ஆன்லனிலேயே புகைப்படம் எடுக்க கற்றுக்கொள்ள உதவும் இணைய காமிரா !

animation_propellorஇப்போதெல்லாம் யாரும் புகைப்படம் எடுக்க தனியே கற்றுக்கொள்வதில்லை. புகைப்படம் எடுக்க வேண்டும் என்றால் இருக்கவே இருக்கிறது கையடக்க டிஜிட்டல் காமிரா. இல்லை என்றால் இருக்கவே இருக்கின்றன காமிரா போன்களும் ஸ்மார்ட் போன்களும். டிஜிட்டல் காமிராவை விட ஸ்மார்ட்போன் காமிரா மூலம் புகைப்படம் எடுப்பது இன்னும் சுலபமானது. செல்போனை அப்படியே உயரே பிடித்து கிளிக் செய்தால் புகைப்படம் ரெடி.

மலிவு விலை டிஜிட்டல் காமிராக்களும் ஸ்மார்ட்போன்களும் எல்லோரையும் இந்நாட்டு புகைப்பட கலைஞர்களாக்கி இருக்கிறது. ஆனால் என்ன தான் இருந்தாலும் பயிற்சி இல்லாத சாமான்யர்கள் எடுக்கும் புகைப்படங்களுக்கும் , அனுபவம் மிக்க புகைப்பட கலைஞர்கள் எடுக்கும் புகைப்படங்களுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள் இருக்க தான் செய்கிறது. புகைப்படம் எடுப்பது என்பது ஒரு கலை அல்லவா? அதற்கு பயிற்சியும் அனுபவமும் தேவை தானே!.

பெரும்பாலும் டிஜிட்டல் காமிராக்களில் எடுக்கப்படும் புகைப்படங்கள் அவறுக்கான ஒளி அளவு போன்ற விஷயங்களுக்கான தேர்வுகள் இல்லாமல் தானியங்கி அமைப்பில் எடுக்கப்படுபவை.அதாவது சுற்றுப்புறம் மற்றும் ஒளி அமைப்பிற்கு ஏற்ப காமிராவே எல்லாவற்றையும் அமைத்து கொள்கிறது. எனினும் இந்த ஆட்டோபோக்கஸ் வசதியை தாண்டி சூழ்நிலைக்கேற்ப அழகான புகைப்படங்களை எடுக்க விரும்பினால் , புகைப்பட கலையின் அடிப்படையை கற்றுக்கொள்வதை தவிர வேறு வழியில்லை. அதிலும் நவீன் டி.எஸ்.எல்.ஆர் காமிராக்களில் உள்ள வசதி மற்றும் லென்சுகளின் துல்லியத்தை முழுவதுமாக பயன்படுத்திக்கொண்டு அருமையான புகைப்படங்களை எடுக்க இவை மிகவும் அவசியம்.

ஆம், புகைப்படக்கலையின் அடிப்படையை தெரிந்து கொண்டால் நன்றாக தான் இருக்கும் என்று நினைத்தால் அதற்காக நீங்கள் எங்கேயும் கூட செல்ல வேண்டாம். இருந்த இடத்தில் இருந்தே இணையத்திலேயே புகைப்படக்கலையின் அடிப்படையை கற்றுக்கொள்ளலாம்.

இணையத்தில் கற்கலாம்

இணையத்தில் புகைப்படம் எடுக்க கற்கலாம் என்றவுடன் இணையதளம் மூலமான வகுப்புக்களையோ அல்லது யூடியூப் மூலமான வீடியோ பாடங்களையோ நினைத்துக்கொள்ள வேண்டாம். இது இணைய காமிரா மூலமே புகைப்பட எடுக்க கற்றுக்கொள்ளும் புதுமையான வழி ! ஆனால்,காமிரா இல்லாமல் புகைப்படக்கலையை கற்பது எப்படி? அதனால் தான்  வர்ச்சுவல் காமிரா என்று சொல்லப்படும் இணைய காமிரா உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த இணைய காமிரா மூலமாகவே புகைப்படம் எடுக்க கற்றுக்கொள்ளலாம். புகழ்பெற்ற காமிரா தயாரிப்பு நிறுவனமான கேனான் இந்த இணைய காமிராவை உருவாக்கியுள்ளது. கேனான் நிறுவனத்தின் கண்டா நாட்டு பிரிவு சார்பாக இந்த இணைய காமிராவுக்கான இணையதளமும் , அதன் மூலமான புகைப்பட அடிப்படை பயிற்சியும் உருவாக்கப்பட்டுள்ளது. இணையதளத்தின் முகவரி ;http://canonoutsideofauto.ca/

