வரலாறு சொல்லும் யூடியூப் வீடியோ

dயூடியூப்பில் எத்தனையோ வீடியோக்களை பார்த்து ரசித்திருப்பீர்கள்.அடுத்ததாக பார்க்க நினைக்கும் வீடியோக்களின் பட்டியலில் ,ஆம்ஸ்டர்டம் நகர் பற்றிய இந்த பழைய வீடியோவையும் சேர்த்துக்கொள்ளுங்கள். தொலைக்காட்சி ஆவனப்படம் ஒன்றின் பத்து நிமிட தொகுப்பு தான் இந்த வீடியோ (http://www.youtube.com/watch?feature=player_embedded&v=YY6PQAI4TZE ) . மற்ற யூடியூப் வீடியோக்கள் உங்களை வியக்க வைக்கும் என்றால் இந்த வீடியோ உங்களை சிந்திக்க வைக்கும். காரணம் இந்த வீடியோவின் பின்னே நெகிழ வைக்கும் கதை இருக்கிறது. நெதர்லாந்து நாட்டின் போக்குவரத்தை மாற்றிய மகத்தான வரலாறும் இதன் பின்னே இருக்கிறது.
வீடியோ பற்றி தெரிந்து கொள்ளும் முன் நெதர்லாந்து பற்றி ஒரு சுருக்கமான அறிமுகம். ஐரோப்பிய நாடான நெதர்லாந்துக்கு ஹாலந்து ஏன்று இன்னொரு பெயர் இருப்பது உங்களுக்குத்தெரிந்திருக்கும். அந்நாட்டிற்கு இன்னொரு பெயரும் உண்டு. அது சைக்கிள் தேசம். உண்மையில் இது பெயர் அல்ல ,பாராட்டு ! ஆம், நெதர்லாந்து உலகிலேயே சைக்கிளோட்டிகளுக்கு நட்பான தேசமாக குறிப்பிடப்படுகிறது. சைக்கிள் பயன்பாட்டில் மட்டும் அல்ல சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிப்பதிலும் நெதர்லாந்து முன்னோடி தேசமாக கருதப்படுகிறது.
நெதர்லாந்து நாட்டின் சைக்கிள் பயன்பாடு தொடர்பான புள்ளிவிரங்களும் தகவல்களும் உங்களை வியக்க வைக்கும். பொறாமைப்பட வைக்கும்.
அமெரிக்கா போன்ற நாடுகளிலும் அதை அப்படியே காபி அடித்து பின்பற்றும் இந்தியா போன்ற நாடுகளிலும் கார்களுக்கு தான் சாலைகளில் ராஜ மரியாதை. ஆனால் நெதர்லாந்து நாட்டு சாலைகளில் சைக்கிள்களுக்கு தான் முதல் மரியாதை. அது மட்டுமா, நெதர்லாந்து நாட்டில் மக்கள் தொகையை விட சைக்கிள்களின் எண்ணிக்கை அதிகம் என்கிறது நெதர்லாந்து சைக்கிள் பழக்கம் பற்றிய பிபிசி கட்டுரை. தலைநகர் ஆம்ஸ்டர்டம் மற்றும் தி ஹேக் ஆகிய நகரங்களில் 70 சதவீத பயணங்கள் சைக்கிள்களில் தான் மேற்கொள்ளப்படுகின்றன. அந்நாடு முழுவதும் எடுத்துக்கொண்டால் 27 சதவீத பயணங்கள் சைக்கிளில் தான் மேற்கொள்ளப்படுகின்றன என்கிறது விக்கிபீடியா கட்டுரை. நெதர்லாந்தில் நாடு முழுவதும் சைக்கிள் பாதை வலைப்பின்னல் உண்டு. ஆக, பக்கத்து நாடான பெல்ஜியம் மற்றும் ஜெர்மனிக்கு கூட சைக்கிளில் போய் வந்துவிடலாம். எல்லா இடங்களிலும் சைக்கிள்களை நிறுத்த பார்கிங் வசதி உண்டு.
