ஒரு இணைய பிளாஷ்பேக்

Yahoo_Celebrates_Its_14th_Birthday-800x462அந்த கால இணையத்தை அறிந்தவர்கள் நிச்சயம் யாஹூவின் அறிவிப்பால் வருத்தம் அடைவார்கள். அப்படியே ஆரம்ப கால இணைய அனுபபத்தை பிளேஷ்பேக்காக நினைத்துப்பார்த்து ஏங்கவும் செய்வார்கள்.
இப்படி பழைய நினைவுகளை திரும்பி பார்க்க வைத்திருக்கும் அறிவிப்பு யாஹூ தனது டைரக்ட்ரி சேவைக்கான மூடுவிழா தொடர்பானது.

இணையத்தில் அசத்தலான புதிய சேவைகள் கோலோச்சும் நிலையில் பழைய சேவைகள் மூடப்படுவது இயல்பானது தான். அதிலும் இணையவாசிகளின் மத்தியில் செல்வாக்கை இழந்து கிட்டத்தட்ட மறக்கப்பட்ட சேவைகள் மூடுவிழா காண்பது இன்னும் கூட இயல்பானது.

இணையத்தில் வழக்கொழிந்து போய் மூடப்பட்ட சேவைகள் என ஒரு நீண்ட பட்டியலே போடலாம். சில மாதங்களுக்கு முன் கூகிள் நிறுவனமே தனது முதல் சமூக வலைப்பின்னல் சேவையான ஆர்குட்டை மூடுவதாக அறிவித்தது. யாஹு தன் பங்கிற்கு தன் வசம் இருந்த அல்டவிஸ்டா தேடியந்திரத்தை மூடுவதாக கடந்த ஆண்டு அறிவித்தது.

அந்த வகையில் இப்போது யாஹூ, தனது டைரக்டரி உள்ளிட்ட மூன்று சேவைகளை நிறுத்திக்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. யாஹுவின் இந்த டைரக்டரி சேவையை இந்த தலைமுறை இணையவாசிகளில் பலர் அறிந்திருக்ககூட மாட்டார்கள் என்று சொல்லலாம். அந்த காரணத்திற்காகவே யாஹூவின் டைரக்டரி சேவையின் முடிவு கவனத்திற்கு உரியதாக இருக்கிறது.

ஏனெனில் ஒரு காலத்தில் பெரும்பாலான இணையவாசிகளுக்கான வழிகாட்டியாக யாஹூ டைரக்டரி சேவை தான் இருந்தது. ஒரு காலம் என்பது இணையத்தின் ஆரம்ப காலமான 1990 கள். அப்போது தேடியந்திரமாக கூகிள் அறிமுகமாகவில்லை. அல்டாவிஸ்டாவும், இன்க்டோமியும்,லைகோசும் தேடியந்திரங்களாக கொடிகட்டிப்பறந்து கொண்டிருந்தன. யாஹூ தான் அப்போது இணையத்தின் நுழைவு வாயிலாக இருந்தது. இணையத்தில் எது வேண்டும் என்றாலும் பெரும்பாலும் யாஹூ மூலம் தேடும் நிலை இருந்தது.
இந்த கால ஸ்மார்ட்போன் தலைமுறைக்கு புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் இணையத்தின் கூகிளாக யாஹு இருந்த காலம் அது. அப்போது யாஹு இணையதளங்களை அறிமுகம் செய்து பட்டயலிடும் சேவை தான் யாஹூ டைரக்டரி.

புதிய மற்றும் பயனுள்ள இணையதளங்களை அறிமுகம் செய்துகொள்ள இணையவாசிகளுக்கு இந்த டைரக்டரி தான் வழிகாட்டியாக இருந்தது. தேடிய்ந்திரங்களின் இயந்திர தேடலை விட, மனிதர்களால் கவனமாக தேர்வு செய்து பரிசிலிகக்ப்பட்டு அறிமுகம் செய்யப்பட்ட இணையதளங்களை கொண்ட இந்த கையேடு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. செல்வாக்கு மிக்கதாகவும் இருந்தது. இந்த பகுதியில் இணையதளங்கள் பல்வேறு தலைப்புகளில் பட்டியலிடப்பட்டிருக்கும். விருப்பமுள்ள பகுதியை கிளிக் செய்து பார்க்கலாம். இணையதளங்களை தேடவும் செய்யலாம்.

