உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்!

googling

இணையத்தில் தகவல்கள் தேவை என்றால் நீங்கள் கூகுலில் தேடுவீர்கள் என்பது தெரிந்த விஷயம் தான்.தேடியந்திரமான கூகுலில் எந்த தகவலையும் தேடிப்பெறலாம். நீங்கள் கூகுலில் தகவல்களை தேடுவது இருக்கட்டும்,நீங்களும் கூகுலில் தேடப்படுகிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆம்,உண்மை தான்,நீங்களும் கூகிளில் தேடப்படுகிறீர்கள்.இப்போது கூட யாராவது உங்களைப்பற்றி கூகுலில் தேடிக்கொண்டிருக்கலாம்.ஆனால் இதில் வியப்பதற்கோ அதிர்ச்சி அடைவதற்கோ எதுவும் இல்லை.இணைய யுகத்தில் இது மிகவும் இயல்பானது தான்.

கூகுல் தேடலை எளிதாக்கி இருப்பதோடு பரவலாகவும் ஆக்கியிருக்கிறது.விளைவு எல்லாவற்றுக்கும் கூகுலை பயன்படுத்துகின்றனர். உங்களைப்பற்றிய தகவல் தேவை என்றாலும் கூகுலை பயன்படுத்துகின்றனர்.

சரி, இப்படி உங்களைப்பற்றி தேடுவது யார்? அவர்கள் நோக்கம் என்ன? அவர்கள் தேடலில் கிடைப்பது என்ன? சுவாரஸ்யமான கேள்விகள். அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கேள்விகள்.

கூகுலில் தேடப்படுகிறீர்கள் என்றதுமே ஏதோ குற்றவாளிக்கான வலைவீச்சு போல புரிந்து கொள்ள வேண்டியதில்லை. உங்களைப்பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கு அல்லது சரி பார்த்து கொள்வதற்கானதேடல் தான் இது.யாருக்கெல்லாம் உங்களைப்பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கும் என்பதை தெரிந்து கொண்டால் இந்த தேடலை எளிதாக புரிந்து கொள்ளலாம்.

பெரும்பாலும் வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனங்களே இத்தகைய தேடலில் ஈடுபடுகின்றன.வழக்கமாக நிறுவனங்கள் புதியவர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்ள என்ன செய்யும் என்றால் விளம்பரம் கொடுத்து நேர்முகத்தேர்வுக்கு அழைத்து ஒருவரது திறமையை பரிசோதிக்கும். அவரது குணநலன்கள் குறித்த சான்றிதழ்களை சரி பார்க்கும்.தேவைப்பட்டால் யாரிடமாவது விசாரித்தும் பார்க்கலாம்.

இதெல்லாம் பழைய கால பழக்கங்கள். இன்று ஒருவரைப்பற்றிய தகவல்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றனவே. எனவே யாரைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலும் இணையத்தில் தேடினாலே போதுமானது. அது தான் நிறுவனங்கள் கூகிளில் தேடிப்பார்க்கின்றன.

புதிய வேலைக்காக விண்ணப்பித்தவர்களின் திறமையை பரிசோதிக்கும் போது கூடுதல் தகவல் தேவைப்பட்டாலோ அல்லது விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் சரியானது தானா என்று தெரிந்து கொள்ள விரும்பினாலோ நிறுவன மேலதிகாரி உடனடியாகசெய்யக்கூடியது,கூகுலில் அந்த நபரின் பெயரை டைப் செய்து தேடிப்பார்ப்பது தான்.

இவ்வாறு தேடும் போது அந்த நபர் பெயரில் உள்ள தகவல்களை எல்லாம் பார்க்க முடியும்.உதாரனத்திற்கு அவர் பேஸ்புக் சேவையை பயன்படுத்துபவர் என்றால் அவரது பேஸ்புக் பக்கம் வந்து நிற்கும். வலைப்பதிவு வைத்திருப்பவர் என்றால் வலைப்பதிவு தோன்றும். அதே போலவே ட்விட்டர் பக்கம், தொழில் முறை வலைப்பின்னல் சேவையான லின்க்ட் இன் பக்கம் போன்றவையும் தேடலில் கிடைக்கலாம்.

