சோம்பேறிகளுக்கான இணைய டைரி.

நல்ல எழுத்துக்களை உருவாக்க நினைப்பவர்களை விட வணிக ரீதியாக எழுதிகுவிக்கும் எழுத்தாகர்களிடம் உள்ள எழுத்து பழக்கம் பாராட்டத்தக்கது என்னும் பொருளில் எழுத்தாளர் சுந்தர ராமசாமி ஒரு முறை குறிப்பிட்டுள்ளார்.எழுத்து பழக்கம் என்பது தொடர்ந்து எழுதுவதை என்று புரிந்து கொள்ளலாம்.

வணிக நோக்கில் எழுதுபவர்கள் சோம்பல் இல்லாமல் தினமும் ஒரு பக்கமாவது எழுதி விடுபவர்களாக இருக்கின்றனர் என்பது சு ரா வின் கருத்து.ஆனால் படைப்பாளிகளிடமே இத்தகைய சுறுசுறுப்பை காண முடியாமல் சோம்பலே அதிக இருப்பது என்பது அவரது ஆதங்கம்.

எழுத்து என்பது கலை தான் என்ற போதிலும் அதனை பட்டைத்தீட்டிக்கொள்ள படைப்பாற்றலோடு கொஞ்ச்ம பயிற்சியும் தேவை என்னும் சு ரா வின் கருத்தோடு எனக்கும் உடன்பாடு உள்ளது.

நல்ல எழுத்தாளர்கள் தினமும் ஒரு பக்கமாவது எழுதி பார்த்துவிட வேண்டும் என்று கூறும் சு ரா வின் கருத்து இணைய உலகிற்கும் பொருந்தும்.

யோசித்துப்பாருங்கள் இணையம் நமது கருத்துக்களை பதிவு செய்யவும் பகிரவும் எத்தனை வசதிகளை தந்துள்ளது.வலைப்பதிவு மூலமாக வாழ்க்கை வரலாற்றை எழுதுகிறோமோ இல்லையோ முக்கிய அனுபவங்களை பதிவு செய்யலாம்.டைரி எழுதுவது போல மனதில் தோன்றுவதை குறித்து வைத்து கொள்ள உதவும் இணைய சேவைகள் இருக்கின்றன.

தினமும் புகைப்பத்தோடு வாழ்க்கை நிகழ்வுகளை பதிவு செய்ய தூண்டும் தளங்களும் இருக்கின்றன.எனன் இருந்து என்ன பயன்,எதையும் இடைவிடாமல் செய்யும் குணம் தான் இல்லையே.சோம்பலும் மறதியும் வழிமறித்து கொள்வதால் இத்தகைய சேவைகளை பயன்படுத்தி கொள்ளும் சுறுசுறுப்பு கிடைக்கப்பெறுவது பெரும் பாடாக அல்லவா இருக்கிறது.

இத்தகைய சோம்பேறிகளுக்காக என்றே அருமையான ஒரு இணைய டைரி சேவை அறிமுகமாகியுள்ளது.

வாழ்க்கை குறிப்புகளை எழுத உதவும் அந்த தளம் நாள் தவறாமல் அதனை எழுதி முடிக்கவும் வழி செய்கிறது.டிவிட்டர் யுகத்தில் பலரும் மறந்து விட்ட இமெயில் துணையோடு இதனை அழகாக நிறைவேற்றுகிறது இந்த இணையதளம்.அதற்கேற்ப மிகவும் பொருத்தமாக மெயில்டைரி என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மெயில் டைரியில் தினமும் உங்கள் வாழ்வனுபவத்தை நீங்கள் குறித்து வைக்கலாம்.டைரி எழுதுவது போல தான் என்றாலும் ஒரு நாள் உற்சாகமாக ஆரம்பித்து விட்டு மாறுநாளே மறந்து போய்விடும் அபாயம் இந்த சேவையில் இல்லை.

காரணம் இந்த தளம் தினமும் இமெயில் வாயிலாக நினைவூட்டிக்கொண்டே இருக்கும்.இதில் உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்ட நாள்தோறும் இமெயில் வாயிலாக இன்றைய தினம் என்ன நடந்தது என்று கேள்வியை இந்த தளம் கேட்கும் .அதற்கு பதில் அளிப்பதற்காக கொஞ்சம் யோசித்து பார்த்து முக்கிய நிகழ்வுகளை குறித்து வைக்கலாம்.

நாட்காட்டி வசதியோடு இபப்டி குறிப்புகளை இடம் பெறச்செய்வதற்கான வசதியும் உள்ளது.

இது தான் என்று இல்லாமல் எல்லா வகையான விஷயங்களையும் இதில்,பகிர்ந்து கொள்ளலாம்.அனுபவங்களை மட்டும் அல்லாமல் செய்ய வேண்டும் என்று நினைப்பவற்றையும் பகிர்ந்து கொள்ளலாம்.புகைப்படங்களையும் சேர்த்து கொள்ளலாம்.செல்போனில் இருந்தும் அனுபவங்களை அப்டேட் செய்யலாம்.

ஒரு கட்டத்திற்கு பின் திரும்பி பாத்தால் இந்த பதிவுகள் செறிவானவையாக வியக்க வைக்கலாம்.பிள்ளைகளிடமோ நண்பர்களிடமோ காட்டி மகிழ கூடியவையாக இருப்பதோடு நமக்கே பயனுள்ளதாக இருக்கலாம்.

நினைத்தை அடையவும் இந்த தளம் கைகொடுக்கும்.யார் கண்டது உங்கள் அனுபவங்கள் ஒரு ஆழமான நாவலுக்கு உரியதாக கூட இருக்கலாம்.

டைரி எழுதுவதன் அருமையை புரிந்து கொள்ள பிரும்புகிறவர்கள் அனந்தரஙக பிள்ளை டைரி பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதியுள்ள குறிப்புகளை படித்து பார்க்க வேண்டும்.

டைரி எழுத இனைய முகவரி;http://maildiary.net/

1 responses to “சோம்பேறிகளுக்கான இணைய டைரி.

பின்னூட்டமொன்றை இடுக