கூகிள் அலர்ட் சேவை சிறப்பாக பயன்படுத்தும் வழிகள்.

gogஇணையத்தில் தகவல்களை தேட அநேகமாக நீங்கள் கூகிள் தேடியந்திரத்தை தான் பயன்படுத்திக்கொண்டிருப்பீர்கள். அதே போல செய்திகளை படிக்க கூகிள் நியூஸ் சேவையும் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். கூகிள் வேறு பல சேவைகளையும் வழங்கி வருவதும் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இப்படி கூகிள் வழங்கும் எண்ணற்ற சேவைகளில் அதிகமாக பிரபலமாகாத ஆனால் மிகவும் பயனுள்ள சேவை என்று கூகிள் அலர்ட் சேவை வர்ணிக்கபடுகிறது. இந்த சேவை மூலம் நீங்கள் விரும்பும் துறை அல்லது தலைப்புகளில் எந்த செய்தியையும் தவறவிடாமல் இருக்கலாம்.

கூகிள் அலர்ட் ஒரு அறிமுகம்

 கூகிள் அலர்ட் ஒரு தானியங்கி இணைய சேவை. இணையத்தில் குறிப்பிட்ட தலைப்பிலான சமீபத்திய செய்தி அல்லது நடவடிக்கை குறித்து இந்த சேவை இமெயில் மூலம் உங்களுக்கு தகவல் தெரிவிக்கும். ஒருவிதத்தில் புதிய செய்திக்கான எச்சரிக்கை சேவை என்று இதை புரிந்து கொள்ளலாம். எதற்கு இந்த எச்சரிக்கை என்று நீங்கள் கேட்கலாம். இணையத்தில் புதிய செய்திகளை தவறவிடாமல் இருக்க என்பது தான் இதற்கான பதில்.

எண்ணற்ற செய்தி தளங்களும் , தேடியந்திரங்களும் இருக்கும் போது செய்திகளை தெரிந்து கொள்வது மிகவும் சுலபமானது தான். ஆனால் செய்திகளை தெரிந்து கொள்ள எண்ணற்ற வழிகள் இருப்பதாலேயே முக்கிய செய்திகளை நீங்கள் தவறவிடிவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளன. காரணம் நீங்கள் எப்போதுமே ஆன்லைனில் இருக்க முடியாது, அப்படியே அதிக நேரம் இணையத்தில் இருந்தாலும் எல்லா நேரங்களிலும் செய்திகளையே பார்த்துக்கொண்டிருக்க முடியாது. உங்களுக்கு தேவையான நேரத்தில் செய்தி தளங்களுக்கு சென்று பார்ப்பீர்கள். அப்போது கண்ணில் படும் முக்கிய செய்திகளை படித்து விடுவீர்கள். ஆனால் நீங்கள் பார்க்காத நேரத்தில் வெளியாகும் செய்திகள் உங்கள் கவனத்திற்கு வராமலே போய்விடும் அல்லவா? அவற்றில் சில உங்களுக்கு முக்கியமனதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கலாம். இப்படி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கும் செய்திகளை தவறவிடாமல் இருக்க கூகிள் அலர்ட் கைகொடுக்கிறது.

அலர்ட் பெறுவது எப்படி?

பொதுவாக கூகிள் அலர்ட்களை ஒருவர் தங்களுக்கு ஆர்வம் அதிகம் உள்ள துறைகள் சார்ந்த செய்திகள் தெரிவிக்கப்படுவதற்காக பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கேற்ப குறிச்சொற்களை (கீவேர்டு) தேர்வு செய்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு ஒருவருக்கு மென்பொருள் சார்ந்த செய்திகள் தேவை என்றால் மென்பொருள் (சாப்ட்வேர்) எனும் குறிச்சொற்களை தேர்வு செய்து கொள்ள வேண்டும். ஓபன் சோர்ஸ் ஆர்வலர்கள் லினக்ஸ் எனும் குறிச்சொல்லை பயன்படுத்தலாம். விளையாட்டு பிரியர்கள் கிரிக்கெட் அல்லது கால்பந்து என தேர்வு செய்து கொள்ளலாம். மாணவர்கள் நுழைவுத்தேர்வு எனும் குறிச்சொல்லை தேர்வு செய்து கொள்ளலாம். குறிச்சொற்கள் தனிநபர்கள் சார்ந்த்தாகவும் இருக்கலாம். அதாவது டெண்டுலகர் என்றோ பில் கேட்ஸ் என்றோ தேர்வு செய்து கொள்ளாலாம். குறிச்சொல்லை சமர்பித்த பின் , கூகிள் தேடியந்திரம் இந்த தலைப்பிலான செய்திகளை கவனித்துக்கொண்டே இருக்கும். எப்போது புதிய செய்தி அல்லது தகவல் வெளியானலும் உடனே உங்களுக்கு இமெயில் மூலம் தகவல் தெரிவித்துவிடும். இமெயில் பெட்டியை திறந்து பார்க்கும் போது , இந்த எச்சரிக்கை மெயில்கள் வாயிலாக புதிய செய்தியை தெரிந்து கொள்ளலாம். அவை பயனுள்ளது என தெரிந்தால் உடனே கிளிக் செய்து மூல செய்தியை விரிவாக தெரிந்து கொள்ளலாம். இல்லை சும்மா இருந்துவிடலாம்.

