டிஜிட்டல் உலக அணில்கள்

கூட்டு முயற்சியின் அருமையையும், அதற்கான எளிய வழிகளையும்  இன்டர்நெட்டின் சமீபத்திய  போக்குகள்  எளிதாக  உணர்த்தி வருகின்றன. தனி மனிதர்களாக செய்ய இயலாமல் போகும் காரியங்களை  பலர் கூடி எளிதாக  செய்து முடித்து விடலாம். இது எல்லோருக்கும் தெரிந்த தத்துவம் என்றாலும், பல நேரங்களில் பலரை திரட்டுவதே திண்டாட்டமாக போய்விடுகிறது.  ஆனால் இன்டர்நெட் பகிர்தலையும், இணைந்து செயலாற்றுவதையும் சுலபமாக்கியிருக்கிறது.  இதற்கு எண்ணற்ற உதாரணங்களை சொல்லலாம்.  அவற்றில் மிகவும் சுவாரஸ்யமான   ஒன்றை இங்கே பார்க்கலாம்.
.
புத்தகங்களை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியில் பங்கேற்கும் அணில்கள் பற்றிய  விஷயம் இது. நீங்களும் கூட இத்தகைய டிஜிட்டல் அணிலாக மாறி, உங்கள் பங்களிப்பை செலுத்தலாம். யார் கண்டது, நீங்களே அறியாமல் இப்போதே கூட, டிஜிட்டல் அணிலாக  இந்த பணியை   செய்து கொண்டிருக்கலாம். பெரும்பாலான இணைய தளங்களில் அவற்றின் சேவையை பயன்படுத்துவதற்கு முன்பாக நீங்கள் பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியிருக்கும். 

குறிப்பிட்ட சில தளங்கள், உங்களுக்கு ஒரு சின்ன பரீட்சையையும் வைக்கக்கூடும். உண்மையில் அதனை நீங்கள் பரீட்சை என்றே கூட உணர்ந்திருக்க மாட்டீர்கள். புதிய இமெயில் முகவரி கணக்கை பதிவு செய்யும் போது அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்த பிறகு  சிறிய கட்டத்தில் உள்ள கொஞ்சம் கோணல் மாணலான எழுத்துக்களை  மீண்டும் டைப் செய்யுமாறு  கேட்கப்படும்.  நீங்களும் அந்த எண் ஏதோ உங்களுக்கான  ரகசிய குறியீட்டு எண் என்னும் உணர்வோடு  அதனை டைப் செய்திருப்பீர்கள். உண்மையில் அது உங்களுக்கான சோதனை. அந்த கோணல்மாணல் எழுத்துக்களை நீங்கள் சரியாக  டைப் செய்தால் மட்டுமே இமெயில் முகவரி கணக்கை  பெற முன்னேற முடியும்.

எழுத்துக்கள் எத்தனை கோணல் மாணலாக இருந்தாலும் உங்களால் அதை தெளிவாக புரிந்து கொண்டுவிட முடியும் என்பதால்,  இத்தகைய நிராகரிப்பை நீங்கள் எதிர் கொண்டிருக்க வாய்ப்பில்லை. எனவே இது சோதனை என்பதையும் நீங்கள்  நினைத்து பார்த்திருக்க சாத்தியமில்லை.

ஆனால் பலர் இந்த சோதனையில் வெற்றி பெற முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அந்த பலரில் யாரும் மனிதர்கள் கிடையாது.  எல்லாமே மனிதர்கள் போன்ற தோற்றத்தை உண்டாக்கி  ஏமாற்றும்  நோக்கம் கொண்ட சாப்ட்வேர்கள். பாட் என்று பிரபலமாக குறிப்பிடப் படும் இத்தகைய சாப்ட்வேர்கள் இன்டெர்நெட் உலகில் நிறைய  லாவிக்கொண்டிருக்கின்றன.
இவற்றின் வேலை என்னவென்றால், இமெயில் சேவை தளங்களில் நுழைந்து,  புதிய முகவரி கணக்கை பெறுவதுதான்.  இமெயில் உலகில் ஸ்பேம் என்று கூறப்படும் குப்பை மெயில்கள் பிரச்சனை நீங்கள் அறிந்ததுதான்.

