டிவிட்டரில் சிறுகதைகள் எழுதி புகழ் பெற்ற எழுத்தாள‌ர்.

அர்ஜுன் பாசுவை டிவிட்டர் யுகத்தின் ஹெமிங்வே என்று சொல்லலாம்.ஹெமிங்க்வே எழுத்துலக மன்னன் என்றால் பாசு சிறுகதைகளின் மன்னன்.

சிறுகதைகள் என்றால் உண்மையிலேயே சிறிய சிறுகதைகள்.அவற்றின் நீளம் அகலம் ஆழம் எல்லாம் 140 எழுத்துக்கள் தான்.பாசு தனக்காக வகுத்து கொண்டிருக்கும் இலக்கணமும் இதுதான்.எல்லாம் 140 எழுத்துகளுக்குள் அடங்கிவிட வேண்டும்.அதாவது ஒரு எந்த ஒரு சிறுகதையும் ஒரு டிவிட்டில் துவங்கி,அதே டிவிட்டில் வளர்ந்து அந்த டிவிட்டிலேயே முடிந்துவிட வேண்டும்.

டிவிட்டரிலேயே எழுதப்படும் இந்த சின்ன சின்ன சிறுகதைகளை பாசு டிவிஸ்டர்ஸ் என்று அழைக்கிறார்.இது அவரே சூட்டிய பெயர்.மற்றவர்கள் குறுங்கதைகள்,குறும் புனைவு,உடனடி கதைகள் என்றெல்லாம் சொல்கின்றனர்.

இந்த வகையான கதைகளை எழுதும் முயற்சியில் பலரும் ஈடுபட்டுள்ளனர்.ஆனால் டிவிட்டரின் வரம்புக்கு உடபட்டு டிவிட்டர் சிறுகதைகளை முதன் முதலில் எழுத்த துவங்கியவர்களில் பாசு ஒருவர்.

140 எழுத்துகளுக்குள் என்ன செய்துவிட முடியுமென்ற கேள்வி பலரது மனதில் இருந்த டிவிட்டரின் ஆரம்ப காலத்திலேயே பாசு டிவிட்டரில் சிறுகதை எழுத துவங்கிவிட்டார்.அதாவது 2009 ம் ஆண்டிலேயே!

அர்ஜுன் பாசு அடிப்படையில் எழுத்தாளர்.கன்டாவின் மான்ட்ரியலில் பிறந்து வளர்ந்தவர்.சிறுகதை தொகுப்பு ஒன்றையும் அவர் எழுதி வெளியிட்டுள்ளார்.நாவல் எழுத வேண்டும் என்ற திட்டம் எல்லாம் அவரது மனதில் இருந்தது.அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார்.

இந்த கால கட்டத்தில் தான் 2009 ம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர் குறும்பதிவு சேவையான டிவிட்டர் பற்றி கேள்விப்பட்டு அதனை பயன்படுத்த துவங்கினார்.

டிவிட்டரை பயன்படுத்தும் எழுத்தாளர்கள் பொதுவாக தங்கள் எழுத்துக்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ள டிவிட்டரை பயன்படுத்துவதுண்டு.பாசுவே டிவிட்டரிலேயே எழுதலாம் என தீர்மானித்தார்.

அப்படி எழுத துவங்கியது தான் டிவிட்டர் சிறுகதைகள்.ஆனால் இந்த எண்ணம் தோன்றியது மிகவும் தற்செயலானது என்கிறார் பாசு.ஆரம்பத்தில் டிவிட்டர் என்றால் என்ன என்று சரியாக புரியாமல் எதை எதையோ எழுதி கொண்டிருந்ததாகவும் திடிரென ஒரு நாள் உள்ளத்தில் ஒரு தெளிவான சித்திரம் தோன்றியதாகவும் அதனை அப்படியே சிறுகதையாக டிவிட்டரில் பகிர்ந்து கொண்டதாகவும் பாசு தனது டிவிஸ்டர்ஸ் பிறந்த விதம் பற்றி குறிப்பிடுகிறார்.

