ஆபத்தில் உதவிய டிவிட்டர்

டிவிட்டர் சேவையை சுயபுராணத்துக்கான சாதனம் என்றோ பயனற்ற தகவல் பகிர்விற்கான வாகனம் என்றோ அலட்சியமாக நினைத்துவிட வேண்டாம்.டிவிட்டர் அவற்றையெல்லாம் தாண்டி பயன் மிக்கது.

டிவிட்டர் எத்தனையோ விதங்களில் பயன்படும்.இவ்வளவு ஏன் ஆபத்து காலத்தில் உயிர் காக்கும் உதவி தேடிவரவும் டிவிட்டர் கைகொடுக்கும்.

அமெரிக்காவில் இப்படி தான் வனப்பகுதி ஒன்றில் விபத்துக்குள்ளான வீராங்கனையின் உயிர் காக்க டிவிட்டர் உதவியிருக்கிறது.

லே பாஸினா என்பது அவரது பெயர்.டிரயதலான் என்று சொல்லப்படும் விளையாட்டில் ஆர்வம் மிக்க வீரங்கனையான அவர் பிலடல்பியா நகரைச்சேர்ந்தவர்.சமீபத்தில் கனக்டிகட்டில் நடைபெற்ற மினி டிரைத்லான் போட்டியில் பங்கேற்றார்.டிரைத்தலானின் ஒரு அங்கமான சைக்லிங் பிரிவில் பங்கேற்பதற்ற அவர் வேகமாக சைக்கிள் ஓட்டிச்சென்றார்.அப்போது வழி தவறி வேறு பாதையில் சென்றுவிட்டார்.இதனால் மற்ற போட்டியாளர்களையும் தவறவிட்ட அவர் மீண்டும் போட்டி பாதைக்கு வருவதற்காக சரிவில் இறங்கி கொண்டிருந்தார்.

அந்த வேகத்தில் சைக்கிளின் முன் சக்கரம் மர வேரில் சிக்கி தூக்கி எறியப்பட்டார்.உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டு எழுந்து கூட நடக்க முடியாத நிலையில் விழுந்து கிடந்தார்.

பயத்தில் உறைந்து போன பாஸினா உதவிக்கு கூக்குரலிட்டார்.ஆனால் அருகே யாரும் இல்லாத்தால் ஒருவரும் உதவிக்கு வரவில்லை.வனப்பகுதியின் மத்தியில் வலியில் முனகியபடி கிடந்த அவர் பதட்டத்தோடு செல்போனில் உதவி கோர முயன்றார்.சோதனையாக இணைப்பு கிடைக்கவில்லை.

தான் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது கூட பாஸினாவுக்கு சரியாக தெரியவில்லை.ஒரு பக்கம் வலி வாட்டியெடுக்க மறுபக்கம் உதவிக்கு யாரை எப்படி அழைப்பது எனத்தெரியாமல் பதறித்தவித்தார்.

தவிப்பு மிக்க அந்த நேரத்தில் தான அவருக்கு டிவிட்டர் நினைவுக்கு வந்தது.குறும்பதிவு சேவையான டிவிட்டரில் அவருக்கு கணக்கு இருந்தது.அவரது டிவிட்டர் பதிவுகளை படிக்க ஆயிரம் பின்தொடர்பாளர்களும் கிடைத்திருந்தனர்.

எனவே டிவிட்டர் மூலம் உதவி கோரிப்பார்க்காலாம் என்று தனது நிலையை விளக்கி ஒரு டிவிட்டர் செய்தியை எஸ் எம் எஸ் மூலம் பதிவு செய்தார்.’நான் கயமடைந்து விழுந்து கிடக்கிறேன் உடனடியாக உதவி தேவை’ என்று குறிப்பிட்டு விட்டு ‘யாராவது அவசர உதவிக்கு அழைத்து டிரயதலான நடைபெறும் வனப்பகுதி நடுவே நான் விழுந்து கிடப்பதை தெரிவிக்க முடியுமா’என கேட்டிருந்தார்.

டிவிட்டரில் புதிதாக ஒரு செய்தியை வெளியிட்டதுமே அது உடனடியாக பின்தொடர்பவர்கள் அனைவருக்கும் போய் சேர்ந்துவிடும்.பாஸினா அனுப்பிய டிவிட்டர் செய்தியும் அவருடைய ஆயிரம் பின்தொடர்பாளர்களுக்கு போய் சேர்ந்தது.

அவர்களில் சிலர் அப்போது டிவிட்டர் சேவைய பயன்படுத்திக்கொண்டிருந்ததால் பாஸினாவின் அலரல் செய்தி கண்ணில் பட்டது.உடனே பாஸினாவின் பரிதாப நிலையை புரிந்து கொண்ட அவசர உதவிக்கு தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கி உதவி கோரினர்.

கலிபோர்னியா,நியூயார்க்,சிக்காகோ போன்ற நகரங்களில் இருந்தெல்லாம் போன்கள் பறந்தன.

அடுத்த சில நிமிடங்களில் எல்லாம் வன்ப்பகுதியில் ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டது.பாஸினா விழுந்த கிடந்த இடத்தை விரைவிலேயே கண்டு பிடித்து அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்சென்றனர்.

இப்போது பிலடல்பியா மருத்துவமனையில் பாஸினா தேறி வருகிறார்.

டிவிட்டரில் தனக்கு ஆயிரம் நண்பர்கள் இருந்த்தால் எப்படியும் உதவி கிடைக்கும் என்று நம்பியாதாக பாஸினா கூறியுள்ளார்.அது உண்மையாகவும் ஆகியுள்ளது.

செல்போன் இணைப்பு சரியாக கிடைக்காத இடங்களில் இருந்து போனில் பேச முடியாவிட்டாலும் கூட எஸ் எம் எஸ் செய்தி அனுப்பி தொடர்பு கொள்வது சாத்தியம் தான். பாஸினா இந்த வசதியை பயன்படுத்தி டிவிட்டர் செய்து டிவிட்ட சமூகத்தின் உதவியோடு ஆபத்தில் இருந்து மீண்டருக்கிறார்.

இதற்கு முன்னர் பூகம்பம் பாதித்த பகுதிகளில் இருந்தெல்லாம் டிவிட்டர் மூலம் உதவி கோரியுள்ளனர்.எனினும் டிவிட்டர் மூலம் ஆம்புலன்ஸ் உதவி கோரப்படுவது இதுவே முதல் முறையாக் கருதப்படுகிறது.டிவிட்டர் பயன்பாட்டு எல்லை விரிவடைந்து கோண்டே போகிறது .அதுவும் நல்லது தான்.

2 responses to “ஆபத்தில் உதவிய டிவிட்டர்

  1. ஓர் உயிர் நல்ல முறையில் காப்பாற்றப் பட்டிருக்கிரது. எவ்வளவு ஸந்தோஷமான செய்தி. சிறு துரும்பும்.பல் குத்த உதவுமென்பர். டிவிட்டர் இப்போ உயிர் காக்க உதவியிருக்கிரது.

பின்னூட்டமொன்றை இடுக