தொழில்நுட்ப போக்குகள் 2013.; ஆச்சர்யங்களும் அதிர்ச்சியும் நிறைந்த ஆண்டு.

மெய்நிகர் நாணயம் , அணி கணிணி , திறன் கடிகாரம் , சுய படங்கள் , தானாய் மறையும் படங்கள் , கடவுத்திருட்டு , இணைய உளவு … இவையெல்லாம் என்ன தெரியுமா ? 2013 ம் ஆண்டில் சாமன்ய மக்களையும் திரும்பி பார்க்க வைத்த தொழில்நுட்ப போக்குகள் இவை. இது வரை பெரும்பாலும் தொழில்நுட்ப பிரியர்களுக்கு மட்டுமே அறிமுகமாகி இருந்த இந்த போக்குகள் இந்த ஆண்டு வெகுஜன புழக்கத்துக்கு வந்து கவனத்தை ஈர்த்தன. தொழில்நுட்பம் எங்கேயே போய்க்கொண்டிருக்கிறது என வியக்க வைத்த , கூடவே திகைக்கவும் வைத்த இந்த போக்குகளை திரும்பி பார்க்கலாம்.
முதலில் மெய்நிகர் நாணயம். ரூபாய் தெரியும், டாலர் தெரியும் . யூரோ தெரியும் , இது என்ன புதிதாக மெய்நிகர் நாணயம் ? இணைய பணமான பிட்காயின் தான் இப்படி பலரையும் கேட்க வைத்தது. எண்ம நாணயம், டிஜிட்டல் பணம் என்றெல்லாம் குறிப்பிடப்படும் பிட்காயின் உருவம் இல்லாததாக இருந்தாலும் உலகையே ஆளக்கூடியது என பலரால் கொண்டாடப்படுகிறது. மற்ற நானயங்கள் போல எந்த ஒரு மத்திய வங்கியும் கட்டுப்படுத்தாத இந்த புதுயுக பணம் அதன் அநாமேதைய தன்மை மற்றும் கட்டணமில்லா பரிமாற்றத்திற்காக தொழில்நுட்ப பிரியர்களால் கொண்டாடப்படுகிறது. எந்த ஒரு நாட்டின் அரசாலும் வெளியிடப்படாத பிட்காயினின் மதிப்பு இணைய பரிவர்த்தனையில் ஏற்ற இறக்கத்துக்கு இலக்கானாலும் ஒரு பிட்காயினின் மதிப்பு முதல் முறையாக ஆயிரம் டாலர்களை தொட்ட போது எல்லோரும் கொஞ்சம் ஆடித்தான் போனார்கள். ஆயிரத்தை தொட்ட பிறகு சரிவை சந்தித்தாலும் எதிர்கால நாணயமாக பிட்காயின் கவனிக்கப்படுகிறது. 
பிட்காயின் போலவே கவனத்தை ஈர்த்த மற்றொரு தொழில்நுட்பம் அணி கணிணி: உபயம் கூகிள் கண்ணாடி. வியரபில் கம்ப்யூட்டிங் என்று பிரபலமாக குறிப்பிடப்படும் அணி கணிணி தொடர்பாக ஓசைப்படாமல் பல ஆண்டுகளாக ஆய்வு நடந்து வருகிறது. கம்ப்யூட்டர் போன்ற தனி சாதங்கள் தேவையில்லாமல் அணியக்கூடிய ஆடை போன்றவற்றிலேயே கணிணியின் ஆற்றலை உள்ளீடு செய்வதை தான் இப்படி சொல்கின்றனர். வெகுஜன கவனத்தை ஈர்க்க முடியாமல் ஆய்வு உலகிலேயே முடங்கி கிடந்த இந்த தொழில்நுட்பத்துக்கு கூகிள் கண்ணாடி மூலம் புத்துயிர் கிடைத்திருக்கிறது. சாதாரண மூக்கு கண்ணாடி போல அணிந்து கொண்டு அதிலேயே இணையத்தில் உலாவலாம், காமிராவாக காட்சிகளை கிளிக் செய்யலாம், ஒலிப்பதிவு செய்யலாம் என்றெல்லாம் இந்த கண்ணாடியின் மாயத்தை அடுக்குகின்றனர். கடந்த ஆண்டு கருத்தாக்கமாக அறிமுகம் செய்த இந்த கண்ணாடியை இந்த ஆண்டு கூகிள் முன்னோட்ட அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு வழங்கி அதன் பயன்பாடு பற்றிய பரபரப்பை உண்டாக்கியது.