மிகவும் தற்செயலாக அந்த கதை மிகசரியாக 140 எழுத்துக்கள் கொண்டதாக இருந்தது.ஒரு எழுத்து அதைக இல்லை;ஒரு எழுத்து குரைவு இல்லை.அதன் பிறகு அவர் தொடர்ந்து டிவிட்டர் சிறுகதைகளை எழுத துவங்கினார்.எல்லாமே சரியாக 140 எழுத்துக்கள் கொண்டவை.

அவரது இந்த கதைகள் குறும்பதிவுகளாக வெளியாயின.

டிவிட்டர் பதிவாக ஒரு கதையை சொல்வதே சவாலானது.அதிலும் மிகச்சிரியாக 140 எழுத்துக்கள் கொண்டதாக இருக்க வேண்டும் என்றால் திண்டாட்டம் தானே.ஆனால் பாசுவோ இந்த சவால் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக கூறுகிறார்.டிவிட்டரில் சிறுகதை எழுதுவது என்று முடிவு செய்த பின் அதன் விதிகளுக்கும் வரம்பிறகும் உடபடுவதே சரியாக இருக்கும் என்பதால் 140 எழுத்துக்கள் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் பாசு சொல்கிறார்.

முதல் நாள் அன்று பாசு மூன்று சிறுகதைகளை எழுதி டிவிட்டரில் பகிர்ந்து கொண்டார்.அவற்றுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே தொடர்ந்து எழுத துவங்கினார்.ஒரு நாளுக்கு நானுக் அல்லது ஐந்து கதைகளை எழுதி விடுகிறார்.இது வரை 500க்கும் மேற்பட்ட டிவிட்டர் சிறுகதைகளை எழுதியிருக்கிறார்.

ஆரம்பத்தில் நூற்றுக்கணக்கில் இருந்த அவரது ரசிகர்களின் எண்ணிக்கை அதன் பிறகு ஆயிரக்கணக்கில் வளரத்துவங்கிவிட்டது.

இதை படித்து கொண்டிருக்கும் போதே 140 எழுத்துகளுக்குள் எப்படி கதை சொல்ல முடியும் என்ற சந்தேகமும் வாட்டிக்கொண்டிருக்கலாம்.

ஆசுவின் கதைகளை படித்தால் இந்த சந்தேகம் தீர்ந்துவிடும்.140 எழுத்துகளுக்குள் அவர் ஒரு கதையை சொல்லி முடித்து விடுகிறார்.அதற்குள்ளாகவே மூன்று நான்கு வரிகள் வந்து விடுகின்றன.

உதாரணத்திற்கு சில கதைகளை பார்ப்போம்.

‘அந்த திருமணம் தேனிலவு வரை கூட தாங்கவில்லை;அவர்கள் தங்கள் தவறின் மகத்துவத்தை ஒப்புக்கொண்டனர்.ஆனால் ஒன்றாக இருந்தனர்.காரணம் பரிசுகள்’.

‘அவள் பத்திரிகையை எடுத்து அவனைப்பார்த்து என்ன என்று கேட்டாள்.அவன் என்ன?என்றான்.அவள் என்ன?என்றால்,அவன் என்ன என்ன என்ன என்றான்.அவள் அலுப்பில் இறந்து போனாள்’.

‘அவள் கணவன் எடுத்த முடிவுகளால் ஏமாற்றம் அடைந்தாள்,ஆனால் ,நாயின் வாயில் சிக்கிய துணி போல அல்லாமல் தன்னால் இதிலிருந்து மீள முடியும் என நம்பினாள்’

‘குழந்தைகள் கத்த துவங்கின.அவன் காபியை கூட குடிக்க துவங்கவில்லை.அவன் வேண்டாம்,வேண்டாம்,வேண்டாம் என்றான்,குழந்தைகள் மேலும் சத்தமாக கத்ததுவங்கின’.

