வீடியோ கான்பிரசிங் என்பது இனியும் வர்த்தக நிறுவங்களுக்கானது மட்டும் அல்ல . இப்போது வீடியோ கான்பிரன்ஸ் வசதியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் எனும் அளவுக்கு இந்த தொழில்நுட்பம் பரவலாகி இருக்கிறது. அது மட்டும் அல்ல, வீடியோ கான்பிரன்சிங் ஜனநாயகமயமாகியும் வருகிறது. இதன் சமீபத்திய அடையாளம் வீடியோவழி உரையாடலுக்கான எளிமையான சேவையான அப்பியர்.இன் (https://appear.in/ ) .
இணையத்தில் வீடியோ வழி உரையாடல் என்றதும் கூகிள் ஹாங்கவுட்ஸ் தான் நினைவுக்கு வரலாம். ஸ்கைப் வசதியை கூட பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் இந்த இரண்டையும் விட மிக எளிதான வீடியோ சேவையாக அப்பியர்.இன் அறிமுகமாகியிருக்கிறது. ஒரு கிளிக் வீடியோ சந்திப்பு சேவை என சுய வர்ணனை செய்து கொள்ளும் அப்பியர்.இன், மிக எளிதாக வீடியோ சந்திப்புகளை திட்டமிடவும், காட்சி உரையாடலில் ஈடுபடவும் வழி செய்கிறது.
எல்லாம் எளிது
அப்பியர்.இன் சேவையின் தனித்தன்மை என்ன என்றால், இதன் மூலம் உரையாட நீங்கள் எதையும் டவுண்லோடு செய்ய வேண்டியதில்லை, எதையும் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை என்பது தான். இவ்வளவு ஏன், இந்த சேவையை பயன்படுத்த உறுப்பினராக பதிவு செய்து கொள்ளும் தேவையும் கிடையாது. உங்கள் வசம் வெப்கேம் மற்றும் மைக் இருந்தால் போதும் எடுத்த எடுப்பில் உரையாடலை துவங்கிவிடலாம். ஏனெனில் இந்த சேவை முழுக்க முழுக்க இணையவாசிகளின் பிரவுசரிலேயே செயல்படுகிறது. ஆக, பிரவுசரில் இருந்தே உரைடாலுக்கான இணைய அறையை உருவாக்கி கொண்டு விடலாம்.
இணைய அறையை உருவாக்குவது மிகவும் எளிதானது. இந்த தளத்தில் நுழைந்ததும் , அதன் மையப்பகுதியில் தேடல் கட்டம் ஒன்று வரவேற்கும். அந்த கட்டம் தான் இணைய அறைக்கான சாவி. அதில் உங்கள் பெயர் அல்லது நீங்கள் விரும்பும் பெயரை டைப் செய்தால் போதும் நீங்கள் வீடியோ உரையாடலில் ஈடுபடுவதற்கான அறை தயார். உங்களுக்கான அறை ஒரு பிரத்யேக இணைய முகவரியாக உருவாக்கி தரப்படும். யாருடன் உரையாட விருப்பமோ அவர்களுக்கு அந்த இணைய முகவரியை அனுப்பி வைக்க வேண்டும். இமெயில் வடிவில் அல்லது பேஸ்புக்கில் என எப்படி வேண்டுமானாலும் முகவரியை அனுப்பி வைக்கலாம். அவர்கள் இந்த முகவரியை தங்கள் பிரவுசரில் டைப் செய்ததும் வெப்கேம் வழியே உங்கள் வீடியோ அறையில் வந்து நிற்பார்கள். ஒரு பக்கத்தில் உங்கள் வெப்கேம் காட்சி .அருகிலேயே உங்கள் நண்பரும் வெப்கேமில் தோன்ற உரையாடலை துவங்க வேண்டியது தான். இவ்வாறு 8 நண்பர்கள் வரை உரையாடலுக்கு அழைக்கலாம். இதே போலவே உங்கள் நண்பர்கள் யாரேனும் அப்பியர்.இன் தளத்தில் வீடியோ அறையை உருவாக்கி இருந்தாலும் அதில் நீங்கள் நுழைந்து உரையாடலாம். வீடியோ உரையாடல் இந்த அளவுக்கு எளிதாகும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள் இல்லையா?
