குறும்பதிவு சேவையான டிவிட்டரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த கேத்லீன் கோமியன்ஸ் என்பவர் 34 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட தனது சகோதரரின் மரணத்திற்கு டிவிட்டர் மூலம் நியாயம் கேட்டு வருகிறார். இறந்து போன தம்பி இப்போது டிவிட்டர் செய்வது போலவே அமைதுள்ள அந்த குறும்பதிவுகள் 1980 ல் கொல்லப்பட்ட பில் கோமியன்ஸ் மீது பரிவை உண்டாக்குகிறது.
யார் இந்த பில் கோமியன்ஸ்? அமெரிக்காவின் ஓஹியோவை சேர்ந்தவர் பில். அவருக்கு 14 வயது இருந்த போது ஓஹியோவின் மேற்கு கொலம்பஸ் பகுதியில் கொல்லப்பட்டார். பில் அணிந்திருந்த ஸ்கார்ப்பாலேயே அவர் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டார். கொலை செய்தவர்கள் யார் ? என்பதும் தெரியவில்லை. கொலைக்கான காரணமும் தெரியவில்லை. போலீசார் நடத்திய விசாரணையிலும் எதுவும் தெரியவில்லை. அவர் கொலைக்கான காரணம் விலகாத மர்மமாகவே இருந்தது. கொலையாளிகளை நெருங்கக்கூடிய முக்கிய துப்பு கிடைக்காததால் போலீசாரும் இந்த வழக்கை விட்டு விட்டனர். ஆக தீர்க்கப்படாத வழக்குகளின் பட்டியலில் பில் கோமியன்ஸ் கொலையும் சேர்ந்தது .மறக்கப்பட்டு விட்டது. இனி ஒரு போதும் அந்த வழக்கு மீண்டும் நினைக்கப்பட வாய்ப்பே இல்லை எனும் நிலையில் 34 ஆண்டுகள் கழித்து பில்லின் தங்கை கேத்லீன் டிவிட்டர் மூலம் இந்த வழக்கு பற்றி மீண்டும் பேச வைத்திருக்கிறார்.
டிவிட்டரில் பில் கோமியன்ஸ் பெயரிலேயே ஒரு கணக்கை துவக்கியவர் அவர் தனது எண்ணங்களை பகிர்ந்து கொள்வது போலவே குறும்பதிவுகளை வெளியிடத்துவங்கினார்.
’ 34 ஆண்டுகளுக்கு முன் நான் கொல்லப்பட்டேன். எனக்கு 14 வயது, முழு வாழ்க்கையும் என் முன்னர் இருந்தது. என்னை கொன்றவர்களை என் குடும்பம் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறது ‘ – இது தான் பில்லின் முதல் பதிவு.
அதன் பிறகு பில் கல்லரையில் இருந்து அல்லது சொர்கத்தில் இருந்து டிவிட்டர் செய்தால் எப்படி இருக்குமோ அதே உணர்வை தரக்கூடிய வகையில் தொடர்ந்து வெளியான குறும்பதிவுகள் அமைதிருந்தன. ஒரு சில குறும்பதிவுகளில் பில் தன்னைப்பற்றியும் தனது குடும்பம் பற்றியும் தெரிவித்திருந்தார். சில குறும்பதிவுகள் அவரது கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதன் வேதனையை வெளிப்படுத்தின.
‘பிறந்த நாள்கள் இனிமையானவை. என் பிறந்த தினம் நாளை வருகிறது. பரிசுகள் எதுவும் வேண்டாம். எனக்கு தேவைப்படுவதெல்லாம் பதில்கள் தான் ‘. இப்படி ஒரு பதிவு அமைந்திருந்தது. ’ 34 ஆண்டுக்கு முன் அமைதியாக்கினர், இப்போது முன் எப்போதையும் விட நான் உரக்க பேசுகிறேன்’ என்று இன்னொரு பதிவு தெரிவித்தது.
ஒரு சில குறும்பதிவுகள் தன்னை கொன்றவன் அல்லது கொன்றவர்களுடன் அவர் நேரடியாக பேசுவது போல இருந்தன.