இப்படி பாசு எழுதி தள்ளியிருக்கிறார்.சில கதைகள் குழப்பும்,சில சிரிக்க வைக்கும்,சில சிந்திக்க வைக்கும்.

பாசு கதைகள் அவற்றின் வரம்பை மீறி பலவகப்ப்பட்டதாக இருப்பதும் பல வித உணர்வுகளை முன்வைப்பதும் உண்மையிலேயே ஆச்சர்யமானது தான்.

இந்த கதைகளில் அர்த்தம் உண்டா ?அது அவரவர் புரிந்து கொள்ளும் விதத்தில் உள்ளது.இவற்றில் இலக்கியத்தரம் உண்டா என்பதை காலம் தான் தீர்மானிக்கும்.அதற்கு டிவிட்டர் சிறுகதைகளுக்காக அளவுகோள் முதலில் உருவாக்கப்பட வேண்டும்.

ஆனால் பாசு டிவிட்டர் சிறுகதைகள் மூலம் டிவிட்டர் உலகில் அதற்குறிய கவனத்தை பெற்றிருகிறார்.ஷார்ட்டி விருதினையும் வென்றுள்ளார்.இணையதளங்களுக்காக வழங்கப்படும் வெப்பி விருதுகள் போல டிவிட்டர் உலகிறகாக ஷார்ட்டி விருதுகள் வழங்கப்படுகின்றன.

நாவல்களை அடிப்படையாக கொண்டு திரைப்படங்கள் எடுக்கப்படுவது போல அவரது குறுங்கதையை கொண்டு ஒரு நிமிட திரைப்படம் எடுக்கப்பட்டு சர்வதேச ஒரு நிமிட திரைப்பட விழாவில் விருது வென்றுள்ளது.

பாசு தொடர்ந்து டிவிட்டர் சிறுகதைகளை எழுதி வருகிறார்.டிவிட்டரில் எழுதும் போது வாசக்ர்களிடம் இருந்து கிடைக்கும் உடனடி எதிர்வினைக்கு எதுவும் ஈடில்லை என்பது பாசுவின் கருத்து.நாவல் அல்லது சிறுகதையை எழுதிவிட்டு வாசகர் கருத்தை அறிய மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டும்.ஆனால் டிவிட்டரில் குறும்பதிவாக கதை வெளியானவுடன் பின் தொடர்பாளர்கள் உடனே படித்து விட்டு கருத்து சொல்வது எழுத்தாளன் என்ற முறையில் அளவில்லா மகிழ்ச்சி தருகிறது என்கிறார் அவர்.

இந்த பதிவின் துவக்கத்தில் பாசுவை ஹெமிங்வேயுடன் ஒப்பிட்டதற்கு ஒரு காரணம் உள்ளது.கடலும் கிழவனும்,போரே நீ போ உள்ளிட்ட காலத்தை வென்ற நாவல்களையும் முத்திரை சிறுகதைகளையும் எழுதிய ஹெமிங்வே ஒரு முறை ஒரே வரியில் ஒரு சின்னஞ்சிறிய கதை ஒன்றை எழுதினார்.

தனது மிகச்சிறந்த படைப்பு என்று ஹெமிங்வே குறிப்பிட்ட அந்த கதை இது தான்.

“விற்பனைக்கு;குழந்தைகள் ஷூ;இது வரை அணியப்படாதது.”

பாசுவின் கதைகளுக்கு இதனை முனோடியாக சொல்லலாம்!

—————–

http://twitter.com/arjunbasu

http://arjunbasu.com/twisters

2 responses to “டிவிட்டரில் சிறுகதைகள் எழுதி புகழ் பெற்ற எழுத்தாள‌ர்.

பின்னூட்டமொன்றை இடுக