உங்கள் இமெயில் முகவரி பெட்டியை திறந்து பார்த்ததுமே அதில் அழையா விருந்தாளிகளாக வந்து நிற்கும் வேண்டாத இமெயில் களை நீங்கள் தினந்தோறும்  பார்த்து கொண்டிருக்கலாம். வயக்ரா வேண்டுமா என்பதில் துவங்கி, விதவிதமான விளம்பர வாசகங்களை  இந்த மெயில்கள் தாங்கியிருப்பதோடு, சில நேரங்களில்  நம்மை ஏமாற்றிவிடும் மோசடி திட்டங்களுக்கும் வலைவீசுவதுண்டு.

இந்த குப்பை மெயில்களை பார்க்கும் போதெல்லாம் நம்முடைய  இமெயில்முகவரி இவர்களுக்கு எப்படி கிடைத்தது என்று நினைக்கத் தோன்றும். ஸ்பேம் நிறுவனங்கள் இமெயில் முகவரிகளை பெற விதவிதமான வழிகளை கையாள்கின்றன.  ஸ்பேம் தொல்லை தாளமுடியாமல்  போய் இமெயில் சேவை நிறுவனங்கள், இத்தகைய மெயில்களை பார்த்தாலே அவற்றை முடக்கிவிடுகின்றன.

இதிலிருந்து தப்பித்து கொண்டு மேலும் மெயில்களை அனுப்பி வைக்க ஸ்பேம் நிறுவனங்களுக்கு  புதிய முகமூடிகள் தேவைப்படுகின்றன. அவற்றின்  பழைய முகவரிகள் ஏற்கனவே  அறியப்பட்டு, முடக்கப் பட்டு விட்டதால் அவை புதிய முகவரிகளை  பதிவு செய்து கொள்கின்றன. இதற்காகத்தான் அவை  தனியே சாப்ட்வேர் பாட்களை உருவாக்கி, அவற்றின் மூலம் புதிய இமெயில் முகவரிகளை பெறுகின்றன.

இந்த சாப்ட்வேர்களும் நம்மை போலவே  இமெயில் சேவை  நிறுவனங்களின் கேள்விகளுக்கு பதிலளித்து ஏதாவது புதிய இமெயிலை பெற்று விடுகின்றன. இப்படி  புதிதாக உருவாக்கப்படும் ஆயிரக்கணக்கான இமெயில் முகவரிகளில் இருந்து  ஸ்பேம் நிறுவனங்கள் தங்கள் விளம்பர மெயில்களை அனுப்பி வைத்து ஏமாற்றுகின்றன.
இதன் காரணமாகவே  இமெயில் பதிவு செய்ய வருவது சாப்ட்வேரா அல்லது நிஜமான  மனிதர்களாக  என்று கண்டறியும் அவசியம் ஏற்பட்டது. இதற்காக உருவாக்கப் பட்டதுதான் கோணல்மாணல் எழுத்து சோதனை.

நீயெல்லாம் ஒரு மனுஷனா? என்று யாரை பார்த்து கேட்டாலும் கோபம் வந்து விடும். ஆனால் ஐயோ பாவம்! கம்ப்யூட்டர் அதனிடம், நீயெல்லாம் ஒரு கம்ப்யூட்டரா என்று கேட்டாலும் அதற்கு கோபப்பட தெரியாது. நீயெல்லாம் ஒரு மனிதனா? என்று கேட்டாலும் அதற்கு கோபப்பட தெரியாது. கம்ப்யூட்டர் எத்தனையோ விஷயங்களில் கில்லாடிதான். ஆனால் அதனால் முடியாத விஷயங் கள் என்று சில இருக்கின்றன.

