அதிவேக ஸ்மார்ட்போன்கள்

ஸ்மார்ட்போன்களின் செயல்திறனை கணக்கிடுவதும் மதிப்பிடுவதும் சிக்கலான வேலை. இதில் வல்லுனர்கள் மட்டும் அல்ல, ஸ்மார்ட்போன் அபிமானிகளும் மாறுபடுவார்கள். தங்கள் அபிமான போன் தான் செயல்திறன் மிக்கது எனும் தீர்மானமான எண்ணம் பலரிடம் இருக்கலாம். அதோடு விலை மற்றும் பயன்பாட்டுத்தன்மையை கருத்தில் கொண்டால் இது இன்னும் சிக்கலாகும்.
ஆனால் உலகின் அதிவேகமான ஸ்மார்ட்போன் எது எனும் கேள்விக்கு பதில் சொல்ல இந்த சிக்க எல்லாம் இல்லை. பின்லாந்து நாட்டைச்சேர்ந்த ஆல்டோ பல்கலைக்கழகா ஆய்வாளர்கள், டவுன்லோடு மற்றும் அப்லோடு வேகத்தை அடிப்படையாக கொண்டு உலகின் வேகமான ஸ்மார்ட்போன்களை பட்டியலிட்டுள்ளனர். சும்மாயில்லை, உலகம் முழுவதும் உள்ள 4,500 ஸ்மார்ட்போன்களை பல்வேறு செல்போன் நெட்வொர்க்கில் பயன்படுத்திப்பார்த்து இந்த பட்டியலை தயாரித்துள்ளனர்.
டவுண்லோடு வேகப்படி பார்த்தால் முதல் 10 ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் சாம்சங் காலெக்ஸி நோட் 3 முதலிடத்தில் உள்ளது. இதன் வேகம் 137.8Mbps .அடுத்த இடத்தில் இருப்பது சீன தயாரிப்பான ஒன் பிளஸ் ஒன். இதன் வேகம் 137.4Mbps. 3 வது இடத்தில் ஐபோன் 6 இருக்கிறது. சாம்சங் காலெக்ஸி எஸ் 4 மற்றும் எஸ் 5 அடுத்த 2 இடங்களிலும் அதை அடுத்து எல்ஜியின் ஜி3 மற்றும் ஜி 2 உள்ளன. நோக்கியா லூமியா 1520 க்கு 8 வது இடம்.
பதிவேற்றும் (அப்லோட்) வேகத்தின் படி பார்த்தால் சாம்சங் காலெக்ஸி எஸ்5 முதலிடத்தில் உள்ளது. காலெக்ஸி எஸ் 4 க்கு 2 வது இடம் என்றால் எல்ஜி- ஜி2 வுக்கு மூன்றாவது இடம். நோக்கியா லூமியா 1020 க்கு 5 வது இடம்.
புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமில் படங்களை பகிர்வதும் பேஸ்புக்கில் வீடியோவை பதிவேற்றுவதும் பிரபலமாக இருக்கும் நிலையில் அப்லோடு வேகமும் முக்கியம் தான்.
இந்த ஆய்வை நடத்தி பலகலைக்கழக பேராசிரியர் ஜுக்கா மேனர் (Jukka Manner ) அதிக விலை என்பது அதிக இணைய வேகத்துடன் தொடர்புடையது அல்ல என்பதை இந்த முடிவுகள் உணர்த்துவதாக கூறியுள்ளார்.
ஆல்டோ பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆப் எலக்டிரிகல் இஞ்சினியரிங் 2013 முதல் நெட்ரேடார் எனும் செயலி மூலம் மொபைல் இணைய வசதியை ஆய்வு செய்து வருகிறது. நெட்ரேடார் செயலி மூலமாக இணைய பயன்பாடு பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. இந்த செயலி டவுண்லோடுக்கும் கிடைக்கிறது. நீங்களும் கூட இதில் பங்கேற்கலாம்.; https://www.netradar.org/

