வன‌விலங்கு ஆர்வலர்களுக்கான இணையதளம்.

இன்று என்ன விலங்கை காணலாம் என்ற ஆர்வ‌த்தோடு தின‌ந்தோறும் விஜயம் செய்யத்தூண்டும் வகையில் அமைந்திருக்கிற‌து வைல்டுஆப்ஸ் இணைய‌தளம்.அதே போல ஒரு நாள் விஜயம் செய்யா விட்டாலும் இன்று என்ன விலங்கை தவறவிட்டோமே என்ற எண்ணத்தை ஏற்படுத்தலாம்.

வனவிலங்கு ஆர்வலர்களுக்கான இந்த தளம் கண்ணில் பட்ட வன‌விலங்கு பற்றிய விவரத்தை சக‌ வனவிலங்கு ஆர்வலர்களோடு பகிர்ந்து கொள்ள உதவுகிறது.

பறவை நோக்கல் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம்.கண்ணில் படும் பற‌வைகளை ரசித்து மக்ழிவதும் புதிய பற‌வைகளை காண நேர்ந்தால் அவை தொடர்பான விவரங்களை குறித்து வைப்பதும் பறவை நோக்கலில் ஈடுபடுபவர்களின் பழக்கமாக இருக்கிறது.

பற‌வை நோக்கல் என்பது இயற்கையோடு உற‌வை ஏற்படுத்தும் ஒரு பழக்கம் மட்டும் அல்ல.அது ஒரு அருமையான‌ கலை.அறிவியலும் கூட!

பறவை நோக்கர்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வீட்டின் பின்னே உள்ளே தோட்டத்திற்கு வருகை தரும் பறக்கும் விருந்தாளிகளை பறக்கும் மனதோடு பார்வையிட்டு மகிழ்வதுண்டு.வாய்ப்பு கிடைக்கும் போது மரங்கள் சூழ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு சென்று புதிய பறவைகளை பார்த்து மகிழ்வதும் உண்டு.

தீவிர ஈடுபாடு கொண்டவ‌ர்கள் கையில் குறிப்பேடு வைத்து கொண்டு பறவைகளை பார்த்த இடங்கள் நேரம் பறவையின் சிறப்பியல்புகள் போன்றவ‌ற்றை குறித்து கொள்வதும் உண்டு.

பற‌வை நோக்கல் போல வனவில‌ங்களை கண்டு ரசிக்கும் வன விலங்கு ஆர்வலர்களும் இல்லாமல் இல்லை.இதற்காகவே வனம் சார்ந்த பகுதிகளை நாடிச்செல்ப‌வர்களும் இருக்கின்ற‌னர்.அதிலும் காடுகள் அழிக்கப்பட்டு வருவதன் விளைவாக வனவிலங்குகளின் இயல்பான வாழ்விடங்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் நிலையில் குறிப்பிட்ட பகுதிக்கு சொந்தமான விலங்குகலை எதிர்பாராமல் பார்ப்பதை விட வனவிலங்கு ஆர்வல‌ர்களுக்கு பகிழ்ச்சியான விஷயம் வேறில்லை.

கண்டேன் சீதையை என்று மகிழ்ந்த அனுமன் போல அவர்கள் விலங்குகளை கானும் போது மகிழ்ச்சியின் உச்சிக்கு சென்று விடுவதுண்டு.இத்தகைய மகிழ்ச்சியை அதை உணரக்கூடிய சக ஆர்வலர்களோடு பகிர்ந்து கொள்வதைவிட மகிழ்ச்சியான விஷயம் இருக்க முடியுமா?

அதை தான் வைல்டுஆப்ஸ் தளம் செய்கிற‌து.வன‌விலங்கு பார்வையிடல் குறிப்புகளை பகிர்ந்து கொள்வத‌ற்காகவே உருவாக்கப்பட்டுள்ள தளம் இது.

வன விலங்கு ஆர்வலர்கள் தாங்கள் பார்க்கும் விலங்கு பறிய குறிப்பினை இந்த தளத்தில் வெளியிடலாம்.விலங்கின் புகைப்பத்தோடு எந்த இடத்தில் எப்போது அதனை பார்த்தோம் போன்ற விவரங்களை குறிப்பிடலாம்.இந்த குறிப்புகள் மூலம் மற்றவ‌ர்கள் அந்த விலங்கு பற்றிய விவரத்தை தெரிந்து கொள்ளலாம் என்பதோடு அவருக்கே கூட இது ஒரு நாட்குறிப்பு போல அமையும்.

இந்த விவரங்க‌ள் எல்லாம் விலங்குகள்,இடங்கள் என தனி தனி தலைப்புகளின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.அவற்றை கிளிக் செய்தால் விலங்கு தென்பட்ட விதம் தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.குறிப்பிட்ட விலங்கின பற்றி ஆர்வம் உள்ளவர்கள் அதனை மட்டும் குறிப்பிட்டு தேடிப்பார்க்கலாம்.

விலங்குகள் பற்றிய புதிய பகிர்வுகள் முகப்பு பக்கத்திலேயே இடம் பெறுகின்றன.இதை தவிர கூகுல் வரைபடத்தின் மீதும் விலங்கள் பார்க்கப்பட்ட இடங்கள் சுட்டிக்காட்டப்படுகிறது.உலக வரைபடத்தின் மீது அழகிய பச்சை பலூன்களாக இந்த இடங்கள் தோன்றுகின்றன.பலூனில் கிளிக் செய்தால் அந்த இடத்துக்கான விலங்கை பார்க்கலாம்.

உறுப்பினர்க‌ள் பகிர்வுகலை பார்த்த பின் அது பற்றி கருத்து தெரிவித்து உரையாடலிலும் ஈடுபடலாம்.குறிப்பிட்ட ஆர்வலரை நண்பராக்கி கொண்டு அவரது பகிர்வுகளை தொடர்ந்து பார்க்கலாம்.

சமூக வலைப்பின்னல் யுகத்தில் விலங்குகள் மீதான ஆர்வம் சார்ந்த நட்பை உருவாக்கி கொள்ள இந்த த‌ளம் உதவுகிற‌து.அப்ப‌டியே இயற்கையோடு இணைத்தும் வைக்கிற‌து.

ஆனால் மற்ற வலைப்பின்னல் சேவை த‌ளங்களில் இருப்பது போல உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் பின் தொடரும் வசதி இருந்தால் இன்னும் கூட‌ உயிரோட்டமாக இருக்கும்.

இணையதள முகவரி;http://wildobs.com/

பின்னூட்டமொன்றை இடுக