நேரடி தொடர்பு
வெப் ஆர்டிசி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது. சிக்கலான பிளாஷ் சாப்ட்வேர் பயன்பாடு இல்லாமல் பிரவுசர் மூலம் நேரடியாக சக நண்பர்களுடன் உரையாட இந்த நுட்பமே உதவுகிறது. இதில் உள்ள ஒரே குறை குரோம், பயர்பாக்ஸ் மற்றும் ஓபரா ஆகிய பிரவுசர்களில் மட்டுமே இதை பயன்படுத்த முடியும். இதில் உள்ள மற்றொரு குறை , வீடியோ அறைக்கான இணைய முகவரி தெரிந்தால் யார் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம் என்பது தான். அறைகளுக்கான பாஸ்வேர்டு பூட்டு எல்லாம் கிடையாது. ஆனால் இதை தடுப்பதற்கும் எளிதான வழி இருக்கிறது. வீடியோ அறைக்கான பெயரை பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் பதிவு செய்யாமால் பயன்படுத்தும் பறிபோனாலும் உங்களுக்கு என சொந்தமாக ஒரு வீடியோ அறை கிடைக்கும். அதை நீங்கள் கட்டுப்படுத்தவும் செய்யலாம். இவ்வாறு சொந்த அறை பெறும் போது உங்களுக்கு ஒரு கிரீடமும் கொடுக்கப்படும் .அதாவது வீடியோ உரையாடலின் போது உங்கள் அருகே ஒரு கிரீடம் தோன்றும். இது உரையாடலுக்கு நீங்கள் தான் தலைமை வகிக்கிறீர்கள் என உணர்த்தும். உங்கள் அறைக்கான பிரத்யேக பின்னணியையும் உருவாக்கி கொள்ளலாம். அதே நேரத்தில் அனுமதி இல்லாமல் வருபவர்களை வெளியேற்றவும் செய்யலாம். இப்படி உருவாக்கி கொண்ட அறையை நீங்கள் தினமும் கூட பயன்படுத்தலாம்.
நண்பர்களுடன் அரட்டை அடிப்பதில் துவங்கி குழு விவாதம் வரை பலவிதங்களில் இந்த சேவையை பயன்படுத்தலாம். கோப்புகளை பகிர்ந்து கொள்ளக்கூட இந்த சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறிய அளவிலான வர்த்தக நிறுவனங்கள் இதை வீடியோ விவாதத்திற்காக பயன்பத்திக்கொள்ளலாம். வல்லுனர்கள் அல்லது ஆலோசகர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் உரையாட இதை பயன்படுத்தலாம். நிறுவனத்திற்குள் சிறிய அளவிலான கூட்டங்களுக்கும் இது உதவும். உழியர்கள் தங்கள் இருக்கையில் இருந்தே விவாத்ததில் பங்கேற்கலாம். தினமும் காலையில் குறிப்பிட்ட நேரத்தில் கூட ஆலோசனை நடத்தலாம். ஆக, ஊழயர்கள் அலுவலகத்தில் நுழைந்ததும் வீடியோ அறைக்கூல் எட்டிப்பார்த்து அன்றைய செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொண்டு வேலையை துவக்கலாம்.
எதிர்கால திட்டம்
நார்வே நாட்டைச்சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனமான டெலினார் நிறுவனத்தின் பின்புலத்துடன் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூகில் ஹாங்கவுட் மற்றும் ஸ்கைப்பிற்கு மாற்று என்றாலும் அவற்றோடு போட்டி போடாமல் வீடியோ உரையாடலுக்கான எளிய வசதியாக இந்த சேவை தன்னை முன்னிறுத்திக்கொள்கிறது . ஏற்கனவே உலகின் 175 நாடுகளைச்சேர்ந்தவர்கள் இதை பயன்படுத்தி வருவதாக நிறுவனம் தெரிவிக்கிறது. வீட்டிலேயே வேலை செய்பவர்கள் ஒரு அறையில் பணியில் ஈடுபட்டிருக்கும் போது அடுத்த அறையில் உள்ள குழந்தை மீது ஒரு கண் வைத்திருக்க இந்த சேவையை பயன்படுத்தி வருவதாகவும் நிறுவனம் சொல்கிறது. மேலும் பல புதுமையான வழிகளில் இணையவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
எதிர்காலத்தில் இந்த வீடியோ அறையை பயனாளிகள் தங்கள் இணையதளங்களில் உள்ளீடு செய்து கொள்ளும் வசதியை அளிக்கவும் திட்டமிட்ப்பட்டுள்ளது. இதன் மூலம் இணையதள உரிமையாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடன் வீடியோவில் உரையாடலாம். ஆசிரியர்கள் போன்றவர்கள் பாடம் நடத்தவும் மாணவர்கள் சந்தேகங்களை போக்கவும் இதனை பயனப்டுத்திக்கொள்ளலாம். இவ்வளவு ஏன், மருத்துவர்கள் நோயாளிகளுக்கு ஆலோசனையும் வழங்கலாம். கிராமப்புற பகுதிகளில் இந்த வசதி பேருதவியாக இருக்கும். மற்ற பிரவுசர்களுக்கு விரிவாக்கம் செய்யவும் திட்டம் இருக்கிறது.
பயனுள்ள தளம்தான்.
இதே போல ஏர்டைம் எனும் தளம் பற்றியும் எழுதியுள்ளேன். படித்து பார்க்கவும்.
அன்புடன் சிம்மன்