———–

இது ஆப்பிள் ரகசியம் !
ஆப்பிளின் ஐபோன் பற்றி நீங்கள் விரிவாக அறிந்து வைத்திருக்கலாம். ஐபோன் பற்றி பல அறிய தகவல்களும் அத்துபடியாக இருக்கலாம். ஆனால் ஐபோன் விள்ம்பரத்தை உற்று கவனித்து இருக்கிறீர்களா? அதில் எப்போதுமே ஒரு பொதுத்தன்மை இருக்கும் தெரியுமா? அந்த விளம்பரங்களில் எல்லாம் காட்டப்படும் நேரம் காலை 09.41 ஆக இருக்கும். இதன் பின்னே ஏதோ சங்கேத குறியீடு இருப்பதாக எல்லாம் நினைக்க வேண்டாம். இதன் பின்னே இருப்பது மர்மமும் அல்ல; அழகான சின்ன ரகசியம் , அவ்வளவு தான். தி அட்லாண்டிக் பத்திரிகை இதை கண்டுபிடித்து சொல்லியிருக்கிறது.
09.42 என்பது 2007 ஜனவரில் ஆப்பிளின் ஸ்டீவ் ஜாப்ஸ், முதல் முறையாக ஐபோனை அறிமுகம் செய்த நேரம். 2010 வரை இந்த நேரமே விளம்பரத்தில் இடம்பெற்றது. 2010 ல் இது 09.41 என மாற்றப்பட்டது. இது ஜாப்ஸ் முதல் ஐபேடை அறிமுகம் செய்த நேரம். அதன் பிறகு ஐபோன் மற்றும் ஐபேட் விளம்பரங்களில் எல்லாம் 09.41 எனும் நேரமே இடம் பெற்றுள்ளது.
ஆப்பிளின் புதிய பொருள் அறிமுகத்துக்கான கீநோட் உரை மிகவும் பிரசித்தம். இந்த உரையை எப்போதுமே 40 வது நிமிடத்தில் அறிமுகம் நிகழும் வகையில் அமைப்பதும் ஆப்பிளின் வழக்கமாம். பெரிய திரையில் தயாரிப்பு தோன்றும் போது அதில் உள்ள நேரமும் பார்வையாளர் கடிகாரத்தில் உள்ள நேரமும் ஒன்றாக இருக்க வேண்டுமாம். ஆனால் 40 நிமிடத்தை துல்லியமாக அடைவது கடினம் என்பதால் ஒரு நிமிடம் கூடுதலாக வைத்துள்ளனர்.
எல்லாம் சரி, ஆப்பிளின் ஸ்மார்ட்வாட்ச் விளம்பரம் என்ன நேரம் காட்டும்?

————-

ஓபரா மினி உலாவியின் மைல்கல்

சமீபத்தில் இந்தியாவில் பயனாளிகள் எண்ணிக்கையில் வாட்ஸ் அப் செயலி 70 மில்லியன் தீவிர பயனாளிகள் எனும் மைல்கல்லை எட்டியது. இப்போது மொபைல் உலாவியான ( பிரவுசர்) ஓபரா மினி இந்தியாவில் 50 மில்லியன் பயனாளிகள் எண்ணிக்கையை எட்டியுள்ளது. இந்த மைல்கல் தொடர்பான செய்தியை பகிர்ந்து கொண்டுள்ள ஓபரா, இந்தியாவில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் செயலிகளுக்கு அடுத்த இடத்தில் தனது பிரவுசர் இருப்பதாகவும் கூறியுள்ளது. அதோடு உலக அளவில் இந்தியாவின் தான் ஓபரா மினி பயனாளி பரப்பு அதிகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஓபரா பிரவுசர் பயன்படுத்தும் ஸ்மார்போன் பயனாளிகள் எண்ணிக்கை கடந்த ஆண்டு 110 சதவீதம் அதிகரித்து மொத்த பயனாளிகளில் பாதியாக இருப்பதாகவும் கூறியுள்ளது.
இணைய பக்கத்தை 90 சதவீதம் சுருக்கி தருவது உட்பட பல்வேறு சிறப்பம்சங்கள் நிறுவன பிரவுசரில் இருப்பதாக ஓபரா தெரிவிக்கிறது. நீங்களும் வேண்டுமானால் பயன்படுத்தி பரிசோதித்துப்பாருங்கள்!.

