புகைப்படங்களை சேமிப்பதாகட்டும், கோப்புகளை பகிர்வதாகட்டும் இப்போது கிலவுட் முறையிலான சேவைகளை தான் அதிகம் பயன்படுத்துகிறோம். நிறுவனங்களும் கில்வுட் சார்ந்த சேவைகளை தான் அதிகம் பயன்படுத்துகின்றன. கில்வுட் முறையில் சேமிப்பதும் பகிர்வதும் சுலபமாக இருக்கிறது. பல நேரங்களில் இலவசமானதாகவும் இருக்கிறது. இவ்வளாவு ஏன் பத்திரங்கள், அடையாள அட்டை போன்றறை கூட கிலவுட் முறையில் சேமித்து வைக்கிறோம். நாம் பயன்படுத்தும் டிராப்பாக்ஸ் சேவையில் துவங்கி பல சேவைகள் கிலவுட்டில் தான் இயங்கின்றன. வருங்காலத்தில் மேலும் பல சேவைகளுக்கு கிலவுட் தொழில்நுட்பம் பயன்படப்போகிறது என்பதிலும் சந்தேகமில்லை. அது மட்டுமா, 2014 ல் பல பணிகளில் கம்ப்யூட்டரில் இருந்து கிலவுட்டுக்கு மாறிவிடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
கிலவுட் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் பற்றியோ பயன்பாடு பற்றியோ எந்த கேள்வியும் இல்லை. எல்லாம் சரி, கில்வுட் தொழில்நுட்பத்தில் தகவல்களை சேமிப்பது எந்த அளவுக்கு பாதுக்கப்பானது. கிலவுட் பயன்பாட்டிற்கான விதிகளும் சட்டங்களும் என்ன சொல்கிண்றன? கிலவுட்டில் சேமிக்கப்படும் தகவல்களுக்கு யார் பொறுப்பு? இப்படி பல கேள்விகள் கிலவுட் பயன்பாட்டில் எழுகின்றன.
நாம் மேலும் மேலும் அதிக அளவில் கிலவுட் சேவையை பயன்படுத்த துவங்கியிருக்கும் நிலையில் அவற்றின் பாதுகாப்பு குறித்து அறிந்து கொள்வது நல்லது. மிகவும் அவசியமும் கூட.
பெரும்பாலான கில்வுட் சேவைகளின் சர்வர்கள் அமெரிக்காவில் இருக்கின்றன. ஆனால் அவற்றை பயன்படுத்துபவர்கள் எல்லா நாடுகளிலும் இருக்கின்றனர். எனில் சேமிக்கப்பட்ட தகவல்களில் ஏதேனும் பிரச்ச்னை என்றால் எந்த நாட்டு சட்டம் பொருந்தும் என்பது சிக்கலானது. அதோடு குறிப்பிட்ட சூழலில் , தலவல்களை அணுகும் உரிமை யாருக்கு உண்டு என்னும் கேள்வியும் சிக்கலாகலாம். பயனாளிகள் தாங்கள் சேமித்து வைத்த தகவல்கள் தங்களுக்கு சொந்தமானவை என்று நம்பலாம். ஆனால் அவை சேமிக்கப்பட்ட இடம் இன்னொரு நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதை மறந்துவிடக்கூடாது. ஏதேனும் காரணத்துக்காக குறிப்பிட்ட அரசாங்கங்கள் தகவல்களை கேட்டால் கொடுக்க வேண்டி வரலாம். அப்போது என்னுடையது எனும் வாதம் எடுபடாது.
எனவே கிலவுட் சேவையை பயன்படுத்தும் போது சில வழிமுறைகளை பின்பற்றுவது சரியாக இருக்கும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
முக்கிய விவரங்களில் கவனம்:
கிலவுட் சேவையை பயன்படுத்துவது பல நேரங்களில் ஆபத்தாக முடியலாம். அதற்காக கிலவுட் சேவையையே பயனப்டுத்தக்கூடாது என்றில்லை. மாறாக கவனமாக பயன்படுத்த வேண்டும். சாதரானமான தகவல்கள் என்றால் யோசிக்காமல் கிலவுட்டில் சேமித்து வைக்கலாம். ஆனால் ரகசியமானவை மற்றும் முக்கிய தகவல்கள் என்றால் கிலவுட்டிற்கு கொண்டு செல்லும் முன் யோசியுங்கள். உதாரணத்திற்கு பத்திரம் போன்றவற்றை கிலவுட்டில் வைக்கலாமா என யோசியுங்கள். ஆனால் சுற்றுலா போய்வந்த படங்களை தைரியமாக கிலவுட்டில் ஏற்றலாம். கிலவுட்டில் சேமிக்கும் முன் தகவலின் முக்கியத்துவம் பற்றி யோசித்து பார்த்து முடிவெடுக்கவும்.