மனிதர்களால் மிக எளிதாக செய்து விடக் கூடிய விஷயங்கள், கம்ப்யூட்ட ரால் தலைகீழாக நின்றாலும் செய்ய முடியாது. இவற்றில் ஒன்று. சுயமாக சிந்திப்பது. மனிதர்களை போல யோசிப்பது என்பது கூட பெரிய விஷயம்தான். அதனை விட்டு விடுவோம். ஒரு புகைப்படத்தை காண்பித்து அதில் இருப்பது நாயா? பூனையா? புலியா? என்று கேட்டால் சிறுவர்கள் கூட சுலபமாக பதில் சொல்லி விடுவார்கள். ஆனால் கம்ப்யூட்டர் திருதிருவென்று முழிக்கும்.

கம்ப்யூட்டரின் இந்த ஆதார குறைபாட்டை சரி செய்து அதற்கு புகைப்படங்களை பகுத்துணரும் ஆற்றலை ஏற்படுத்தி தர முயன்று வருகிறார்கள். இத்தகைய புத்திசாலியான சாப்ட்வேர்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. நிற்க! கம்ப்யூட்டர் அல்லது சாப்ட்வேரின் இந்த குறைபாட்டை, இன்டெர்நெட் உலகில் முக்கிய பிரச்சனைக்கு தீர்வு காணும் சோதனைக்கு அடிப்படை யாக பயன்படுத்தி வருகின்றனர் என்பதே விஷயம்.

புகைப்படங்கள் மட்டுமல்ல, கோணல், மாணலாக எழுத்துக்களை எழுதி படிக்கச் சொன்னால் கம்ப்யூட்டர் திணறிப் போய் விடும். அச்சிட்ட எழுத்துக்களையெல்லாம் அழகாக உள்வாங்கிக் கொண்டு அந்த வாசகங்களை டிஜிட்டல்மயமாக்கி காட்டும் உன்னதமான ஸ்கேனர்கள் கூட, எழுத்துக்கள் பாம்பு போல நெளிந்திருந்தால், நான் இந்த விளையாட்டுக்கு வரவில்லை என்று ஒதுங்கிப் போய் விடும்.

ஆனால் எத்தனை கிறுக்கலாக இருந்தாலும் மனிதர்கள் கொஞ்சம் மெனக்கெட்டாவது படித்து விடுவார்கள். இந்த வேறுபாட்டை பயன்படுத்திக் கொண்டு, இமெயில் முகவரி அல்லது இணையசேவைகளை பயன்படுத்திக் கொள்ள பதிவு செய்ய வருபவர்கள், உண்மையில் மனிதர்களா அல்லது மனிதர்கள் இந்த சேவைகளை தவறாக பயன்படுத்திக் கொள்ளும் உத்தேசத்தோடு ஏவி விட்ட சாப்ட்வேரா? என்பதை கண்டறிய கோணல், மாணல் எண்களை விண்ணப்பப் படிவத்தோடு சமர்ப்பித்து சோதனை வைக்கின்றனர்.

மனிதர்கள் என்றால் இந்த எண்களை அழகாக நிரப்பி விடுவார்கள். சாப்ட்வேர் என்றால் திணறி நிற்கும். உடனே சம்பந்தப் பட்ட இணையதளம் அதனை கழுத்தை பிடித்து வெளியே தள்ளி விடலாம். கேப்ட்ச்சா என்று அழைக்கப்படும் சாப்ட்வேர் இத்தகைய பரிசோத னையை வழங்குவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பல இணையதளங்கள் இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி வருகின்றன.

இணைய சேவைகளை பயன் படுத்தி கொள்வது தொடர்பாக இந்த பரிசோதனைக்காக ஒருவர் செலவிடக் கூடிய நேரம் ஒரு சில விநாடிகள்தான். ஆனால் இவற்றை பயன்படுத்தும் இணையதளங்கள் மற்றும் அவற்றுக்கு வருகை தரும் இணையவாசிகள் ஆகியவற்றை உலகளவில் கணக்கிட்டு பார்த்தால் இந்த பரிசோதனையால் நாளொன் றுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் மணிநேரம் செலவிடப்படுகிறது; அதாவது வீணாகிறது என்று சொல்லலாம்.

