பயோடேட்டாவில் கவனிக்க வேண்டியவை; உதவும் இணையதளம்

உங்கள் பற்பசையில் உப்பு இருக்கிறதா ? என்று ஒரு பற்பசை விளம்பரத்தில் கேட்கப்படுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். பற்பசைக்கும் உப்புக்கும் உள்ள தொடர்பை விட்டு விடுங்கள் ,நீங்கள் வேலை தேடுபவராக இருந்தால் உங்கள் பயோ டேட்டாவில் தேவையான குறிச்சொற்கள் இருக்கின்றனவா ?என்று பார்த்துக்கொள்ளுங்கள். சரியான குறிச்சொற்கள் (கீவேர்ட்ஸ்  ) இடம் பெற்றிருப்பதும் இல்லாமல் இருப்பதும் அநேகமாக உங்களுக்கு வேலை கிடைப்பதையும் கிடைக்காமல் இருப்பதையும் தீர்மானிக்கலாம். ஆகவே அடுத்த முறை வேலைக்கான விண்ணப்பம் அனுப்பும் போது , பயோடேட்டாவில் சரியான குறிச்சொற்கள் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் . சரியான குறிச்சொற்கள் என்றால் நீங்கள் விண்ணப்பிக்கும் வேலை மற்றும் உங்கள் திறமை தொடர்பான குறிச்சொற்கள்.

இணையத்தில் தகவல்களை தேடும் போது குறிச்சொர்களில் கவனம் செலுத்த வேண்டும் சரி, ஆனால் வேலைக்கான விண்ணப்பிக்கும் போது ஏன் குறிச்சொற்களில் குறியாக இருக்க வேண்டும் ? ஏனெனில் உங்கள் விண்ணப்பம் முதல் தடையை தாண்டி செல்வதற்கு குறிச்சொற்கள் அவசியம். முதல் தடை என்பது பயோடேட்டாக்களை பரிசிலீத்து தேர்வு செய்யும் சாப்ட்வேர். ஆம் பெரும்பாலான நேரங்களில் அதிலும் குறிப்பாக பெரிய வர்த்தக நிறுவனங்களில் வேலைக்கான விண்ணப்பங்களை சாப்ட்வேரே முதலில் படித்துப்பார்க்கின்றன. வந்து குவிந்த விண்ணபங்களில் இருந்து இந்த சாப்ட்வேர் தேர்வு செய்து தரும் விண்ணப்பங்களை தான் நிறுவன மேலதிகாரி கவனத்தில் எடுத்துக்கொள்வார். ஆக, சாப்ட்வேர் கண்ணுக்கு உங்கள் பயோடேட்டா சிறந்ததாக தோன்றாவிட்டால் , அது நிராகரிக்கப்பட்டு விடலாம். நீங்கள் உண்மையிலேயே தகுதியான நபராக இருந்தாலும் பயனில்லாமல் போகலாம்.

சரி, நிறுவனங்கள் ஏன் இப்படி சாப்ட்வேரை நம்புகின்றன என்று கேட்கலாம். இதற்கான பதில் மிகவும் எளிதானது. யோசித்துப்பாருங்கள், பெரிய நிறுவனத்திற்கு நூற்றுக்கணக்கில் , ஏன் ஆயிரக்கணக்கில் விண்ணப்பங்கள் வந்து குவியலாம். அவற்றில் தகுதியான நபர்களின் பயோடேட்டாக்களை தேர்வு செய்வது சவாலானது தான். சவாலானது மட்டுமா ? பல நேரங்களில் பொறுமையை சோதித்துவிடக்கூடும். அதனால் தான் , அதிக அளவில் விண்ணப்பங்களை பெறக்கூடிய நிறுவனங்கள் முதல் கட்டத்தேர்வை சாப்ட்வேரிடம் ஒப்படைத்து விடுகின்றனர். இந்த சாப்ட்வேர்களிடம் பணிக்கான தகுதியை தீர்மானிக்கும் குறிச்சொற்களை சமர்பித்தால் போதும் அவை விண்ணப்பங்களில் அந்த குறிச்சொற்களை தேடிப்பார்த்து பொருத்தமானவற்றை வடிகட்டித்தந்துவிடும். இதனால் மேலதிகாரியின் சுமை குறையும். அதன் பிறகு மேலதிகாரி அவற்றை சுலபமாக பரிசிலித்துக்கொள்வார்.

