ஆடியோ பிரியர்களுக்கான தளம்

மீண்டும் மீண்டும் கேட்டு, அப்படி கேட்கும்போதெல்லாம் ரசித்து மகிழக் கூடிய வாய்ஸ் மெயில்களை பெற்றதுண்டா? நினைத்து நினைத்து ரசிக்கக்கூடிய இத்தகைய வாய்ஸ் மெயில்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று விரும்பியதுண்டா? ஆம் எனில் அதற்கான இணைய தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
.
ஆடியூ எனும் பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்த இணைய தளம் வாய்ஸ் மெயில்களை உலகோடு பகிர்ந்துகொள்வதற்கான இணைய களமாக அமைந்துள்ளது. உலகில் உள்ள ஒலிகளுக்கெல்லாம் ஒரு இருப்பிடமாக திகழ வேண்டும் எனும் உயர்ந்த லட்சியத்தோடு இந்த தளத்தை உருவாக்கி இருப்பதாக அதன் நிறுவனர்கள் கூறுகின்றனர்.

மனித ஒலிகளில் எத்தனை வகைகள் இருக்கின்றனவோ அத்தனையும் ஓரிடத்தில் திரட்டித் தரும் தளமாக ஆடியூ திகழ வேண்டும் என்பது அவர்களது விருப்பமாம். அதன் ஆரம்ப புள்ளியாக செல்போன் யுகத்தில் எங்கும் எளிதாக கிடைக்கக்கூடிய வாய்ஸ் மெயில் செய்திகளை பகிர்ந்துகொண்டு பதிவு செய்யும் வசதியை உருவாக்கி தந்துள்ளனர்.

இணையவாசிகள் தங்களுக்கு வந்த சுவாரஸ்யமான வாய்ஸ் மெயில்களை இந்த தளத்தில் பகிர்ந்துகொள்ளலாம். இதற்கு பயர்பாக்ஸ் உலாவின் நீட்டிப்பாக சுலபமான வசதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பகிர்ந்துகொள்ளும் வாய்ஸ் மெயில்களை அவற்றின் தன்மைக்கேற்ப, சுவையானவை, சிரிக்கக்கூடிய, பிரபலமானவை என்று பல்வேறு தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த தளத்தில் பகிர்ந்துகொள்ளப்படும் வாய்ஸ் மெயில்கள் அவற்றின் உள்ளடக்கத்தை பெரும் சுவராஸ்யத்தை அளிக்கக்கூடியதாக இருக்கின்றன. ஆடியோவில் கேட்டு ரசிப்பது தனி அனுபவம் என்றாலும் அந்த வசதி இல்லாதவர்கள் செய்திகளை படித்தும் மகிழலாம். கேட்டு ரசித்த பின்னர் இவற்றை நண்பர்களோடு டிவிட்டர், பேஸ்புக் தளங்களின் வழியே பகிர்ந்தும்கொள்ளலாம். சிறந்தது என கருதும் செய்திகளுக்கு வாக்களிக்கும் வசதியும் உண்டு.

வாய்ஸ் மெயில்களில் சில விவகாரமாகவும், வில்லங்கமாகவும் இருந்தாலும் பெரும்பாலும் ரசிக்கக்கூடியதாகவே இருக்கின்றன. எல்லாம் சரி இந்த வாய்ஸ் மெயில் பகிர்வால் நடைமுறை பயன் ஏதாவது உண்டா என கேட்கலாம். உலகம் இப்போது என்ன பேசிக்கொள்கிறது என்பதை இந்த வாய்ஸ் மெயில் உணர்த்தக்கூடும் என்று ஆடியூ குழு விளக்கம் தருகிறது.

அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட இடங்களை தேர்வு செய்து அங்கு பதிவாகும் வாய்ஸ் மெயில்களையும் கேட்கலாம் என்பதால், நம்மைச் சுற்றி உள்ளவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதையும் நமது பகுதியில் எந்த விஷயம் தற்போது பேசப்படுவதாக இருக்கிறது என்பதையும் இந்த தளம் உணர்த்த வல்லது.

இதுவரை இண்டர்நெட் என்பது பார்ப்பதற்கும், படிப்பதற்குமானதாகவே பெரும்பாலும் இருக்கிறது. இசை தளங்கள் மற்றும் ஸ்கைப் தொலைபேசி சேவையை மீறி இண்டர்நெட் என்பது பார்க்கவும், படிக்கவும் கூடியதாகவே இருக்கிறது.

அந்த குறையை போக்கும் வகையில் ஒலிச்சார்ந்த விஷயங்களை பகிர்ந்துகொள்வதற்காக ஆடியூ உருவாக்கப்பட்டுள்ளது. எதையும் கேட்டு ரசிப்பதில் இன்பம் காண்பவர்களுக்கு இந்த தளம் சுவை மிக்கதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

———

http://audioo.com/

4 responses to “ஆடியோ பிரியர்களுக்கான தளம்

  1. உங்கள் தளம் நன்றாக வுள்ளது அனைத்தும் உபயோகமான தகவல் எனக்கு குறும் படம் எடுப்பதற்கு AUDIO AND VIDEO தனியாக பிரிக்க மென்பொருள் இருந்தால் சொல்லுங்கள் !!!WINDOWS 7 32 bit ஆகும் கற்போம் தளம் மூலம் உங்களை அறிவேன் .. அண்ணா நன்றி எனது வலை தளம் http://www.itjayaprakash.blogspot.in

பின்னூட்டமொன்றை இடுக