கூகிள் கண்ணாடி அணிந்து காரோட்டிய அமெரிக்க பெண்மணிக்கு போக்குவரத்து மீறலுக்கான அபராதம் விதிக்கப்பட்டது உட்பட இந்த தொழில்நுட்பம் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்த தவறவில்லை. எதிர்காலத்தில் அணி கணிணி பரவலானால் அதில் கூகிள் கண்ணாடிக்கு பெரும் பங்கு இருக்கும். கூடவே அந்தரங்கத்துக்கும் ஆபத்து இருக்கும் என்பது வேறு விஷயம்.
கூகிள் கண்ணாடி மாயம் என்றால் ஸ்மார்ட்போன் எனப்படும் திறன்பேசி உலகில் கூகிளின் ஆதிக்கம் தான். அதாவது திறன்பேசிகளுக்கான அதன் ஆண்ட்ராய்டு இயங்கு தளம் கிட்டத்தட்ட 80 சதவீத சந்தையை கைப்பற்றியிருக்கிறது. ஸ்மார்ட்போன்களை ஆப்பிலின் ஐபோன் பிரபலாமாக்கியிருந்தால் என்ன இன்று இந்த சந்தையில் கோலோச்சுவது ஆண்ட்ராய்டு தான். சாதனம் என்று எடுத்துக்கொண்டால் சாம்சங் முன்னிலைக்கு வந்திருக்கிறது. ஆனால் போனிலேயே இமெயிலை பார்க்கமால் என்று முதலில் வியக்க வைத்த பிலாக்பெரி தடுமாற்றத்துக்கு ஆளானதும் செல்போன் என்றாலே நோக்கியா தான் என்று ஒரு காலத்தில் பேசப்பட்ட நோக்கியா மைக்ரோசாப்டால் வாங்கப்பட்டதும் இந்த ஆண்டு நிகழ்வுகளானது. 
இதன் நடுவே ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை ஒரு பில்லியன் எனும் மைல்கல்லையும் இந்த ஆண்டு எட்டியது.
ஸ்மார்ட்போன்களின் எழுச்சி ஒரு புறம் இருக்கட்டும், ஸ்மார்ட் வாட்ச் ( திறன் கடிகாரம்) பற்றியும் தான் இந்த ஆண்டு பரபரப்பாக பேசப்பட்டது. எல்லாம் பெபில் வாட்ச் செய்த மாயம். பாக்கெட்டில் இருக்கும் ஸ்மார்ட் போனை வெளியே எடுக்கமாலேயே அதில் வந்துள்ள இமெயிலையும் குறுஞ்செய்தியையும் கையில் உயர்த்தி பார்த்து கொள்வதை சாத்தியமாக்கும் பெபில் வாட்ச் இணைய நிதி திரட்ட உதவும் கிக்ஸ்டார்ட்டர் மூலம் நிதியை பெற்று அறிமுகமாகி பலரையும் கவர்ந்தது. கூகிள் ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்யப்போகிறது. சாம்சங் அறிமுகம் செய்யப்போகிறது என்றெல்லாம் பேசப்பட்டு ஸ்மார்ட் வாட்சின் செல்வாக்கு கூடியது.
இவற்றின் நடுவே குறும்பதிவு சேவையான ட்விட்டர் பங்கு சந்தையில் நுழைந்தது. பேஸ்புக்கிறகு அடுத்து பங்குசந்தைக்கு வந்திருக்கும் சமூக வலைதளம் இது. 
என்றாலும் ட்விட்டரை விட அதிகம் கவனத்தை ஈர்த்தது , 3 பில்லியன் டாலருக்கு பேஸ்புக் முனவந்தும் கூட அதை வேண்டாம் என நிராகரித்த ஸ்நேப்சேட் தான். அனுப்பியவுடன் குறிப்பிட்ட நேரத்திற்கு பின் தானாக மறைந்து விடும் புகைப்படங்களை பரிமாறிக்கொள்ள உதவும் இந்த செல்போன் செயலி இளைஞர்களின் புதிய கலாச்சாரமாகவே உருவெடுத்திருக்கிறது. இத்த்னைக்கும் இந்த செயலி இதுவரை டவுண்லோடுகளை தான் கண்டிருக்கிறதே தவிர லாபத்தை அல்ல. அப்படி இருந்தும் 3 பில்லியன் டாலருக்கு வாங்க முற்படும் அளவுக்கு இந்த செல்வாக்கு அதிகரித்திருப்பது ஆச்சர்யம் தான். ஆனால் என்ன செய்ய இளசுகள் எல்லாம் ஸ்னேப்சேட் வழியே தானே பேசிக்கொள்கின்றனர்.