விதிமுறைகளை படியுங்கள்.
பெரும்பாலும் இணையசேவைகளை பயன்படுத்தும் போது, விதிமுறைகள் பகுதியில் , ‘ஒப்புக்கொள்கிறோம்’ எனும் வாசகத்தை நம்மை அறியாமல் கிளிக் செய்து விடுகிறோம். பெரும்பாலான சேவைகளை பொருத்தவரை அவர்கள் விதிக்கும் விதிமுறைகளை ஏற்பதை தவிர வேறு வழி கிடையாது தான். ஆனால் குறைந்த பட்சம் விதிமுறைகளை படித்து பார்ப்பது நல்லது தானே. அப்போது தானே என்ன வகையான உரிமைகளும் நிபந்தனைகளும் இருக்கின்றன என்று தெரியும். அதிலும் குறிப்பாக கிலவுட் சேவையில் அவற்றுக்கான விதிமுறைகளை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். முடிந்தால் போட்டி அல்லது மாற்று நிறுவனங்களின் விதிமுறைகளையும் படித்து பாருங்கள். இது அலுப்பூட்டலாம் ஆனாலும் பின்னாளில் உங்களுக்கு பயன்படக்கூடிய தகவல்கள் முன்கூட்டிய தெரிந்து கொள்ளலாம்.
பாஸ்வேர்டு எச்சரிக்கை.
கிலவுட் சேவையை பயன்படுத்த தீர்மானத்ததுமே அடுத்த நடவடிக்கை உரிய பாஸ்வேர்டை தேர்வு செய்வது தான். பாஸ்வேர்டுகள் எளிதில் யூகிக்க முடியதாதாக இருக்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தப்பட்டாலும் பலரும் பாஸ்வேர்டு உருவாக்கத்தில் தீவிரம் காட்டாமல் சோமபலையே வெளிப்படுத்துகின்றனர். எனவே பாதுகாப்பான பாஸ்வேர்டை உருவாக்குவதில் அக்கரை காட்டுங்கள். அதோடு பல நேரங்களில் செய்யக்கூடியது போல் உங்கள் இமெயில் கணக்கிற்கான பாஸ்வேர்டையோ அல்லது பேஸ்புக் பாஸ்வேர்டையோ பயன்படுத்த வேண்டாம். அது சுலபமாக இருக்கலாம். ஆனால் ஒரு சேவையில் பாஸ்வேர்டு களவாடப்பட்டால் மற்றொரு சேவையும் பாதுகாப்பற்றதாகிவிடும். கில்வுட் கணக்கிற்கு தனி பாஸ்வேர்டை உருவாக்கி கொள்ளுங்கள்.
கூடுதல் பாஸ்வேர்டு.
பாஸ்வேர்டு உங்கள் கணக்கிற்கு மட்டும் தானா என்ன? நீங்கள் சேமிக்கும் கோப்புகளும் பாஸ்வேர்டு பாதுகாப்பு கொண்டதாக இருக்க வேண்டும். இல்லை என்றால் யார் வேண்டுமானாலும் அவற்றை அணுகி பயன்படுத்தும் வாய்ப்பு\ஆபத்து இருக்கிறது. இதை தவிர்க்க பாஸ்வேர்டு கொண்ட கோப்பை உருவாக்கி விட்டு அதை அணுக வேண்டியவர்களிடம் பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்ளுங்கள். முடிந்தால் என்கிரிப்ஷன் சாப்ட்வேரை பயன்படுத்தி கோப்புகளை என்கிரிப்ட் செய்து அனுப்பவும். ட்ருகிரிப்ட் போன்ற தளங்கள் இதற்கு உதவுகின்றன. ( http://www.truecrypt.org/)
பாதுகாப்பான கிலவுட் சேவை.
ஒரு சில கிலவுட் சேவைகள் கோப்புகளை சேமிக்கும் வ்சதியுடன் அவற்றை என்கிரிட் செய்யும் வசதியையும் அளிக்கின்றன. இத்தகைய சேவைகளை பயன்படுத்தலாம். இந்த சேவைகளே உங்கள் தகவல்களின் பாதுகாப்பிற்கு வழி செய்கின்றன. ஆனால் இதிலும் கூட மிகவும் முக்கியமான தகவல் என்றால் நன்றாக யோசிகவும்.
உண்மையில் கிலவுட்டில் எந்தவகையான தகவல்களை சேமிக்கலாம், எந்த வகை தகவல்களை சேமிக்க கூடாது என தெளிவான புரிதலே பாதுகாப்பை அளிக்கும்.