இந்த தளங்களில் ஒருவர் பகிர்ந்து கொண்டுள்ள தகவல்களை அலசுவதன் மூலம் நிறுவன அதிகாரி விண்ணப்பித்தவர் தெரிவித்த தகவல்கள் உண்மையாவவை தானா என்று சரி பார்த்து கொள்ள முடியும். அது மட்டும் அல்ல, விண்ணப்பதாரரின் தன்மை மற்றும் திறமை பற்றிய மேலதிக தகவல்களையும் தெரிந்து கொள்ள முடியும்.
விண்ணப்பதாரர்கள் பயோ டேட்டாவில் தங்களைப்பற்றிய தகவல்களை தெரிவித்திருப்பார்கள் தான் .ஆனால் அவை முழுமையானதாக இருக்கும் என்று சொல்ல முடியாது.குறைந்தபட்சம், வேலைக்கு பொருத்தமான நபர்களை தேடிக்கொண்டிருக்கும் நிறுவன மேலதிகாரியின் பார்வையிலேனும் அவை முழுமையானவை என்று சொல்வதற்கில்லை.
விண்ண்ப்பிப்பவர் தன்னைப்பற்றிய அடிப்படையான தகவல்களை தந்திருப்பதோடு இந்த காரணக்களுக்காக எல்லாம் தான் தனித்தன்மை மிக்கவர் என்று உணர்த்தும் நோக்கத்தோடு கூடுதல் விவரங்களையும் தெரிவித்திருக்கலாம். பல நேரங்களில் இவை மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம்.அல்லது நிறுவன வேலைக்கு தேவையில்லாமல் இருக்கலாம்.

ஆயிரக்கணக்கான பயோ டேட்டாக்களை பார்த்து கொண்டிருக்கும் மேலதிகாரிக்கும் அவற்றில் உள்ள வழக்கமான தன்மை அலுப்படையச்செய்யலாம்.அவருக்கு தேவையான தகவலும் கிடைக்கவில்லை என்ற எண்ணமும் ஏற்பலாம்.

இதனால் தான் நேரமுகத்தேர்வில் பயோடேட்டாவை விலக்கு வைத்து விட்டு விண்ணப்பதாரரின் தனித்தன்மையை உணர்த்தக்கூடிய கேள்விகளை கேட்பார்கள்.ஆனால் இணைய யுகத்தில் நேர்முகத்தேர்வு வரை ஏன் காத்திருக்க வேண்டும். விண்ணப்பம் கையில் கிடைத்தவுடனேயே , அதில் உள்ள பெயரை கூகிள் செய்தால் போதுமே,இணைய ஜாதகமே தோன்றுமே.

அந்த ஜாதகத்தில் பேஸ்புக் பக்கம்,வலைப்பதிவு,ட்விட்டர் கணக்கு என எல்லாமே இடம் பெற்றிருக்கும்.அவற்றை ஒரு முறை வலம் வந்தாலே மேலதிகாரிக்கு போட்டியாளரின் திறமை பற்றிய சரியான சித்திரம் கிடைத்து விடும்.

பேஸ்புக்கில் போட்டியாளர் பகிர்ந்து கொண்டுள்ள கருத்துக்கள் அவருக்கு எந்த துறைகளில் ஆர்வமும் திறமையும் இருக்கின்றன என உணர்த்தலாம்.அதோடு கருத்துக்களை தெரிவித்துள்ள விதம் மற்றும் அதன் மொழி அவரது பழகுத்தன்மை பற்றிய குறிப்புகலையும் சுட்டிக்காட்டலாம்.

நிற்க,நிறுவனங்கள் தகவல்களை சரி பார்க்க மட்டும் தான் இப்படி கூகுல் செய்கின்றன என்றில்லை. சில நிறுவனங்கள் தாங்களாகவே கூகுலில் தேடிப்பார்ப்பதும் உண்டு.

ஆக,பயோடேட்டாவை பட்டைத்தீட்டிக்கொண்டால் மட்டும் போதாது, உங்கள் பேஸ்புக் பக்கத்தையும் பளிச்சென வைத்திருக்க வேண்டும்.

நிறுவன மேலாளர்கள் போன்றவர்கள் உங்கள் பேஸ்புக் பக்கத்தை பார்க்கலாம்,பார்த்து உங்களைப்பற்றிய முடிவுக்க வரலாம் என்பதால் அடுத்த முறை பேஸ்புக்கில் பகிரும் போது அந்த தகவல் உங்களைப்பற்றிய சரியான தோற்றத்தை தருமா என்று யோசித்துப்பாருங்கள்.சுருக்கமாக சொன்னால் உங்கள் நண்பர்களோடு மட்டும் அல்ல ஒட்டு மொத்த உலகுடன் தகவல்களை பகிர்ந்து கொள்கிறீர்கள் என்ற எச்சரிக்கை உணர்வு தேவை.

இங்கே இன்னொரு சுவாரஸ்யமான விஷயம். நிறுவனங்கள் மட்டும் இப்படி தேடிப்பார்ப்பதில்லை. நிறுவங்கலையும் இவ்வாறு தேடிப்பார்க்கின்றனர். அதாவது வேலை தேடிக்கொண்டிருப்பவர்களும் தாங்கள் பணியாற்ற‌ உள்ள நிறுவனம் பற்றி அறிய கூகுலில் அந்நிறுவனம் பற்றி தேடி ஆய்வு செய்கின்றனர்.எனவே நீங்கள் ஒரு நிறுவன உரிமையாளர் அல்லது அதன மேலதிகாரியாக இருக்கும் பட்சத்தில் உங்களிடம் பணியாற்ற விண்ணபிக்க விரும்பும் நபர் உங்கள் பெயரை கூகுலில் டைப் செய்து தேடலாம்.