இணைய காமிரா

ஆட்டோ மோடில் அழகான புகைப்படங்களை எடுக்கலாம் என்றாலும் , உண்மையான படைப்பாற்றல் இந்த ஆட்டோ மோடில் இருந்து வெளியேறும் போது தான் சாத்தியம் என்பதை உணர்த்தும் இந்த இணையதளத்தில் அதற்கான அடிப்படை பாடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு அருமையான புகைப்படம் எடுக்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் சரியான ஒளி அளவு இருக்க வேண்டும். புகைப்பட கலை மொழியில் இதை எக்ஸ்போஷர் என்கின்றனர். அதாவது புகைப்படம் எடுக்கும் போது காமிராவின் சென்சார் உள்வாங்கி கொள்ளும் வெளிச்சத்டின் அளவு. அதிக வெளிச்சம் புகைப்படத்தை வெளிரிப்போக செய்யும். குறைவான வெளிச்சம் மணிரத்னம் திரைப்படம் போல இருளாக தோன்றச்செய்து விடும். ஆனால் சரியான் அளவு வெளிச்சத்தை அனுமதித்தால் புகைப்படம் அட்டகாசமாக இருக்கும். இது காமிரா கலையின் முதல் விதி.

அடுத்ததாக வருவது அப்பர்ச்சர் ( aperture  ) . லென்ஸ் வாயிலின் கதவை ஒளியின் தேவைக்கேற்ப பெரிதாக்கவோ சிறியதாக்கவோ இந்த வசதி பயன்படுகிறது. இதை சரி செய்வதன் மூலம் புகைப்படத்தின் பின்னணி தோற்றத்தை மாற்றி அமைக்கலாம். காமிரவை நோக்கி வரும் வெளிச்சம் சென்சாரில் பதிவாவதற்கு முன்னர் அது ஷட்டர் வேகத்திற்கு உட்பட்டாக வேண்டும். ஒளி உள்ளே வர எவ்வளவு நேரம்( நொடியிலும் குறைவு )  அனுமதிகப்படுகிறது என்பதை ஷட்டரின் வேகமே தீர்மானிக்கிறது. அதன் பிறகு சென்சார் உள்வாங்கி கொள்ளும் ஒளியின் அளவை ஐ.எஸ்.ஓ செட்டிங் மூலம் தீர்மானிக்கலாம். ஒரு நல்ல புகைப்படம் எடுக்க இவை தான் பால பாடங்கள்.

ஆன்லைனில் பயிற்சி

இந்த பாலபாடங்களை தெரிந்து கொண்டவுடன், அவற்றை அப்படியே பயிற்சி செய்தும் பார்க்கலாம். இதற்காக தான் அழகான இணைய காமிரா இருக்கிறது. புகைப்பட பாடங்களுக்கு அடுத்த கட்டமாக இந்த காமிரா மூலம் இணையத்திலேயே புகைப்படம் எடுத்து பயிற்சி செய்யலாம். பிலே பகுதியை கிளிக் செய்தால் இந்த இணைய காமிரா தோன்றுகிறது. முகப்பு பக்கத்தில் டிஜிட்டல் காமிரா நம் முன் இருப்பது போல தோன்றும் இணைய காமிராவில் வெளிச்சத்துக்கான அளவை தேர்வு செய்யும் வசதி, அப்பர்ச்சரை சரி செய்யும் வாய்ப்பு மற்றும் ஷட்டர் வேகத்தை அமைக்கும் வசதிகள் இருக்கின்றன. காமிராவை கையால் இயக்குவது போல இந்த இணைய காமிராவில் மவுஸ் மூலம் இந்த மாற்றங்களை செய்யலாம். காமிரா திரையில் ஒரு மாதிரி புகைப்படம் தோன்றும். எல்லாம் சரியாக அமைத்த பின் கிளிக் செய்தால் நாம் எடுத்த புகைப்படம் கீழே உள்ள பகுதியில் தோன்றும். அந்த புகைப்படம் எப்படி எடுக்கப்பட்டுள்ளது , அதில் எவை சரியாக இல்லை போன்ற குறிப்புகளும் இடம் பெறுகிறது. புகைப்படத்தின் துல்லியத்தை வைத்தே நாம் என்ன தவறு செய்தோம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