தனி மனிதர் களுக்கு இதனால் எந்த இழப்பும் இல்லைதான். ஆனால், இந்த இழப்பை கொஞ்சம் ஆக்கப் பூர்வமாக பயன்படுத்திக் கொண்டால் என்ன? என்று நினைத்த கார்னகி மெலான் பல்கலையை சேர்ந்த ஆய்வாளர்கள்,  இந்த பரிசோதனையை புத்தகங்களை டிஜிட்டல்மயமாக்கும் சேவையோடு ஒருங்கிணைத் திருக்கின்றனர்.

இதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாய்காயை அடிப்பது போல, இணையவாசிகள் பரிசோதிக்கப்படும் அதே நேரத்தில் புத்தகங்களுக்கான டிஜிட்டல்மயமாக்கும் பணியும் நிறைவேற வழி செய்திருக்கின்றனர்.

முன்பே சொன்னபடி புத்தகங்களை டிஜிட்டல்மயமாக்கும்போது புரியாத எழுத்துக்கள் இருந்தால் ஸ்கேனர் திண்டாடி விடும். முழு பக்கத்தையும் ஸ்கேன் செய்து வைத்து விட்டால் இந்த பிரச்சனை இருக்காது. ஆனால் அப்போது ஸ்கேன் செய்த பக்கத்தை சேமிக்க அதிக இடம் தேவை. அது மட்டுமல்லாமல் ஸ்கேன் செய்த பக்கங்கள் தேடுவதற்கு ஏற்றதல்ல. எனவேதான் எழுத்துக் களை உணர்ந்து டிஜிட்டல் மயமாக்கும் ஆப்டிகள் ரிககனேஷன் சாப்ட்வேர் பயன்படுத்தப்படுகிறது.

மிகவும் சிக்கலான எழுத்துக்கள் என்றால் இந்த சாப்ட்வேர், என்னால் முடியாது என்று சொல்லி விடும். எனவே டிஜிட்டல்மயமாக்கலில் ஈடுபடுபவர்கள் இப்படி ஸ்கேனர்கள் திணறும் வார்த்தைகளையெல்லாம் தேர்வு செய்து, மேலே குறிப்பிட்ட பரிசோதனைக்கான கோணல், மாணல் எழுத்துக்களாக வழங்கி விடுகின்றனர்.இப்போது புரிந்திருக்குமே. இதற்கான தேவை என்ன என்று!

பதிவு செய்ய வரும் மனிதர்கள், மிக எளிதாக இந்த புரியாத வார்த்தைகளை அழகாக டைப் செய்து சோதனையில் வெற்றி பெற்று முன்னேறி சென்று விடுவார்கள். புரியாத வார்த்தை, புரிந்த வார்த்தையாக மாறி கம்ப்யூட்டருக்கு திருப்பி அனுப்பப்பட்டு அவை டிஜிட்டல்மயமாக்கப்படும்.

இப்படியாக உலகின் பல்வேறு பகுதிகளில் சிதறிக் கிடக்கும் கம்ப்யூட்டர்களின் முன் அமர்ந்து வெவ்வேறு வகையான இணைய சேவைகளை பயன்படுத்தக் கூடியவர்கள் எதிர்கொள்ளக் கூடிய சோதனையில், டிஜிட்டல்மய மாக்கலை இணைப்பதன் மூலம் அவர்களை அறியாமலேயே இந்த திட்டத்தில் முடிவு செய்ய வைத்து புத்தகங்களை டிஜிட்டல்மயமாக்கி வருகின்றனர். ராமர் பாலம் கட்டும் போது அனில் உதவியது போல, நாமும் கூட நம்மை அறியாமலேயே டிஜிட்டல்மயமாக்க உதவி கொண்டிருக்கிறோம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s