பொதுவாக சைக்கிளில் செல்பவர்கள் பாதுகாப்பிற்காக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் நெதர்லாந்தில் பெரும்பாலானோர் சைக்கிளில் சென்றாலும் ஒருவரும் ஹெல்மெட் அணிவதில்லை. இதற்கு காரணம் அங்கு சைக்கிள்களுக்கு தனிப்பாதை இருப்பதால் சைக்கிள் ஓட்டிச்செல்வது பாதுகாப்பானதாக இருக்கிறது என்பது தான். மேலும் சாலை சந்திப்பு போன்ற இடங்களில் சைக்கிள் ஒட்டிகளுக்கு வழிவிட்டு கார்கள் காத்திருந்து செல்லும் அதிசயத்தையும் பார்க்கலாம். ’சைக்கிளுக்கு தான் சாலை சொந்தம், கார்கள் இங்கு விருந்தாளிகள்’ எனும் வாசகத்தையும் அங்குள்ள சாலைகளில் பார்க்கலாம்.
நெதர்லாந்தில் உள்ளவர்களிடம் நீங்கள் சைக்கிள் ஆர்வலரா என்று கேட்டால், நாங்கள் டச்சுக்காரர்கள் எனும் பதில் வரும். அதாவது சைக்கிள் ஒட்டுவது என்பது நெதர்லாந்து மக்களின் தேசிய அடையாளம். சைக்கிள் பழக்கம் அந்நாட்டின் கலாச்சாரத்தில் கலந்தது. குழந்தைகள் நடைப்பழகும் முன்னரே சைக்கிளுக்கு அறிமுகமாகி விடுகின்றனர். அப்பா அம்மா வைத்திருக்கும் சைக்கிளில் குழந்தைகளுக்கு என்று பிரத்யேக சீட் இணைப்பு இருக்கிறது. பின்னர் குழந்தைகள் வளர்த்துவங்கும் போது இயல்பாக சைக்கிள் ஓட்டத்துவங்கி விடுகின்றனர். எந்த இடத்திலும் சைக்கிள் ஓட்டிகள் சைக்கிள்கள் வாகனங்களை நினைத்து கவலைப்பட வேண்டாம். ஏனெனில் குடியிருப்பு பகுதிகளில் கார்களும் வாகனங்களுக்கும் 30 கி.மீ வேக கட்டுப்பாடு உண்டு. டச்சு மக்களின் சைக்கிள் மீதான பிணைப்பு எத்தகையது என்றால், அவர்களில் யாரும் சைக்கிளை பழையதாகி விட்டது என்று தூக்கியெறிந்து புதியவற்றை வாங்கும் மோகம் கொண்டிருக்கவில்லை. சைக்கிளை தங்களுக்கு மிகவும் நெருக்கமாக கருதுவதால் , எந்த அளவுக்கு பழையதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெருமை கொள்கின்றனர்.
கார்கள் போன்ற தனிநபர் வாகனங்களின் பெருக்கத்தால் போக்குவரத்து நெரிசல் மற்றும் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வரும் நிலையில் நெதர்லாந்து சைக்கிள் பயன்பாட்டிற்கு முன்னுதாரணமாக இருக்கிறது. நெதர்லாந்து நகர்ப்புற அமைப்பே சைக்கிள்களை மனதில் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது என்பது தான் விஷேசம். நகர வடிவமைப்பில் எப்போதுமே சைக்கிள் ஓட்டிகளின் நலனுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
அதனால் தான் சைக்கிள் பயன்பாடு என்று வரும் போது நெதர்லாந்து உதாரணமாக சொல்லப்படுகிறது. இந்த விஷயத்தில் நெதர்லாந்து உலகிற்கே வழிகாட்டி என்றும் சொல்லலாம். சரி, நெதர்லாந்து நாட்டில் இது எப்படி சாத்தியமானது ?இத்தனைக்கும் கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் நெதர்லாந்திலும் போக்குவரத்தில் கார்கள் தான் ஆதிக்கம் செலுத்தின. அதிலும் இரண்டாம் உலகப்போருக்கு பிறகு டச்சுக்கார்ர்களிடம் செல்வம் குவிந்ததால் சொந்த கார் வாங்கிவைத்துக்கொள்ளும் பழக்கம் பெரும்பாலானோரிடம் இருந்தது. இப்படி இருந்த நெதர்லாந்து சைக்கள்களுக்கு மாறியது எப்படி?