எத்தனை முறை வேண்டுமானால் அளவுகளை மாற்றி புகைப்படம் எடுத்து பார்க்கலாம். மாதிரி படம் மாறாதே தவிர நாம் எடுக்கும் விதத்திற்கு ஏற்ப அவற்றின் துல்லியத்தில் மாற்றங்களை காணலாம்.

புகைப்பட சவால்

புகைப்பட அடிப்படையை படிப்பதுடன் அவற்றை உடனுக்குடன் காமிரா மூலமே சோதித்து பார்க்க முடிவது தான் இந்த இணைய காமிராவின் சிறப்பமசம். ஆன்லைனிலேயே படம் எடுத்து பார்க்க முடிவது கூடுதல் சுவாரஸ்யத்துடன் புகைப்படக்கலை அடிப்படைகளை ஆர்வத்துடன் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும். இந்த புகைப்பட பயிற்சிக்கு பிறகு மேலும் அடிப்படை தகவல்கள் மற்றும் புகைப்பட குறிப்புகளை அறிய விரும்பினால் அதற்கான பகுதிகளும் இருக்கின்றன. அடிப்படைகள் அத்துபடியானால் இந்த தளம் மூலமே உங்களை சோதனைக்கு உட்படுத்திக்கொள்ளலாம். இதற்காக புகைப்பட சவால் பகுதி அமைக்கப்பட்டுள்ளது. கேனான் காமிராக்களுக்கான விளம்பர நோக்கிலான தளம் என்றாலும் விளம்பர நெடி இல்லாமல் புகைப்படக்கலையின் அடிப்படையை சுவாரஸ்யமாக விளக்கும் வகையில் இந்த தளம் இருக்கிறது.

மேலும் சில தளங்கள்

புகைப்பட பிரியர்களுக்கு ஆர்வம் அளிக்க கூடிய மேலும் சில இணையதளங்களும் இருக்கின்றன. போன்ஹெட் ( http://www.photonhead.com/simcam/)  இணையதளம் புகைப்படக்கலையின் அடிப்படையை தனித்தனி தலைப்புகளாக விளக்குகிறது. புகைப்படங்களுடன் இந்த விளக்கங்கள் அமைந்துள்ளன. இதிலும் புகைப்படங்களை எடுத்துப்பார்க்கலாம். இணைய காமிராவின் தோற்றம் இல்லாவிட்டாலும் எல்லா வகையான அளவுகளையும் தேர்வு செய்து புகைப்படத்தின் தன்மையை பார்க்கலாம். புகைப்படக்கலை தொடர்பான விரிவான குறிப்புகளும் இருக்கின்றன.

புகைப்படங்களின் முதல் எதிரியான காமிரா அசைவதை எப்படி தவிர்ப்பது உள்ளிட்ட பயனுள்ள குறிப்புகளை கற்றுக்கொள்ளலாம். காமிரா வாங்குவதற்கான கையேடு பகுதியும் இருக்கிறது. இதே போல கேமிராசிம் (http://camerasim.com/)  தளமும் இணைய காமிரா வசதியுடன் புகைப்பட பயிற்சி அளிக்கிறது. நிக்கானின் லென்ஸ் (http://imaging.nikon.com/lineup/lens/simulator/ )  சிமுலேட்டரையும் முயன்று பார்க்கலாம்.

 

ஆக நீங்கள் ஏற்கனவே நல்ல டிஜிட்ட்ல காமிரா வாங்கி வைத்திருந்தாலும் சரி, அல்லது புதிய காமிரா வாங்கும் எண்ணம் இருந்தாலும் சரி இந்த இணைய காமிரா பயிற்சிகள் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். கற்றுக்கொண்டு கிளிக் செய்து பாருங்கள்.

 

——

நன்றி ; தமிழ் கம்ப்யூட்டர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s