இது டிவிட்டர் பழிக்கு பழி!

உங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக உணர்ந்தீர்கள் என்றால் ட்விட்டரில் கோபத்தை வெளிப்படுத்துங்கள். நியாயம் கிடைக்கிறதோ இல்லையோ , நீங்களும் ட்விட்டர் நட்சத்திரமாகலாம். பிரிட்டனை சேர்ந்த சமையல் கலைஞர் ஒருவர் இப்படி தான் ட்விட்டரில் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி பரவலான ஆதரவையும் பாராட்டையும் பெற்றிருக்கிறார். இன்று அவர் பணியாளர்களுக்கு , குறிப்பாக சமையல் கலைஞர்களுக்கு ஏற்படும் அநீதிக்கு குரல் கொடுப்பவராக போற்றப்படுகிறார்.

ஜிம் நைட் எனும் அந்த இளம் சமையல் கலைஞர் பிரிட்டனில் உள்ள தி பிளஃப் பப் எனும் ரெஸ்டாரண்டில் தலைமை சமையல் கலைஞராக இருந்தார். கடந்த 15 ந் தேதி அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை கேட்டதற்காகவும்  அதை ஒட்டிய ஞாயிற்றுக்கிழமை பணியாற்ற மறுத்ததற்காகவும் அவர் மீது நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்தது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தலைமை சமையல் கலைஞர் பணியில் இருக்க வேண்டும் என்று நிர்வாகம் எதிர்பார்த்தது. ஆனால் ஜிம் நைட் கிறிஸ்துமஸ் பண்டிகையை தன் குடும்பத்துடன் கொண்டாடி விரும்பினார். இதனால் விடுமுறையில் பணியாற்ற முடியாது என மறுத்திருக்கிறார். வேலையில் இருந்தும் நீக்கப்பட்டிருக்கிறார்.

நிறுவனங்களில் பணியாற்றும் பலருக்கு ஏற்படும் நிலை தான் இது. ஆனால் எதிர்ப்பையும் தெரிவித்து வேலையையும் இழந்து நின்றால் என்ன செய்வது ? தனிமையில் புலம்பலாம். நண்பர்களிடம் குமுறலை வெளிப்படுத்தலாம். வேறு என்ன செய்து விட முடியும்? ஜிம் நைட் தனக்கு ஏற்பட்டதாக கருதிய அநீதியை நினைத்து புலம்பிக்கொண்டிருக்கவில்லை. போர்க்கொடியும் தூக்கவில்லை .மாறாக தனது நிலையை ட்விட்டரில் வெளிப்படுத்தினார்.

அவர் பணியாற்றிய பிளஃப் பப்பிற்கு ட்விட்டர் பக்கம் இருக்கிறது. அந்த ட்விட்டர் பக்கத்தில் அவர் மனக்குமுறலை குறும்பதிவுகளாக பகிர்ந்து கொண்டார்.

’ எங்கள் சமையல் கலைஞரை வேலையில் இருந்து நீக்கிவிட்டோம் என்று தெரிவித்துக்கொள்கிறோம்..’ இது தான் அவரது முதல் குறும்பதிவு. நைட் உண்மையில் புத்திசாலி தான். அதனால் தான் என்னை அநியாயமாக வேலையில் இருந்து நீக்கிவிட்டார்கள் என்பது போல குறும்பதிவு செய்யாமல் , நிறுவனமே அவரை நீக்கியது பற்றி அறிவிப்பது போல குறும்பதிவு செய்தார்.

இது எந்த அளவுக்கு சக்தி வாய்ந்ததாக அமைந்தது என்று அடுத்த குறும்பதிவுகளை பார்த்தால் தெரியும். ’ துரதிர்ஷ்டவசமாக அவர் வார இறுதியில் விடுமுறை கேட்டார். குடும்பத்தை காரணம் காட்டி கிறிஸ்துமஸ் அன்று விடுமுறை கேட்டார் . அதனால் நீக்கி விட்டோம்’. இது அடுத்த குறும்பதிவு. ’ஆம், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு வாரம் முன்னதாக இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.’’ அவருக்கு 7.5  மாத குழந்தை இருந்தால் எங்களுக்கு என்ன ?’ இப்படி அடுத்த இரண்டு குறும்பதிவுகளில் நிறுவனம் தெரிவிப்பது போலவே தனக்கு ஏற்பட்ட நிலையை அவர் உணர்த்திவிட்டார். கடைசி குறும்பதிவில் நிறுவனம் மலிவான இறச்சியை கொள்முதல் செய்வதாக புகார் கூறி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களோடு முடித்துக்கொண்டார்.

