ட் போன் இப்படி அவரவர் தேவைக்கும் ரசனைக்கும் ஏற்ப விதவிதமான பொருட்களை வாங்க வேண்டும் என ஒவ்வொருவரும் விரும்பலாம்.
இத்தகைய விருப்ப பட்டியல் எல்லோரிடமும் உண்டு.
ஆனால் பொருளாதார சூழல் காரணமாக பலரால் இந்த பொருட்களை நினைத்தவுடன் வாங்கி விட முடியாது.ஒன்று மாதக்கணக்கில் திட்டமிட்டு அதற்கென சேமித்து வைத்து வாங்கி கொள்ள வேண்டும்ம்,இல்லை அந்த ஆசையை மனதுக்குள்ளேயே பூட்டி வைத்து கொள்ள வேண்டும்.
இப்படி மனதுக்குள் இருக்கும் வாங்க வேண்டும் என விரும்பும் பொருட்களின் பட்டியலை உருவாக்கி கொள்ளவும் அந்த பட்டியலை பேஸ்புக்,டிவிட்டர் வழியே நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும் உருவாக்கப்பட்டுள்ளது விஷ்டேப்ஸ் இணையதளம்.
விஷ்டேப்ஸ் தளத்தில் உறுப்பினராக சேர்ந்து உங்கள் விருப்ப பட்டியலை உருவாக்கி நண்பர்களோடு சுலபமாக பகிர்ந்து கொள்ளலாம்.
ஆக நீங்கள் வாங்க நினைத்து வாங்க முடியாமல் இருக்கும் பொருட்கள் பற்றி உங்கள் நண்பர்கள் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுவதோடு அந்த விருப்பத்தை நிறைவேற்றி கொள்ள அவர்களால் முடிந்த உதவியையும் செய்ய வாய்ப்பு உள்ளது.
ஆஹா அருமையான யோசனையாக இருக்கிறதே ,விருப்பங்களை நண்பர்களுக்கு தெரிவித்து அவர்கள் உத‌வியுடன் அதனை நிறைவேற்றி கொள்ள முடிவது அதிசயம் போலவே தோன்றலாம்.
இந்த எண்ணம் தோன்றியவுடனேயே நம்முடைய விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும் என்பது நண்பர்களுக்கு என்ன கட்டாயம் என்றும் கேட்க தோன்றலாம்.நாம் ஒரு பொருளை வாங்க நினைத்து முடியாமல் போனால் அதற்காக நண்பர்கள் ஏன் நிதி அளிக்க வேண்டும் என்றும் கேட்கலாம்.
நம்மால் வாங்க முடியாத பொருட்களை நண்பர்கள் மூலம் வாங்கி கொள்வது சரியான‌ செயல் அல்ல என்றும் தோன்றலாம்.
வாங்குவதற்கான வசதி இல்லை என்றால் அதற்கான தேவையும் இல்லை என்று தானே பொருள் என்றும் வாதிடலாம்.
நிற்க இந்த இட‌த்தில் தான் விஷ்டேப்ஸ் இணையதளம் ஒரு சின்ன அற்புதத்தை சாத்தியமாக்குகிறது.இணையத்தின் சமூக தன்மையை பயன்படுத்தி கொண்டு இந்த அற்புதம் சாத்தியமாகிறது.
தாங்கள் வாங்க விரும்பும் பொருட்கள் பட்டியலை வெளியிட விரும்பும் நபர்கள் அதனை சும்மா செய்ய வேண்டியதில்லை.அதற்காக தாங்கள் செய்ய தயாராக இருக்கும் செயல்களையும் குறிப்பிடலாம்.அதாவது நண்பர்கள் செய்யக்கூடிய உதவிக்கு பதிலாக தாங்களால் இதனை செய்ய முடியும் என்று குறிப்பிடலாம்.
எப்படியும் எல்லோருக்கு ஒரு திறமை இருக்கும் அல்லவா?உதாரணமாக ஒரு சிலருக்கு அலுவல் நோக்கிலான கடிதங்களை அதற்குறிய பிரத்யேக மொழி நடையில் எழுதுவது கைவந்த கலையாக இருக்கலாம்.இத்தகைய கடிதம் எழுதி தருவதாக கூறி பிரதிபலனாக விரும்பிய பொருளை வாங்கி கொள்ள பங்களிப்பை கோரலாம்.
பேஸ்புக் பக்கத்தில் விளம்ப‌ரம் செய்வதில் துவங்கி,நல்ல பதிவொன்றை எழுதி தருவதில் இருந்து,பூவேலைப்பாடு செய்து தருவது,பார்க்க வேண்டிய இடங்களை பரிந்துரை செய்வது,வெளிநாடு செல்ல வழிகாட்டுவது,பேச்சு ஆங்கிலம் கற்றுத்தருவது என ஒவ்வொருவரும் தங்கள் திறமை மற்றும் அனுபவத்திற்கேற்ற விஷயங்களை செய்து தர சம்மதம் தெரிவித்து நண்பர்களின் உதவியை கோரலாம்.(இதை கோரிக்கையாகவும் தெரிவிக்கலாம்,சவாலாகவும் தெரிவிக்கலாம்)
இந்த ஏற்பாடு இரு தரப்பினருக்குமே நன்மை தரக்கூடியது தானே.
நண்பர்கள் சக நண்பர்களின் விருப்பத்தை தெரிந்து கொள்வதோடு அவர்களிடம் மறைந்து கிடக்கும் திறமைகளையும் தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும்.நண்பர்களால் நிதி உதவி அளிக்க முடியாவிட்டாலும் கூட ஊக்கமளிக்கும் வார்த்தைகளை கூறி பயனுள்ள ஆலோசனைகளையும் கூறலாம்.
சொந்த விருப்பங்களை நிறைவேற்றி கொள்வதற்காகவும் இந்த தளத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.பொதுநல நோக்கிலான திட்டங்களுக்கு நிதி திரட்டவும் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்.
 
இணையதள முகவரி;http://www.wishtabs.com/html/index.php

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s