ஓரு தாயின் இணைய கோபம்

அமெரிக்க பெண்மணி ஒருவர் தனது மகனுக்கு பள்ளியில் இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக இண்டர்நெட்டில் கோபத்தை வெளிப்படுத்தி, சக தாய்மார்களின் ஆதரவை பெற்றிருக்கிறார். அதே நேரத்தில் இந்த இணைய கோபம் சரியா என்ற விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொண்டாடப்படும் ஹாலோவன் திருவிழாவின் போது நடந்த சம்பவத்திலிருந்து இந்த கதை ஆரம்ப மாகிறது. அமெரிக்காவின் மத்திய பகுதியில் வசித்து வரும் அந்த பெண்மணி தன்னை ஒரு காவலரின் மனைவி என்று மட்டுமே அழைத்துக் கொள்கிறார். ஹாலோவன் தினத்தன்று பள்ளி மாணவ மாணவிகள் மாறுவேடத்தில் பள்ளிக்குச் செல்லும் வழக்கம் இருக்கிறது. சின்னஞ் சிறுவர்கள் உற்சாகமாக மாறுவேடம் அணிந்து செல்வார்கள்.

காவலரின் மனைவி என்று அழைத்துக்கொள்ளும் அந்த பெண்மணியும், மகனும் அன்றைய தினம் பள்ளிக்கு மாறுவேடத்தில் சென்றிருக்கிறார். ஸ்கூபிடூ தொடரின் தீவிர ரசிகரான அந்த மாணவன் தொடரில் வரும் பெண் பாத்திரத்தைப் போல வேடமணிந்து சென்றிருக்கிறார். பெண் வேடத்தில் மகனை அந்த பெண்மணி அழைத்து வருவதைப் பார்த்த மற்ற பெண்மணிகள் அவர் காதுபடவே இப்படி பெண் வேடத்தில் சரியா என்று விமர்சித்திருக்கின்றனர். இன்னும் சிலர் அவரிடமே வந்து உங்கள் மகன் இந்த வேடத்தை கேட்டானா? இல்லை நீங்கள் தான் அணிவித்தீர்களா? என்று விசாரித்துள்ளனர். இப்படி பெண் வேடத்தில் வருவதை ஏன் அனுமதித்தீர்கள் என்று சிலர் துளைத்தெடுத்துள்ளனர்.

இதனால் கடும் அதிருப்தியடைந்த அந்த பெண்மணி இண்டர்நெட்டில் தனது ஆவேசத்தை வெளிப்படுத்தினார். நெருடி ஆப்பிள் பாட்டம் எனும் இணைய விவாத குழுவில் உறுப்பினராக இருந்த அவர் இந்த சம்பவத்தை குறிப்பிட்டு, ஹாலோவன் தினத்தன்று என் மகனுக்கு அவன் விரும்பிய வேடத்தில்உடை அணிந்து செல்ல உரிமையில்லையா என்று கேள்வி எழுப்பினார். மகனின் விருப்பத்தை நிறைவேற்றுவதே தாயாக தனது கடமை என்று தெரிவித்த அவர், மற்ற தாய்மார்கள் ஏன் இதனை ஒரு பிரச்சனையாக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.

சிறுவர்கள் தங்களுக்கு பிடித்த வேடத்தை அணிந்து கொள்கிறார்கள். இதில் ஆண் பெண் என்ற பாகுபாட்டை பார்க்க வேண்டும் என்று கூறியிருந்த அவர், இதே ஒரு பெண் பேட்மேன் போல் உடை அணிந்து வந்திருந்தால் இப்படி யாராவது கேட்டிருப்பார்களா என்று ஆவேசமாக குறிப்பிட்டிருந்தார். தனது மகன் பெண் வேடத்தை விரும்பி அணிந்ததால் அவர் எதிர்காலத்தில் ஓரினச்சேர்க்கையாளனாக இருப்பான் என்ற அர்த்தமில்லை என்றும் அவர் மற்ற பெண்மணிகள் மீது பாய்ந்திருந்தார்.

அப்படியே இருந்தாலும் கூட தன் மகன் மீது எப்போதும் போல பாசம் காட்டுவேன் என்று அவர் கூறியிருந்தார். இந்த இணைய கோபத்தை புரிந்துகொண்ட பல அம்மாக்கள் அவருக்கு சபாஷ் போட்டு ஆதரவு தெரிவித்தனர். வழக்கமாகஅவரது பதிவுகளை சிலரே படிப்பார்கள். ஆனால் இந்த பதிவு ஏற்படுத்திய விவாதத்தையடுத்து நூற்றுக்கும் மேற்பட்டோர் இதனை படித்து விட்டு தங்களது ஆதரவைதெரிவித்துள்ளனர். மகனின் விருப்பத்தை உணர்ந்து அவன் பக்கம் நின்று விளக்கம் அளித்த தாய்மையின் துணிச்சலை பாராட்டுவதாக பலர் கூறியிருந்தனர். இந்த பாராட்டுக்கள் அவரை இணை உலகிற்கு துணிச்சல் மிக்க பாசக்கார அம்மாவாக அடையாளம் காட்டி உள்ளது. அதே நேரத்தில் ஒரு அம்மாவாக அவரது கோபம் புரிந்துகொள்ளக் கூடியது என்றாலும் அதனை இண்டர்நெட்டில் வெளிப்படுத்தியது சரிதானா என்றும் சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

குறிப்பாக மகனின் மாறுவேட புகைப்படத்தை அவர் இண்டர்நெட்டில் வெளியிட்டது எதிர்காலத்தில் அவனது வாழ்க்கை பாதிக்கும் வகையில் அமைந்து விடாது என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர். இணைய நிபுணர்களும் இந்த கேள்வியை எழுப்பி உள்ளனர். எல்லாவற்றையும் இணையத்திற்கு கொண்டு செல்லும் பழக்கத்தின்படி இந்த தாய் தனது மகனுக்கான ஆதரவை இண்டர்நெட்டில் வெளிப்படுத்தி அவனது செயலை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்தது சரிதான் என்றாலும், இந்த சிறுவயது படம் இணையத்தில் இருப்பது வருங்காலத்தில் அந்த மாணவனின் வேலைவாய்ப்பு போன்றவற்றை கூட பாதிக்கலாம் என்று எச்சரித்துள்ளனர்.

பின்னூட்டமொன்றை இடுக