ஸ்னேப்சேட் போன்ற புகைப்பட பகிர்வு செயலியால் இந்த ஆண்டு ஆங்கிலத்தின் சொல் வங்கி செல்பீ எம்னும் சொல்லோடு இன்னும் கொஞ்சம் வளமானது. செல்போனை கொண்டு ஒருவர் தன்னைத்தானே புகைப்படம் எடுத்து பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தை தான் இப்படி செல்பீ என்கிறனர். தமிழில் சுயபடங்கள் . ஆக்ஸ்போர்டு அகராதி இந்த ஆண்டின் சொல்லாக அங்கீகரிக்கும் அளவுக்கு செல்பீ பிரபலமானது.
இவை எல்லாம் உற்சாகம் தந்த போக்குகள் என்றால் இணையவாசிகளை கவலையில் ஆழ்த்தி இணைய கணகாணிப்பு பற்றி விழித்து கொள்ள வைத்தது ஸ்நோடன் குண்டு. முன்னாள் ஐ.எஸ்.ஐ ஊழியரும் என்.எஸ்.ஏ ஒப்பந்தாரருமான எட்வர்ட் ஸ்நோடன் அமெரிக்க உளவு அமைப்பு எப்படி இணைய நிறுவன சர்வர்களையும் இமெயில்களையும் கண்காணிக்கிறது என்பதை அம்பலமாக்கி அதிர வைத்தார். இதன் பிறகு அவர் ஓடி ஒளிய வேண்டியிருந்தாலும் கண்காணிப்பு யுகத்தின் மத்தியில் இருக்கும் திகைப்பை உலகம் உணர்ந்திருக்கிறது. இந்த கண்காணிப்பின் விளைவாக பிரேசில் போன்ற நாடுகள் தனி இண்டெர்நெட்டை உருவாக்குவது பற்றி எல்லாம் பேசத்துவங்கின. ஐக்கிய நாடுகள் சபை சார்பிலான இணைய மாநாட்டிலும் இது பற்றி தீவிரமாக விவாதிக்கப்பட்டது. 
அந்தரங்க பாதிப்பு பற்றிய கவலை போலவே இணைய்வாசிகளை திடுக்கிட வைத்த மற்றொரு நிகழ்வு பாஸ்வேர்டு திருட்டுக்கள். அதாவது கடவுச்சொல் திருட்டுக்கள். அடோப் போன்ற முன்னணி நிறுவங்களின் லட்சக்கணக்கான பயனாளிகளின் பாஸ்வேர்ட்களை தாக்காளர்கள் களவாடி இணையதளங்களில் வெளியிட்டு பகிரங்கப்படுத்தியது நாம் பயன்படுத்தும் பாஸ்ப்வேர்ட்கள் எத்தனை பலவீனமானதாக இருக்கின்றன என்று கவலை கொள்ள வைத்தன. பயோமெட்ரிக் பாஸ்வேர்ட், இரண்டு அடுக்கு பாதுகாப்பு என்றெல்லாம் இப்போது இதற்கான மாற்று வழிகளை விவாதித்து வருகின்றனர்.
2014 ம் ஆண்டு இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். 2013 ம் ஆண்டை பொருத்தவரை தமிழ் விக்கிபீடியா பாத்தாண்டு எனும் மைல்கல்லையும் தொட்ட ஆண்டாக அமைந்தது. 50,000 கட்டுரைகளுக்கு மேல் கொண்டு இந்திய மொழிகளில் தமிழ் இரண்டாவது இடத்திலும் இருக்கிறது. ஆனால் இணைய உலகின் முன்னோடி தேடியந்திரங்களில் ஒன்றாக விளங்கிய ஆல்டாவிஸ்டா ( ஆம் அப்படி ஒன்று இருந்தது ) இந்த ஆண்டோடு மூடு விழா கண்டது இணைய வரலாற்றை அறிந்தவர்களுக்கு வருத்தம் தரக்கூடியது.
 

———-

நன்றி ; தமிழ் இந்து நாளிதழ்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s