இந்த குறும்பதிவுகளை பகிர்ந்து கொள்ளும் போது தனது மனக்குமுறலை வெளிப்படுத்துவது தவிர வேறு எதையும் அவர் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இதன் பிறகு அவர் சற்றும் எதிர்பாராதது நடந்தது. இந்த குறும்பதிவுகளை பார்த்தவர்கள் அதை ரிடிவீட் செய்தனர். இப்படி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரிடிவீட் செய்ததால் மீடியாவும் இதை கவனித்தது. புகழ் பெற்ற பிபிசி சேனல் உட்பட பல மீடியாக்கள் , இதை செய்தியாக்கின. வேலையில் இருந்து நீக்கப்பட்ட சமையல் கலைஞர்  ட்விட்டரில் தன் கோபத்தை காட்டி நிறுவனத்தை நூதனமாக பழி தீர்த்துக்கொண்டதாக அந்த செய்திகள் தெரிவித்தன. ஆக நைட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதி உலகிம்  முழுவதும் அறிந்த விஷயமாயிற்று. எல்லாம் சரி ,நைட்டால் எப்படி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் புகுந்து குறும்பதிவுகளை வெளியிட முடிந்தது. நிறுவனத்துக்கான ட்விட்டர் பக்கத்தை உருவாக்கியதே நைட்டின் யோசனையின் அடிப்படையில் என்பதால் அதை அவர் தான் பராமரித்து வந்திருக்கிறார். அதையை தன் மீதான நடவடிக்கைக்கு எதிராகவும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.

நிறுவனம் இந்த விபரீததை தாமதமாக உணர்ந்து கொண்டு அந்த குறும்பதிவுகள் அனைத்தையும் நீக்கியது. ஆனால் இதற்குள் நைட்டுக்கு ஏற்பட்ட கதி எல்லோருக்கும் தெரிந்துவிட்டது.

ஜிம் நைட் ட்விட்டர் மூலம் தன்னை வேலையில் இருந்து நீக்கிய நிறுவனத்தை பழி தீர்த்து கொண்டதாக பரவலாக சொல்லப்பட்டாலும் அவர் நிறுவனத்தின் மீது புழுதி வாரி தூற்றுவதில் ஈடுபடுவதை விட ஒரு ஊழியராக தனக்கு ஏற்பட்ட அநீதியை மற்றவர்களுக்கு உணர்த்தும் வகையிலேயே செயல்பட்டார்.

இது அவரது இரண்டாம் கட்ட போராட்டத்தில் அழகாக வெளிப்படுகிறது. நிறுவன ட்விட்டர் பக்கம் மூலம் தனக்கு ஏற்பட்ட கதியை விளக்கியவர் அதன் பிறகு தனது சொந்த ட்விட்டர் பக்கத்தில் குறும்பதிவுகளை பகிர்ந்து கொள்ளத்துவங்கினார்.ஆனால் ஒரு குறும்பதிவு கூட அவதூறு நோக்கில் அமையவில்லை. அவருடைய ட்விட்டர் கோபம் பற்றி வெளியான செய்திகளுக்கான இணைப்புகளை மட்டுமே சுட்டிக்காட்டினார். இதற்கிடையே பலரும் அவருக்கு ஆதரவும் பாராட்டையும் குறும்பதிவுகளாக பகிர்ந்து கொண்டார். பலரும் அவரது நிலையை புரிந்து கொண்டதோடு ஒரு ஊழியராக அவரது போராட்டத்தை ஆதரிப்பதாகவும் தெரிவித்தனர். ஆதரவுக்கு மத்தியில் நைட்டிற்கு புதிய வேலையும் கிடைத்துவிட்டது. அந்த செய்தியையும் அவர் குறும்பதிவு மூலம் பகிர்ந்து கொண்டார். தொலைக்காட்சிகளில் தோன்றி பிரபலமாகவும் ஆகிவிட்டார்.

அவர் தொடர்ந்து குறும்பதிவு செய்து வருகிறார்.

நடுவே பலரும் அவர் போராடிய விதத்தை குறிப்பிட்டு இந்த செயலுக்காக பாராட்டும் தெரிவித்து வருகின்றனர். பலர் அவரை நாயகனாகவும் வர்ணித்துள்ளனர். ஒருவர் வீட்டில் தனிமையில் வாழும் சமையல கலைஞர்களின் மனைவிகளுக்காக நட்த்தப்படும் இணையதளத்திற்கான இணைப்பை பகிர்ந்து கொண்டு நைட்டின் மனைவிக்கு ஆறுதல் கூறியிருந்தார். ஆக இந்த குறும்பதிவுகள் பணியாளர் பிரச்ச்னைகள் மற்றும் நிறுவனங்களின் செயல்பாடு ஆகியவை தொடர்பான விவாதமாகவும் அமைந்தன. அந்த வகையில் ஜிம் நைட் நிறுவங்களால் வஞ்சிக்கப்படும் ஊழியர்களின் குரலை பிரதிபலித்தவராகவும் மாறியிருக்கிறார். அவரது டிவிட்டர் அறிமுக குறிப்பும் கூட ஒரு வகையில் இப்படி தான் அமைந்திருக்கிறது. 28, தந்தை, @பிலவ் ட்விட்டர் கணக்கு தொடர்பான நிகழ்வுக்கு காரனமான சமையல் கலைஞர் என்றே அவர் தன்னைப்பற்றி குறிப்பிட்டுள்ளார். டிவிட்டர் மூலம் தேடிக்கொண்ட அல்லது உருவான அங்கீகாரம்.

 

ஜிம் நைட் குறும்பதிவு; https://twitter.com/chefjimknight

————–

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s