கம்ப்யூட்டர் சிப்புக்குள் இருக்கும் ஓவியம் – 2

zooheader

(கடந்த பதிவின் தொடர்ச்சி.)
மைக்கேல் டேவிட்சனே சுவாரஸ்யமான மனிதர் தான். அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்த ஆய்வாளரான‌ அவரது ஆர்வமும் சரி,ஆய்வும் சரி நுட்பமானது. செல் பயாலஜி அவரது ஆய்வுத்துறை.அதாவது மைக்ரோஸ்கோப் எனும் நுன்னோக்கி கொண்டு கண்ணுக்கு தெரியாத உலகில் நுழைந்து பார்ப்பது.மைக்ரோஸ்கோப் மூலம் பார்த்து ஆய்வு செய்ததோடு நில்லாமல் தான் பார்ப்பவற்றை படம் பிடித்து பகிர்ந்து கொள்வதும் அவரது வழக்கம்.இந்த படங்களுக்கு மைக்ரோகிராப் என்று பெயர்.அதாவது மைக்ராஸ்கோப் மூலம் பெரிதாக்கப்பட்ட படங்கள்.

டேவிட்சன் இப்படி தான் மனித உயிரணுக்களில் துவங்கி அமீனோ அமிலம், டிஎன் ஏ, விட்டமின்கள் என எல்லாவற்றையும் படம் படித்திருக்கிறார்.அவரது புகைப்படங்கள் பல அறிவியல் இதழ்களிலும் வெளியாகி இருக்கின்றன.பல்வேறு விருதுகளையும் வென்றிருக்கின்றன.

டேவிட்சன் பற்றி இன்னும் நிறைய சொல்லலாம்.ஆனால் அவர் சிப்போவியத்தை கண்டுபிடித்த கதையை தெரிந்து கொள்ள இந்த அறிமுகமே போதுமானது. டேவிட்சன் கம்ப்யூட்டர் சிப்புகளையும் மைக்ரோஸ்கோப் மூலம் படம் பிடித்திருக்கிறார். இந்த படங்களை கொண்டு நாட்காட்டியை வெளியிடுவதும் அவரது வழக்கம்.சிப் ஷாட் காலன்டர் என்று இவற்றுக்கு பெயர்.1990 களில் மைக்ரோ சிப்களை படம் பிடித்து கொண்டிருந்த போது அவருக்கு வித்தியாமான அனுபவம் ஏற்பட்டது.

அவர் படம் பிடிக்க முயன்ற அந்த குறிப்பிட்ட சிப்பின் சர்க்யூட் மூலையில் சித்திரம் போன்ற ஒரு உருவம் கண்ணில் பட்டது.கொஞ்சம் கவனித்து பார்த்த போது அந்த உருவம் சிறுவர் உலகில் பிரபலமான கார்ட்டூன் பாத்திரமான வால்டோவை போலவே இருந்தது.சர்க்யூட்டில் ஒவியம் எப்படி வந்த‌து என யோசித்தபடி மேலும் ஆய்வு செய்து பார்த்த போது மேலும் சில கார்ட்டூன் சித்திரங்களும் அதில் வரையப்பட்டிருப்பதை பார்த்து வியந்து போனார்.

சிப் வடிவமைப்பு நுணுக்கத்தை யாரும் கண்டுபிடித்து காபி அடித்து விடக்கூடாது என்பதற்காக கையாளப்பட்ட யுக்தியாக இது இருக்கலாம் என நினைத்தவர் தனது மாலிக்யூலர் எக்ஸ்பிரஷன்ஸ் இந்த ஓவியத்தின் புகைப்படத்தை இணையதளத்தில் இடம்பெற வைத்தார். கெவின் குன் என்பவர் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு டேவிட்சனை தொடர்பு கொண்டார்.
 கெவின் எம் ஐ பி எஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் முதன்மை சிப் வடிவமைப்பாளராக பணியாற்றியவர்.சிப் சர்க்யூட்டில் காணப்பட்ட ஓவியம் குறித்து கெவின் விளக்கமளித்தார். அந்த ஓவியத்தை வடிவமைப்பாளரின் கையெழுத்து என்று கூறிய கெவின், அந்த ஓவியம் வால்டோ போல தோற்றமளித்தாலும் அது வால்டோ அல்ல தன்னுடன் பணியாற்றிய சக வடிவமைப்பாளர் என்று கூறினார். சிப் வடிவமைப்புக்காகவே தனது வாழ்க்கையை அர்பணித்துக்கொண்டவரான அவரது உருவத்தை தான் வரைந்து வைத்ததாகவும் கெவின் கூறினார்.அப்படியே அந்த சிப்பில் மேலும் சில இடங்களில் கவனிக்குமாறு கூறினார்.

சிப்புக்குள் ஓவியம் வரைப்படும் பழக்கம் பற்றி தெரிந்து கொண்ட டேவிட்சன் மிகுந்த ஆர்வத்தோடு மற்ற சிப்புகளையும் டேடிப்பார்த்து அவற்றில் வரையப்பட்ட ஓவியங்களை படம் பிடித்து சேகரிக்கத்துவங்கினார்.இந்த ஓவியங்களை எல்லாம் தனது இணையதளத்தில் சிலிக்கான் ஜூ என்னும் பிரிவில் இடம் பெற வைத்தார்.

இந்த சிலிக்கான் சித்திரங்களை இந்த தளத்தில் பார்த்து ரசிக்க முடிவதோடு தேவைப்பட்டால் அவற்றை ஸ்கிரீன்சேவராக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.( கட்டணம் உண்டு). சிப்போவியம் மட்டும் அல்ல, அவரது மற்ற‌ மைக்ரோ படைப்புகளையும் பார்த்து ரசிக்கலாம்.டவுன்லோடு செய்யலாம். அப்படியே நுண்ணோக்கியால் காணக்கூடிய உலகம் பற்றியும் அதன் பாரிமானங்கள் பற்றிய நுணுக்கமான அறிவுயல் தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.

சிப்போவியம் காண:http://micro.magnet.fsu.edu/creatures/index.html

இந்த கட்டுரைக்கு உதவிய மூல கட்டுரைகள் 1.http://news.cnet.com/What-art-is-hiding-on-your-microchip/2100-1006_3-5893374.html

2.http://spectrum.ieee.org/semiconductors/design/the-secret-art-of-chip-graffiti

பின்னூட்டமொன்றை இடுக