சாப்ட்வேருக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதியை புரிய வைப்பதற்காக , வேலைக்காக எதிர்பார்க்கப்படும் திறமை மற்றும் தகுதியை உணர்த்தக்கூடிய சொற்களை தேர்வு செய்து வழங்குவார்கள். இத்தகைய குறிச்சொற்கள் இருந்தால் தான் சாப்ட்வேரின் கண்ணுக்கு நீங்கள் தகுதியானவராக தோன்றுவீர்கள்.

இப்போது பயோடேட்டாவில் வேலைக்கு பொருத்தமான குறிச்சொற்கள் இருப்பதன் அவசியம் புரிந்திருக்கும். சரி, வேலைக்கான சரியான குறிச்சொற்களை தெரிந்து கொள்வது எப்படி? கவலையே வேண்டாம் , வேலைக்கு விண்ணப்பிக்க உதவுவதற்காக இணையதளங்கள் இருப்பது போல , இதற்காகவும் இணையதளங்கள் இருக்கின்றன. இந்த இணையதளங்களில் பயோடேட்டாவை சமர்பித்தால் அதில் தேவையான குறிச்சொற்கள் இருக்கின்றனவா ? என்று இவை பரிசோதித்து சொல்கின்றன. ஜாப்ஸ்கேன் (http://www.jobscan.co/ )  இணையதளம் இதை தான் செய்கிறது. 90 சதவீத பெரிய நிறுவனங்கள் பயோடேட்டாக்களை பரிசிலிக்க சாப்ட்வேரை தான் பயன்படுத்துகின்றன என்று எச்சரிக்கும் இந்த தளம் இரண்டே நொடிகளில் உங்கள் பயோடேட்டாவை அலசிப்பார்த்து அது சரியாக இருக்கிறதா ? என்று சொல்லி விடுவதாக உறுதி அளிக்கிறது. இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் பயோடேட்டாவை அதற்குறிய கட்டத்தில் சமர்பித்து அருகே உள்ள கட்டத்தில் விண்ணப்பிக்கும் பணிக்கான வரையரையை குறிப்பிட வேண்டும். பின்னர் 2 நொடியில் உங்கள் ப்யோடேட்டா எந்த அளவுக்கு பொருத்தமானதாக இருக்கிறது எனும் அறிக்கையை தருகிறது. அதை வைத்துக்கொண்டு உங்கள் பயோடேட்டா சரியாக இருக்கிறதா ,இல்லை அதில் மாற்றங்கள் தேவையா என தீர்மானித்துக்கொள்ளலாம். இந்த தளத்திலேயே , பயோடேட்டா சரியான குறிச்சொற்களை சேர்ப்பது தொடர்பான ஆலோசனை வழங்கும் கட்டுரைகளுக்கான இணைப்புகளும் தரப்பட்டுள்ளன.

சரியான குறிச்சொற்களை கண்டுகொள்ள நிபுணர்கள் எளிமையான வழிகளையும் சுட்டிக்காட்டுகின்றனர். முதலில் வேலைக்கான விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிக்கான வரையறைகளை படித்துப்பார்த்து அவை தொடர்பான கல்வித்தகுதி மற்றும் திறமையை குறிக்கும் சொற்கள் இடம்பெற வேண்டும் என்கின்றனர். அதே போல உங்கள் துறை சார்ந்த பொதுவான வார்த்தைகள் மற்றும் நிறுவன அதிகாரி எதிர்பார்க்கும் தகுதி தொடர்பான சொற்கள் இருக்க வேண்டும். ஆனால் இந்த குறிசொற்கள் திறமை சார்ந்த்தாக இருக்க வேண்டும். மானே தேனே பாணியில் சேர்த்துக்கொண்டால் நிராகரிக்கப்படலாம்.

அதே போல படங்கள் மற்றும் வரைகலை போன்ற அலங்காரங்களை தவிர்ப்பதும் நல்லது என்கின்றனர்.

 

—————
நன்றி; தமிழ் இந்து நாளிதழ்

2 responses to “பயோடேட்டாவில் கவனிக்க வேண்டியவை; உதவும் இணையதளம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s