அருமையான இணைய நூலகங்கள் !

காமிக் புத்தகங்கள் ,கதைப்புத்தகங்கள் ,நாவல்கள் இவற்றோடு மின்னூல்கள் என்படும் இ-புக்களும் உங்களுக்கு தெரிந்திருக்கும். மின்னூல்களை இணையத்திலேயே படிக்கலாம் என்பதும் இப்போது ,மின்னூல்களை வாசிக்க என்றே இபுக் ரீடர்கள் இருப்பதையும் நீங்கள் அறிந்திருக்கலாம். இவ்வளவு ஏன் டேப்லெட் எனப்படும் பலகை கணிணிகளும் ஸ்மார்ட் போன்களிலும் கூட மின்நூல்களை சுபலமாக படிக்கலாம்.
எல்லா வகையான புத்தகங்களும் மின்னூல் வடிவில் கிடைக்கின்றன. இலவச மின்னூல்களும் அநேகம் இருக்கின்றன. மின்னூல்களுக்கு என்று பிரத்யேகமான இணையதளங்களும் கூட இருக்கின்றன.

எல்லாம் சரி, நீங்களும் கூட மின்னூல்களை படித்து மகிழலாம் தெரியுமா? இதற்காக என்றே உருவாக்கப்பட்டுள்ளது சில்ட்ரன்ஸ் லைப்ரரி இணையதளம்; http://en.childrenslibrary.org/. உலக சிறுவர்களுக்கான சர்வதேச சிறுவர் டிஜிட்டல் நூலகம் இது!

ஆனால் இது வெறும் இணையதளம் அல்ல; உங்களுக்கான இணைய நூலகம். புத்தகங்களை எடுத்து படிப்பதற்காக நூலகங்கள் இருக்கிறது அல்லவா? அதே போல இது மின்னூல்களுக்கான இணைய நூலகம். ஆனால் இங்கு நூல்களை வாடகைக்கு எடுக்க வேண்டாம். இந்த தளத்திலேயே படித்துக்கொள்ளலாம்.
சர்வதேச நூலகம் என்பதால் ஆங்கிலம் உள்ளிட்ட எல்லா மொழிகளிலும் இங்கு புத்தகங்கள் உண்டு என்றாலும் ஆங்கிலத்தில் தான் அதிகம். ஆனால் சித்திரகதைகளில் இருந்து சாகசக்கதைகள் , நாவல்கள், தேவதை கதைகள் என எல்லா வகையான புத்தகங்களையும் படிக்கலாம் என்பதால் இந்த நூலகம் உங்கள் வாசிப்பு ஆர்வத்துக்கு சரியான தீனியாக அமையும்.

சரி , இந்த தளத்தில் புத்தகங்களை படிப்பது எப்படி?

இந்த தளத்தில் நுழைந்ததுமே, உங்களுக்கான புத்தகங்கள் பரிந்துரைக்கப்பட்டிருப்பதை பார்க்கலாம். அவை பிடித்தமாக இருந்தால் தேவையானதை கிளிக் செய்து படிக்கலாம்.

இல்லை உங்களுக்கு விருப்பமான புத்தகத்தை தேட வேண்டும் என்றால் ,இந்த பரிந்துரை பகுதிக்கு மேலே ’புத்தகத்தை வாசிக்க’( ரீட் ஏ புக்) எனும் பகுதிக்குள் நுழைய வேண்டும்.”
இந்த பகுதியில் உங்களுக்கு தேவையான புத்தகத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

புத்தகங்களை தேர்வு செய்ய பல வழிகள் இருக்கின்றன. இடது பக்கத்தில் பார்த்தால் வயதின் அடிப்படையில் புத்தகங்களை தேர்வு செய்வதற்கான வசதி இருக்கும். வலது பக்கத்தில் பார்த்தால் கற்பனை கதைகள், சிறுவர் பாத்திரங்கள்,சித்திரக்கதைகள், விலங்கு கதைகள் போன்ற புத்தக வகைகளில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம். நடுவே பார்த்தால் புத்தகங்களை அவற்றி வண்ணங்களுக்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம். வானவில் புத்தகங்கள், சிவப்பு புத்தகங்கள், ஆரஞ்சு புத்தகங்கள் ,நீல புத்தகங்கள் எல பல வண்ண அட்டைகளை கொண்ட புத்தகங்களை பார்க்கலாம்.

அதற்கு கீழே பார்த்தால் அளவில் சிறிய புத்தகங்கங்கள், நடுத்தர மற்றும் பெரிய புத்தகங்களை தேர்வு செய்யலாம். சமீபத்தில் சேர்க்கபப்ட்ட புத்தகங்கள், விருது வென்ற புத்தகங்களையும் தேர்வு செய்யும் வசதி இருக்கிறது.
புத்தகத்தின் அட்டையை கிளிக் செய்ததும் அந்த புத்தகம் பற்றிய சுருக்கமான விவரங்கள் கொண்ட பக்கம் வரும் . புத்தகத்தின் வகை ,பதிப்பாளர், நூலகத்திற்கு வழங்கப்பட்ட விதம் ஆகிய விவரங்கள் இருக்கும். அருகே புத்தக அட்டை இருக்கும். அதில் கிளிக் செய்தால் புத்தகத்தை ஒவ்வொரு பக்கமாக படிக்கத்துவங்கலாம். புத்தகம் டவுண்லோடு ஆகும் வரை சின்ன புத்தக புழு ஒன்று திரையில் காத்திருப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
ஒவ்வொரு பக்கமாக ஒவ்வொரு புத்தகமாக படித்துக்கொண்டே போகலாம்.