’ எனக்கு நல்ல வழ்க்கை இருந்தது. நான் மகிச்சியாக இருந்தேன். நண்பர்கள் இருந்தனர். எனக்கு திறமை இருந்தது, உன்னை வெறிகொள்ள வைக்கும் அளவுக்கு நான் செய்தது என்ன ? என்று பில் கேட்டிருப்பதை படிக்கும் போது உருக்கமாக இருக்கிறது.
‘ நீ மற்றவர்களை கொன்றாயா? அதன் பிறகு மாறினாயா? உனக்கு குடும்பம் ,குழந்தைகள் இருக்கின்றனவா? அவர்களை யாரேனும் கொன்றனரா? – இப்படி ஒரு பதிவு கேட்கிறது என்றால் இன்னொரு பதிவு , ‘ நீ என்னை கொலை செய்தாய். 34 ஆண்டுகள் அதற்காக தண்டிக்கப்பட்டாமல் இருக்கிறாய். இதை நீ படித்துக்கொண்டிருக்க வேண்டும். இது தான் உன் குற்றதை ஒப்புக்கொள்ள வேண்டிய நேரம்’ என இன்னொரு பதிவு உணர்ச்சி பொங்க கொலைகாரனுக்கு கோரிக்கை வைக்கிறது. இதே வேண்டுகோள் வேறு வார்த்தைகளிலும் வெளிப்படுகின்றன.’ நீ தான் எனது நீதிபதியாக இருந்தாய். எனக்காக வாதாடினாய். எனக்கான தூக்கு தண்டனையை நிறைவேற்றினாய் , ஏன்? ‘ – இப்படி ஒரு குறும்பதிவு கேட்கிறது.
இடையே பில்லின் குடும்ப புகைப்படங்களும் அவற்றுடன் குடும்பம் பற்றிய நினைவுகளும் வெளியாகின்றன. அந்த பதிவுகள் பில்லின் இழப்பை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளன. இந்த டிவிட்டர் பக்கத்தை பின்பற்ற வேண்டும் எனும் ஈடுப்பாட்டையும் ஏற்படுத்துகின்றன.
இவற்றுக்கு மத்தியில் பில் விடாமல் தனது கொலையாளிகளை கண்டுபிடிப்பதற்கான கோரிக்கையை வைத்துக்கொண்டே இருக்கிறார்.
நிச்சயம் டிவிட்டர் பயன்பாட்டில் இது ஒரு மைல்கல் முயற்சி தான். பில்லின் தங்கை கேத்லீன் சகோதரரின் கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க வேண்டும் எனும் கோரிக்கையை மிக அழகாக குறும்பதிவுகளாக வலிறுத்தி வருகிறார். கூடவே சகோதரரின் நினைவையும் குறும்பதிவுகளாக புதுப்பித்து வருகிறார்.
‘ அவரை கொன்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இன்னும் இருக்கின்றனர். ஆக யாருக்கோ இது பற்றி தெரியும். மேலும் என் சகோதரரிடம் சொல்வதற்கு ஒரு கதை இருக்கிறது. அதை எல்லா வழிகளிலும் சொல்ல முயல்வேன்’ என்று கேத்லீன் இந்த டிவிட்டர் முயற்சி பற்றி குறிப்பிட்டுள்ளார்.
பாசகார தங்கை .தம்பிக்காக போராடும் தங்கை.
பில்லின் டிவிட்டர் முகவரி; https://twitter.com/BillComeans
நிச்சயம் இதற்கு ஒரு முடிவு இருக்கும் அந்த சகோதரியின் போராட்டம் வெற்றி பெரும் . அப்படி இல்லை என்றால் சமுக வலைதளங்கள் தனது தோல்வியை அந்த சகோதரியிடம் தோற்றத்தை ஒப்புகொள்ள வேண்டும்
உண்ர்வ்ய் பூர்வமான் இந்த பதவி தங்களுக்கு பிடித்திருப்பதற்கு மகிழ்ச்சி. இந்த முய்றசியில் வெற்றி தோல்வியை மீறி , இது சாமான்யர்களுக்கு சமூக ஊடக்ம் தரும் புதிய வாய்ப்புகளில் ஒன்றாகவே கருதுகிறேன். ஒரு தமக்கை , மறைந்த சகோதரனுக்காக நியாயம் கேட்பது வேறு எப்படி சாத்தியம்?எனவே சமூக ஊடகத்தின் சக்தியை போற்றுவோம்.
அன்புடன் சிம்மன்
அன்புடன் சிம்மன்