ஆனால் 1990 களின் இறுதியில் கூகிள் தேடியந்திரத்தின் அறிமுகம் மற்றும் புத்தாயிரமாண்டில் உலகின் முன்னணி தேடியந்திரமாக அது எழுச்சி பெற்ற விதம் யாஹூ டைரக்டரியை பின்னுக்குத்தள்ளியது. (இடைப்பட்ட காலத்தில் யாஹூவே கூகிள் தேடல் முடிவுகளை பயன்படுத்தி வந்தது. ). அதோடு ஆரம்பத்தில் ஆயிரக்கணகான இணையதளங்கள் இருந்த நிலை மாறி அவற்றில் எண்ணிக்கை லட்சக்கணக்காக வெடித்த நிலையில் இணையதள அறிமுகத்திற்கான கையேடு என்பதே அர்த்தமற்றதாக ஆகிவிட்டது. பலரும் இப்படி ஒரு சேவை இருந்ததையே கூட மறந்து விட்டனர். இந்த நிலையில் யாஹூ இந்த சேவையை மூடுவதாக அறிவித்துள்ளதில் வியப்பதற்கு எதுவுமில்லை தான். ( டிசம்பர் மாத இறுதியுடன் டைரக்டரி சேவை இருக்காது என அறிவித்துள்ளது).
ஆனால், இணைய வராலாற்றில் இந்த சேவை ஒரு மைல் கல் என்று அறியும் போது இதன் வழக்கொழிந்து போகும் நிலை வருத்தம் தரத்தான் செய்யும். அது மட்டும் அல்ல, ஒருவித்திதில் இணைய நிறுவனமாக யாஹூவின் செல்வாக்கில் ஏற்பட்ட அடையாளமாகவும் இது இருக்கிறது. ஜெர்ரி யங் மற்றும் டெவிட் பைலோ ஆகியோரால் துவக்கப்பட்ட ( அந்த கால செர்ஜி பிரைன் -லாரி பேஜ் !) யாஹூ ஆரம்பத்தில் ஒரு இணைய கையேடாகதான் இருந்ந்தது. அதன் பெயரே கூட வையவிரிவு வலைக்கான ஜெர்ரி அண்ட் டேவிட்ஸ் கைடு (“Jerry and David’s Guide to the World Wide Web.” ) என்பது தான். பின்னர் தான் அது யாஹூ என மாறியது. இணையத்தில் செல்வாக்கு பெற்று விளங்கியது.

இப்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு யாஹூ இந்த சேவையை மூடுவதாக அறிவித்துள்ளது. யாஹூவே கூட இதற்கான அறிவிப்பை பெரிதாக வெளியிடாமல், விரைவில் மூடப்படும் யாஹூ கல்வி உள்ளிட்ட மூன்று சேவைகளில் ஒன்றாக குறிப்பிட்டுள்ளது. ஆனால் அந்த அறிவிப்பின் ஆரம்பத்தில் , யாஹூ 20 ஆண்டுகளுக்கு முன்னர் இணையதளங்களின் டைரக்டரியாக ,இணையத்தை கண்டறிய துவக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆம் , ஒரு காலத்தில் இணையத்தை கண்டறிவதற்கான வழியாக இருந்த யாஹூ டைரக்டரி இனி இல்லாமால் போகப்போகிறது.

கூகிள் மற்றும் பேஸ்புக் போன்றவை ஆதிக்கம் செலுத்தும் உலகில் தனது சேவையை கூர் தீட்டிக்கொள்ள யாஹுவுக்கு பயனில்லாத சேவைகளை மூடுவது தவிற வேறு வழியில்லை தான். ஆனாலும் கூட அந்த கால கூகிளுக்கு இந்த நிலை என்பது தான் இணைய நிதர்சனம்.
இந்த சேவை நிறுத்தம் பற்றி யாஹூவே பெரிதாக அலட்டிக்கொள்ளாத நிலையில் இணைய வல்லுனரான டேனி சலைவன் இது தொடர்பாக அழகான இறங்கற்பா எழுதியுள்ளார்; அது ; http://searchengineland.com/yahoo-directory-close-204370

யாஹூவின் அறிவிப்பு; http://yahoo.tumblr.com/post/98474044364/progress-report-continued-product-focus

———–
பி;கு; இணையத்தை யாஹு வாயிலாக அறிமுகம் செய்து கொண்டவன் என்ற முறையில் தனிப்பட்ட முறையில் என்னை மிகவும் பாதித்த செய்தி இது. அந்த வகையில் தனிப்ப்பட்ட பிளாஷ்பேக்கும் கூட. வெகு காலம் நான் யாஹுவை தான் பயன்படுத்திக்கொண்டிருந்தேன். குறிப்பாக செய்திகளை தெரிந்து கொள்ள யாஹூவே சிறந்த வழியாக இருந்தது. எல்லாம் கூகுல் அதிக்கம் செலுத்த துவங்கும் முன்.
——

நன்றி; விகடன்.காம்

One response to “ஒரு இணைய பிளாஷ்பேக்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s