இந்த இணைய நூலகத்தில் நீங்கள் உறுப்பினராகவும் சேர்ந்து கொள்ளலாம் தெரியுமா. உறுப்பினராக சேர்வது சுலபமானது.உறுப்பினராக சேராவிட்டாலும் எல்லா புத்தகங்களையும் படிக்க்லாம். ஆனால் உறுப்பினர் என்றால் கூடுதல் வசதிகள் உண்டு. அதாவது புத்தகத்தை பாதி படித்துக்கொண்டிருக்கும் போது வெளியேற நேர்ந்தால் அடுத்த முறை உள்ளே நுழையும் போது அதே பக்கத்தில் இருந்து படிக்கத்துவங்கலாம். உங்களுக்கு என்று புத்தக அலமாரியை உண்டாக்கி அதில் பிடித்த புத்தகங்களை சேமித்து கொள்ளலாம்.

இந்த நூலகம் அமெரிக்காவின் தேசிய விஞ்ஞான பவுண்டேஷன் மற்றும் மியூசியம் மற்றும் நூலக அறிவியலுக்கான கழகம் ஆகியவற்றின் கூட்டு ஆய்வு முயற்சியாகும் .மைக்ரோசாப்ட் ஆய்வுக்கும் இதில் பங்கு இருக்கிறது. மேரிலேட் பல்கலை ஆய்வுக்குழு மற்றும் இண்டெர்நெட் ஆர்கேவ் அமைப்பு இந்த நூலகத்தை உருவாக்கி உள்ளது.

உலகம் முழுவதும் உள்ள சிறுவர்கள் தாங்கள் வாழும் உலகம் பற்றி புத்தகங்கள் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது.
என்ன இந்த நூலகத்தை குறித்து வைத்துக்கொண்டீர்களா? இனி அடுத்த இணைய நூலகத்திற்கு சென்று பார்ப்போமா?

உலக டிஜிட்டல் நூலகம் (http://www.wdl.org/en/# ) , உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் கலாச்சாரம் ,வரலாறு போன்ற்றை தெரிந்து கொள்ள உதவுகிறது. இதன் முகப்பு பக்கத்தில் உலக வரைபடங்களில் நாடுகளின் பகுதி குறிப்பிடபப்ட்டுள்ளன. அவற்றில் கிளிக் செய்து தொடர்புடைய தகவல்களை படிக்கத்துவங்கலாம். உதாரணமாக கிழக்கு ஆசியா அல்லது தெற்காசியா அல்லது ஆப்பிரிக்கா என் தேர்வு செய்து பார்க்கலாம். இவை தவிர ஆண்டுகளில் கால அளவிலும் தேர்வு செய்து கொள்ளலாம். சுவாரஸ்யமாக படிக்க கூடியவை இல்லை என்றாலும் பள்ளி பாட திட்ட ஆய்வுகளுக்கு தகவல் தேட உதவியாக இருக்கும் .யுனெஸ்கோ ஆதரவு பெற்ற முயற்சி என்பதால் தகவல்கள் எல்லாமே நம்பகமான இடங்களில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை.
கிட்ஸ் ஆன்லை நெட்டில் உள்ள நூலகத்திலும் ( http://www.kids-online.net/library/) புத்தகங்களை படிக்கலாம். இதில் ஆயிரக்கணக்கில் எல்லாம் புத்தகங்கள் கிடையாது. 150 க்கும் அதிகமான புத்தகங்கள் தான் இருக்கின்றன. ஆனால் இவற்றில் சில 200 ஆண்டுகள் பழமையானவை. முகப்பு பக்கத்திலெயே நூல்களின் பட்டியல் வரிசையாக இடம் பெற்றுள்ளன.கிளிக் செய்து வாசிக்க ஆரம்பித்து விடலாம்.

————
பி.கு; இந்த பதிவு சுட்டி விகடனுக்காக எழுதியது. இந்த இணைய நூலகங்கள் வியக்க வைக்கும். இணையத்தில் வேறு சிறந்த நூலகங்களும் இருக்கின்றன. இவற்றில் ஓபன் லைபரரி மகத்தான முயற்சி. உலகில் உள்ள எல்லா புத்தகங்களுக்கும் ஒரு இணைய பக்கத்தை உருவாக்கும் மாபெரும் இலக்குடன் செயல்பட்டு வரும் இந்த இணையதளம் பற்றி, இணையத்தால் இணைவோம் புத்தக்த்தில் விரிவாக எழுதியிருக்கிறேன் . இதே போல ஒலி புத்தகங்களுக்கான மகத்தான இணைய நூலகம் பற்றிய விரிவான அறிமுகமும் இந்த புத்தக்த்தில் இருக்கிறது. இவை இரண்டுமே முன்னோடி தளங்கள். இத்தகைய பிரம்மிக்க வைக்கும் இணைய முயற்சிகள் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே ,எனது முதல் புத்தகமான இணையத்தால் இணைவோம், நூலின் நோக்கமாக கருதுகிறேன்.

அன்புடன் சிம்மன் .

புத்தகம் ஆன்லைனில் கிடைக்கிறது; https://www.nhm.in/shop/100-00-0002-219-9.html

எனது அடுத்த புத்தகம் தயாரிப்பில் இருக்கிறது. அது பற்றி அறிய: https://cybersimman.wordpress.com/2014/09/02/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/

2 responses to “அருமையான இணைய நூலகங்கள் !

    • மகிழ்ச்சி நண்பரே.’ இணையத்தால் இணைவோம்’ புத்தகம் பற்றிய தங்கள் கருத்து மற்றும் புதிய புத்தகம் பற்றிய யோசனைகளை எதிர்பார்க்கிறேன்.

      அன்புடன் சிம்மன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s