இதே போல உங்கள் பால்ய நண்பர்களும் கூட உங்களைப்பற்றி தேடிக்கொண்டிருக்கலாம். பார்த்து பல வருடங்கள் ஆகி விட்டதே,பேஸ்புக்கில் பார்க்க முடிகிறதா என்று பழைய நண்பர் யாரேனும் உங்கள் பெயரை கூகிளில் தேடலாம்.மாஜி காதலர்களுக்கும் இந்த எண்ணம் வரலாம்.ஏன் நீண்ட தூரத்தில் உள்ள உறவினர்கள் கூட இப்படி தேட வாய்ப்பிருக்கிறது.இப்போதெல்லாம் திருமணத்திற்கு வரண் பார்ப்பவர்கள் கூட,மணமகன் அல்லது மணமகளின பெயரை கூகுல் செய்து பார்க்கலாம்.இதைத்தவிர,மார்க்கெட்டிங் துறையினர் மற்று அரசியல் கட்சி பிரதிநிதிகளும் கூட கூகிளில் வலை வீசலாம்.

இவ்வளவு ஏன்,முற்றிலும் முன் பின் தெரியாதவர்கள் கூட எங்கேனும் உங்கள் பெயரை பார்த்து விட்டு கூடுதல் தகவலுக்காக கூகுலில் உங்கள் பெயரை தேட முற்படலாம்.ஆர்வம் காரணமாகவும் இவ்வாறு செய்து பார்க்கலாம் அல்லது ஏதேனும் வில்லங்க நோகத்துடனும் செய்யலாம்.

எப்படிப்பார்த்தாலும் இந்த தேடல் யுகத்தில் நீங்கள் மட்டும் தேடுவதில்லை,நீங்களும் தேடப்பட்டு கொண்டிருக்கிறிர்கள் என்பதே உண்மை.

சரி, உங்களை தேடுபவர்களுக்கு எந்த வகையான தகவகல்கள் கிடைக்கும்?

கூகுலில் தேடும் போது முதலில் உங்களைப்போலவே பெயருள்ள மற்றவர்களை காணலாம்.அதாவது மிகவும் அரிதாக உங்கள் பெயர் அமைந்திருக்காத பட்சத்தில் கூகுல் தேடலில் உங்கள் பெயரில் உள்ள பலரும் தோன்றக்கூடும்.இதில் எந்த பிரச்சனையும் இல்லை.ஆனால் கூகுல் தேடல் பட்டியலில் உங்கள் பெயர் முலலிடத்தில்வ வர ஏதேனும் செய்ய முடியுமா என்று பாருங்கள். பல நேரங்களில் இதற்கென தனியே எதுவும் செய்ய வேன்டியதில்லை. உங்களுக்கென சொந்ததமாக இணையதளம் அல்லது வலைப்பதிவு வைத்திருந்து அதை தொடர்ந்து புதுப்பித்து வந்தாலே போதுமானது. பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களும் இதில் உதவலாம்.

இரண்டாவதாக கூகுல் தேடல் பட்டியலில் இடம் பெறப்போவது உங்களின் சமூக வலைப்பின்னல் பக்கங்கள் தான்.உங்கள் பேஸ்புக்,ட்விட்டர் ப‌க்கங்கள் தோன்றுவதோடு இணையத்தில் நீங்கள் எழுதியவையும் உங்களைப்பற்றி மற்றவர்கள எழுதியவையும் தேடல் பட்டியலில் தோன்றும்.எழுதியவை என்றால் பின்னூட்டங்களும் சேர்த்து தான்.

சிலவருடங்களுக்கு முன் எழுதிய அந்த பதிவு அல்லது பின்னூட்டத்தை நீங்கள் கூட மறந்திருக்கலாம்,ஆனால் கூகிள் மறக்காமல் அதை பட்டியலிடும்.அதே போல ஒரு சில தளங்களில் நீங்கள் உறுப்பினராக பதிவு செய்து கொண்டு அந்த தளத்தையே மறந்திருக்கலாம்.கூகுலுக்கு இந்த மறதி கிடையாது.அவையும் பட்டியலில் வரும்.

நீங்கள் பகிர்ந்து கொண்ட புகைப்படங்களும் கூகிள் பட்டியலில் நிச்சயம் தோன்றும்.ஆக கூகிளில் நீங்கள் தேடப்பட்டு கொன்டிருக்கிறீர்கள் என்பது இணைய யுக நிஜம். அந்த தேடலில் உங்களைப்பற்றிய சரியான தகவல்கள் தோன்றும் படி உங்கள் இணைய இருப்பை உருவாக்கி கொள்வது உங்கள் கையில் தான் இருக்கிறது.

——–

நன்றி;தமிழ் கம்ப்யூட்டர்

Advertisements

7 responses to “உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s