கடந்த சில வாரங்களாக இணையத்தில் எங்கு திரும்பினாலும் , முதல் டிவீட் பற்றிய பதிவுகள் தான் கண்ணில் பட்டுக்கொண்டிருந்தன. பிரபலங்களின் முதல் டிவிட்டர் செய்தியை அறிய விருப்பமா? இது தான் இவர்களின் முதல் டிவிட்டர் செய்தி ! என்பது போன்ற விதவிதமான தலைப்புகளில் முதல் டிவீட் தொடர்பான கட்டுரைகளும் பதிவுகளும் அமர்களப்பட்டன. இங்கே இந்தியாவில் , பாலிவுட் பிரபலங்களின் முதல் ட்வீட், இந்திய சி.இ.ஓக்களின் முதல் டிவீட் போன்ற பதிவுகள் வெளியாகின.
இந்த பரபரப்புக்கு எல்லாம் காரணம் , டிவிட்டர் அறிமுகம் செய்த முதல் டிவீட்டை கண்டறிவதற்கான வசதி தான். டிவிட்டர் தனது எட்டாவது ஆண்டு விழாவை முன்னிட்டு, எல்லாம் எங்கிருந்து துவங்கிற்று என்பதை கண்டறியுங்கள் என்னும் அறிமுகத்தோடு இந்த வசதியை வழங்கியது. ( https://discover.twitter.com/first-tweet) . இந்த வசதியை வைத்துக்கொண்டு தான் , செய்தி தளங்களும் வலைப்பதிவுகளும் , ஒவ்வொரு நோக்கில் முதல் டிவிட்டர் செய்திகளை தேடிக்கண்டுபிடித்து தொகுத்து வெளியிட்டன.
இந்த முதல் குறும்பதிவுகளை எல்லாம் பார்த்தால் சுவாரஸ்யமாக தான் இருக்கின்றன. டிவிட்டர் பற்றிய ஒருவரது அறியாமையையும் புரிதலையும் இந்த முதல் குறும்பதிவுகள் வெளிப்படுத்துகின்றன. இது பற்றி தனி பதிவே எழுதலாம். ( யாரேனும் முடிந்தால் தமிழில் டிவிட்டர் பயனாளிகளின் முதல் குறும்பதிவுகளை சமர்பிக்க முடியுமா?)
——-
இது என்னுடைய முதல் குறும்பதிவு; https://discover.twitter.com/first-tweet#iamcybersimman