பயன்படுத்துவது எப்படி?

கூகிள் அலர் சேவையை பயன்படுத்துவதும் எளிதானதே. எந்த துறை அல்லது தலைப்பிலான செய்திகள் தேவை என்று தீர்மானித்தவுடன் , கூகிளில் அலர்ட் சேவை பக்கத்திற்கு (http://www.google.co.in/alerts ) செல்ல வேண்டும். இதில் சிறிய விண்ணப்ப படிவம் போன்ற கட்டங்கள் இருக்கும். அவற்றில் முதல் கட்ட்த்தில் நீங்கள் தேட விரும்பும் குறிச்சொல்லை குறிப்பிட வேண்டும். அடுத்த்தாக எந்த வகையான செய்திகள் தேவை என தீர்மானித்துக்கொள்ளலாம். எல்லா வகையான தகவல்களும் தேவையா? அல்லது செய்திகள் மட்டும் தேவையா என குறிப்பிடலாம். வலைப்பதிவு போன்றவற்றில் வெளியாகும் செய்திகளும் தேவையா , வீடியோக்கள் தேவையா என்றும் குறிப்பிடலாம். புத்தகத்தில் வெளியாகும் தகவல்களையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த தகவல்கள் எந்த மொழியில் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடலாம். குறிப்பிட்ட நாடு சார்ந்த தகவல்கள் மட்டுமே போதும் என்றும் சுருக்கி கொள்ளலாம். இந்த இரண்டும் அம்சங்களுமே இப்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இறுதியாக செய்திகள் தினம் ஒரு முறை வரவேண்டுமா ? வாரம் ஒரு முறை தேவையா என்றும் தேர்வு செய்து கொள்ளாம். எல்லா அம்சங்களையும் தேர்வு செய்த பிறகு இமெயில் முகவரியை சமர்பித்து விட்டு மற்ற வேலைகளை பார்க்கப்போகலாம் 

எதற்காக பயன்படுத்தலாம்

கூகிள் அலர்ட் சேவையை பயன்படுத்தும் போது தான் அதன் அருமையே தெரியும். குறிப்பாக செய்திப்பசி உள்ளவர்களுக்கு இது அட்சயப்பாத்திரம் போல தான். சரி, கூகிள் அலர்ட் சேவையை எதற்காக எல்லாம் பயன்படுத்தலாம். இது உங்கள் தேவை மற்றும் விருப்பம் சார்நத்து. எனினும் பொதுவாக ஒருவர் தனக்கு ஆர்வம் உள்ள துறையில் புதிய நடப்புகளில் அப்டேட்டாக இருக்க இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். அதே போல முக்கிய நிகழ்வுகளின் போது சமீபத்திய நிலவரத்தை அறியவும் பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு 200 பயணிகளுடன் மலேசிய விமானம் சமீபத்தில் மாயமானது நெஞ்சை பதைபதைக்க வைத்தது அல்லவா? இந்த விமானம் என்ன ஆயிற்று? இதற்கான தேடல் முயற்சிகளின் பயன் என்ன? போன்ற பலகேள்விகள் உங்கள் மனதில் தோன்றுவது இயல்பு. இதற்காக ஒவ்வொரு முறையும் செய்தி தளங்களை கிளிக் செய்து புதிய விவரம் இருக்கிறதா ? என தேட வேண்டாம். கூகிள் அலர்ட் மூலம் மலேசிய விமானம் தொடர்பான எச்சரிக்கையை உண்டாக்கி கொண்டாலே போதுமானது. எல்லா செய்திகளும் இமெயில் பெட்டிக்கே வந்து சேர்ந்துவிடும். இதே போல இந்திய மக்களவை தேரதலுக்கான அலர்ட்டை உருவாக்கி கொள்ளலாம். ஒலிம்பிக் போட்டி போன்றவை நடக்கும் போது அதற்கான அலர்ட்டை உருவாக்கி கொள்ளலாம். புதிய செய்திகலைப்போலவெ புதிய போக்குகளை தெரிந்து கொள்ளவும் இதை பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு சமீபத்தில் வாட்ஸப் செயலியை பேஸ்புக் விலைக்கு வாங்கியது அல்லவா? இது போன்ற நிகழ்வுகளுக்கான அலர்ட்டையும் அமைத்துக்கொள்ளலாம்.

உங்களை பற்றியும் அறியலாம். 