—————-

சாம்சங்கின் புதிய போன் வரிசை

ஸ்மார்ட்போன் சந்தையில் போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சாம்சங் நிறுவனம் புதிய வரிசையிலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. சாம்மொபைல் இணையதளம் இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது. சாம்சங் வழக்கப்படி இந்த புதிய வரிசை போன்களும் ஒற்றை எழுத்து பெயர் கொண்டிருக்கும் என தெரிகிறது. இதனிடையே காலெக்ஸி எஸ்- 5 க்கு தொடர்ச்சியாக பிராஜக்ட் ஜிரோ எனும் பெயரில் எஸ்- 6 க்கான தயாரிப்பு நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க ஏற்கனவே கசிந்த தகவல்களை உறுதி செய்வது போல சாம்சங் டைசன் இயங்கு தளத்திலான ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. குறைந்த விலையிலான இந்த போன்கள் இந்திய சந்தையில் தான் முதலில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே சாம்சங் தனது கியர் வாட்சில் டைசன் இயங்கு தளத்தை பயன்படுத்தி வருகிறது.

———–
செயலி செய்யலாம் வாங்க!
எங்கு பார்த்தாலும் செயலிகள்( ஆப்ஸ்) பற்றி தான் பேச்சாக இருக்கிறது. செயலிகள் பயன்படுத்துவது சுலபமாக இருப்பது போல புதிய செயலிகளை உருவாக்குவதும் சுலபமானது தான் என்று பலரும் சொல்வதை நீங்களும் கேட்டிருக்கலாம். அட நாமும் கூட செயலி செய்து பார்க்கலாமே என்ற ஆசை இருந்தால் அதற்கான இலவச இணைய வகுப்பை ஆஸ்திரேலிய பலகலைக்கழகம் துவங்கியுள்ளது.அந்நாட்டின் சார்லஸ் ஸ்டர்ட் பலகலை (Charles Sturt University ) இணைய வகுப்பு மற்றும் வெப்பினார் மூலம் இந்த பயிற்சியை வழங்க இருக்கிறது. போன்கேப் எனும் ஓபன் சோர்ஸ் பிரேம் ஒர்க் மூலம் இந்த செயலி பயிற்சியை அளிக்கிறது.
ஆண்ட்ராய்டு, ஐபோன் மற்றும் விண்டோஸ் என எல்லா போன்களுக்குமான செயலிகளை உருவாக்கலாம்.
நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.
இணையம் வழி கல்வி செல்வாக்கு பெற்று வரும் நிலையில் இது புதியதொரு நல்வரவு; மேலும் விவரங்களுக்கு: http://www.itmasters.edu.au/free-short-course-cross-platform-mobile-app-development/

————–
செல்ஃபீ எச்சரிக்கை

இது செல்ஃபீ யுகம். ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பலரிடம் இப்படி சுயபடம் எடுத்து வெளியிடும் பழக்கம் இருக்கிறது. எந்த நிகழ்வையும் சுயபடம் எடுக்கும் பழக்கம் நல்லதா ? கெட்டதா? என்பது ஒருபுறம் இருக்கட்டும் சுயபட பழக்கம் பணியிட்த்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று சமீபத்தில் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஜார்ஜியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் இது தொடர்பாக நடத்திய ஆய்வில் சுயபடம் எடுப்பது , நார்சிஸம் எனப்படும் சுய ரசிப்பின் அடையாளமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. அது மட்டும் அல்ல, சுயபடம் எடுப்பது ஒருவரது சுய கட்டுப்பாடு இனமையையும் குறிக்கலாம் என இந்த ஆய்வு தெரிவிக்கிறது. இது ஒருவரது வேலைவாய்ப்பையும் பாதிக்கலாம். வேலைக்கு ஆள் எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவன அதிகாரிகள் பலர் , சமூக ஊடகங்களில் ஆய்வு செய்வதாகவும் அப்போது அதிக சுயபடம் வெளியிட்டவர்களை நிராகரிக்கின்றனர் என்றும் தெரியவந்துள்ளது. சுயவெளிப்பாட்டில் இத்தனை ஆர்வம் கொண்டவர்கள் ஒரு குழுவாக சிறப்பாக செயல்படும் தன்மை குறைவாக பெற்றிருப்பார்கள் என்று இதற்கு வல்லுனர்கள் இதற்கு விளக்கம் தருகின்றனர். ஆக, செல்ஃபீ பிரியர்கள் கொஞ்சம் யோசித்து படம் எடுப்பது நல்லது.

———-
நன்றி; தமிழ் இந்துவுக்காக எழுதியது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s