இந்த கேள்விக்கான விடை தான் மேலே குறிப்பிட்ட யூடியூப் வீடியோவில் இருக்கிறது.
1972 ம் ஆண்டு எடுக்கப்பட்ட தொலைக்காட்சி ஆவனப்படத்தில் இருந்து இதை பத்து நிமிட வீடியோவாக இந்த ’பைசைக்கிள் டச்’ ( http://bicycledutch.wordpress.com/) எனும் வலைப்பதிவாளர் பகிர்ந்து கொண்டுள்ளார். டச்சு மொழியில் இருக்கும் இந்த வீடியோவிற்கு அவரோ ஆங்கில துணைத்தலைப்புகளும் இணைத்திருக்கிறார்.
இந்த வீடியோ நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டம் அருகே உள்ள டு ஜிப் (De Pijp) எனும் நகரில் எடுக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற கார்களுக்கு எதிரான போராட்டம் தான் இந்த வீடியோவுக்கு அடிப்படை. அதிக அளவில் கார்கள் பயன்படுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு சாலை விபத்துக்களும் அதிகரித்தன. இதனால் உண்டான உயிர்பலி தான் டச்சு மக்களை கொந்தளிக்க வைத்தது. குறிப்பாக ஒரே ஆண்டில் 400 க்கும் மேற்பட்ட குழந்தைகள் சாலைவிபத்தில் பலியானது மக்களை கொதிப்பில் ஆழ்த்தியது. இந்த கோபம் தான் ’குழந்தை படுகொலையை நிறுத்துங்கள்’ (Stop de Kindermoord ) எனும் இயக்கமாக உருவெடுத்தது. சாலைப்பயணம் பாதுகாப்பற்று போனதற்கு கார்களின் பெருக்கமே காரணம் என்று உணர்ந்த டச்சுக்கார்ர்கள் கார்களுக்கு எதிராக வீதிகளில் இறங்கு போராடினர். கார்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தவர்கள் சைக்கிள்களுக்கே முன்னிரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். கார் போக்குவரத்தை குறைக்க வலியுறுத்தி, சாலைகளின் நடுவே கார்களை தலைகீழாக கவிழ்க்கும் போராட்டமும் நடத்தப்பட்டது. இந்த பின்னணியில் தான், முற்போக்கு தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று குழந்தைகள் நோக்கில் சாலைப்போக்குவரத்தை அணுகும் வகையில் ஆவனப்படம் ஒன்றை தயாரித்து ஒளிபரப்பியது. சாலைகள் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்று போனதை சுட்டிக்காட்டிய இந்த படம், சாலைகளில் குழந்தைகள் அச்சமின்றி சுதந்திரமாக விளையாடித்திரியும் காலம் வராதா ?என்றும் கேள்வி எழுப்பியது. இந்த ஆவனப்படம் மக்களை உலுக்கி எடுத்தது. நாளிதழ்களும் ஆவனப்படத்தை முனவைத்து இந்த பிரச்ச்னைப்பற்றி உருக்கமாக செய்திகள் வெளியிட்டன. ஒரு வித்த்தில் கார் போக்குவரத்து எதிராக குரல் கொடுத்த ’குழந்தை படுகொலையை நிறுத்துங்கள்’ இயக்கம் பிறக்கவும் இந்த ஆவனப்படமே காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த இயக்கம் சார்பில் போராட்டம் வலுப்பெற்றதை அடுத்து மக்கள் மனது கார் போக்குவரத்திற்கு எதிராக இருப்பதை உணர்ந்த நிர்வாகம் மெல்ல சைக்கிள்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் சாலைகளையும் ந்கர வடிவமைப்பியும் மாற்றி அமைக்கத்துவங்கியது.
இதன் பயனாகளே இன்று நெதர்லாந்து சைக்கிள் தேசமாக இருக்கிறது. நெதர்லாந்தில் சைக்கிள்களுக்கான வசதி முதல்தரமானதாக இருப்பதுடன் சைக்கிள் சுற்றுலாவும் அங்கு பிரபலமாக இருக்கிறது. ஆக வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்பவர்கள் நெதர்லாந்துக்கும் ஒரு முறை போய்வந்தால் சைக்கிளின் அருமையை உணரலாம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s