தனிநபர்களுக்கான அலர்ட்டையும் உருவாக்கி கொள்ள முடியும் என்று பார்த்தோம். ஆக, உங்கள் பெயருக்கு கூட ஒரு அலர்ட் உருவாக்கி கொள்ளலாம். இணையத்தில் உங்கள் பெயர் எங்கெல்லாம் குறிப்பிடப்படுகிறது என இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். அந்த அளவுக்கு நான் பெரியவன் இல்லை என நீங்கள் நினைத்தால் உங்களுக்கு பிடித்தமான பிரபலம் அல்லது நட்சத்திரம் பற்றிய செய்திகளை பின் தொடர அவர்கள் பெயரில் அலர்ட்டை அமைத்துக்கொள்ளலாம். வர்த்தக நிறுவன்ங்களில் உயர் பதவிகள் இருப்பவர்கள் தங்கள் நிறுவனம் தொடர்பான தகவல்களை கண்காணிக்கவும் இந்த சேவையை பயன்படுத்தலாம்.

வேலைவாய்ப்புக்கும் உதவும்

கூகிள் அலர்ட் சேவையை வேலைவாய்ப்புக்காகவும் கூட பயன்படுத்த முடியும். வேலை தேடுபவர்கள் , தங்கள் துறை தொடர்பான நிறுவன்ங்களுக்கான குறிச்சொற்களை சமர்பித்து , வேலைவாய்ப்புக்கான தகவல் வெளியாகும் போது தெரிந்து கொள்ளலாம். இதே போலவே இணைய தள்ளுபடிகள் சலுகைகள் பற்றியும் கூட அறிந்து கொள்வதற்கான குறிச்சொற்களை சமர்பிக்கலாம். அதிலும் குறிப்பாக உடனடியாக பயன்படுத்த வேண்டிய சலுகைகள் பற்றி உடனடியாக தகவல் அறிய இதுவே சிறந்த வழி. அதே போல மின் வணிக தளமான அமேசான் , இந்தியாவின் அமேசனான பிலிப்கார்ட் போன்றவற்றில் புதிதாக என்ன அறிமுகம் வந்துள்ளது, என அறியவும் இந்த சேவை சிறந்த வழி.

செய்தி தளங்கள் மற்றும் இணையதளங்கள் தவிர கூகிள் குழுக்களில் நடக்கும் விவாதங்களையும் கூட இந்த முறையில் பின் தொடர்லாம் தெரியுமா?

 

 இந்தியரின் உருவாக்கம்

கூகிள் அலர்ட் சேவை பற்றி சுவாரஸ்யமான தகவல் என்ன என்றால், இந்த சேவை உருவாக காரணமாக இருந்தது ஒரு இந்தியர் என்பது தான்.  கூகிள் பொறியாளரான நாகா ஸ்ரீதர் என்பவர் 2003 ல் இந்த சேவையை உருவாக்கினார். அப்போது ஈராக் போர் நட்ந்து கொண்டிருந்த நேரம். ஈராக் போர் பற்றி அறிய ஒவ்வொரு முறையும் கூகிள் செய்தி தளத்திற்கு வரவேண்டியிருப்பது அவருக்கு  சுமையாக இருந்த்து. எனவே எப்போதெலாம் ஈராக் போர் பற்றிய செய்தி வெளியாகிறதோ உடனே அது பற்றி தனக்கு இமெயில் மூலம் தகவல் தெரிவிக்க அவர் சிறிய மென்பொருள் சேவையை உருவாக்கி கொண்டார். இதை கூகிள் இணை நிறுவனர் செர்ஜி பிரெய்னிடம் விளக்கிய போது அவருக்கு இது பிடித்துப்போனது. உடனே இதை முழு சேவையாக உருவாக்க பச்சைக்கொடி காட்டினார். இப்படி உருவானது தான் கூகிள் அலர்ட் சேவை. கூகிள் நியூஸ் சேவையும் இதே போல ஒரு இந்தியரின் கண்டுபிடிப்பு தான் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம் . கிருஷண பரத் எனும் கூகிள் பொறியாளர் 2002 ல் இந்த சேவையை உருவாக்கினார்.

யாஹுவிலும் அலர்ட்

 கூகுல் அலர்ட் போலவே யாஹுவிலும் அலர்ட் பெற முடியும். http://alerts.yahoo.com/ என்ற முகவரியில் இதற்கான தகவலை பெறலாம். யாஹு தற்போது உள்ளூர் செய்திகளுக்கான புதிய அம்சத்தையும் சேர்த்துள்ளது. பருவநிலை போன்ற விவரங்களையும் பின் தொடரும் வசதி உள்ளது. சுற்றுலா தலங்களின் தகவல்களையும் இதில் பெறலாம்.

 

——–

Advertisements

4 responses to “கூகிள் அலர்ட் சேவை சிறப்பாக பயன்படுத்தும் வழிகள்.

  1. மிகவும் பயனுள்ள தகவல். கூகிள் அலர்ட் சேவை உருவாக காரணமாக இருந்தது ஒரு இந்தியர் என்பது இப்போதுதான் தெரிந்தது. பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.

    • நன்றி நண்பரே. பெரும்பாலான சாப்ட்வேர் நிறுவனங்களில் இந்தியர்கள் பணியாற்றுகின்றனர். ஆனால் இது போதாது. இந்தியர்கள் தனியாக பேஸ்பு க் போன்ற நிறுவனங்களை துவக்க வேண்டும்.

      அன்புடன் சிம்மன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s