வரைபட விவரங்களுக்கான தேடியந்திரம்.

கூகுலால் தேட முடியாத தகவல்கள் இணைய உலகில் இல்லை என்றே பெரும்பாலான இணையவாசிகள் கருதக்கூடும்.அதே போல கூகுலை தவிர வேறு தேடியந்திரம் தேவையில்லை என்றும் இணையவாசிகளில் பலர் கருதக்கூடும்.

ஆனால் கூகுலால் தேட முடியாத தகவல்கள் இணைய உலகில் இருக்கத்தான் செய்கின்றன.அவற்றை தேடித்தர தனியே பிரத்யேக தேடியந்திரங்கள் தேவைப்படத்தான் செய்கின்றன.

அந்த வகையில் இணைய கடலில் மறைந்து கிடக்கும் தகவல்களை தேடித்தரும் புதிய தேடியந்திரமாக ஜான்ரன் அறிமுகமாகியுள்ளது.மறைந்து கிடக்கும் தகவல்கள் என்றால் புள்ளி விவரங்கள்,வரைபட விவரங்கள் போன்றவை.அதாவது தரவுகள்.(டேட்டா)

இந்த தகவல்கள் கட்டங்களுக்குள்ளும் கோடுகளுக்குள்ளும்,வரைபடங்களுக்கு மத்தியிலும் பிடிஎப் வடிவிலும் எக்செல் கோப்புகளாகவும் அடைப்பட்டு கிடக்கின்றன.

இணைய உலகில் தேடும் கூகுலின் தேடல் சிலந்திகள் இணைய பக்கங்களில் உள்ள செய்திகளையும்,தகவல்களையும் எளிதாக திரட்டிவிடுகின்றன.இந்த தகவல்களை பகுப்பாய்வதிலும்,இணையவாசிகள் சொல்லும் குறிச்சொல்லுக்கு பொருத்தமான தகவல்களை பட்டியலிடுவதிலும் கூகுல் குறை சொல்ல முடியாத திறமையை பெற்றிருக்கிறது.பிங் போன்ற பிற தேடியந்திரங்களுக்கும் இது பொருந்தும்.

இவை பெரும்பாலும் எச் டி எம் எல் வடிவில் இருப்பவை.இவற்றுக்கு மாறாக பல பக்கங்கள் பிடிஎப் வடிவில் சேமித்து வைக்கப்பட்டிருக்கலாம்.பெரும்பாலும் புள்ளி விவரங்கள் மற்றும் வரைபடங்களுடன் கூடிய கட்டுரைகள் இப்படி பிடிஎப் கோப்புகளாக அமைகின்றன. இன்னும் சில பக்கங்கள் எக்செல் வடிவில் இருக்கின்றன.

வார்த்தைகளையும் வரிகளையும் தேடி கண்டுபிடிக்க பழக்கப்பட்ட தேடியந்திர சிலந்திகள் இவற்றை கோட்டை விட்டுவிடுகின்றன.எனவே இந்த தகவல்கள் தேடலில் அகப்படுவதில்லை.

பொதுவாக இணையவாசிகளுக்கு செய்திகள்,கட்டுரை போன்றவையே தேவைப்படுவதால் வரைபடங்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் போன்றவை விடுபடுவதை பொருட்படுத்துவதில்லை.ஆனால் ஆய்வு நோக்கில் தகவல்களை தேடுபவர்களுக்கு,கல்வியாளர்கள்,நிபுணர்கள் போன்றவர்களுக்கு இந்த தகவல்கள் பயனுள்ளவையாக இருக்கும்.

நிபுணர்கள் என்றில்லை சாமன்யர்களுக்கே கூட ஏதாவது ஒரு நேரத்தில் புள்ளிவிவரங்கள் தேவைப்படலாம்.

இது போன்ற நேரங்களில் கை கொடுப்பதற்காக என்றே ஜான்ரன் தேடியந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.புள்ளிவிவரங்கள்,வரைபட தகவல்கள் உள்ளிட்ட தரவுகளுக்கான கூகுல் என்று தன்னை தானே வர்ணித்து கொள்ளும் இந்த தேடியந்திரம் அதை கச்சிதமாக நிறைவேற்றுகிறது.

எப்படி என்றால்,இந்த தளத்தில் எதை தேடினாலும் அந்த குறிச்சொல் தொடர்பான புள்ளிவிவர பக்கங்களை பட்டியலிட்டு காட்டுகிறது.அதாவது பிடிஎப் மற்றும் எக்செல் கோப்புகளாக உள்ள பக்கங்களை பட்டியலிடுகிறது.

கூகுலிலேயே கூட பிடிஎப் கோப்பு என்று தனியே குறிப்பிட்டு தேட முடியும் தான்.ஆனால் இது முழுமையானதல்ல.தவிர பிடிஎப் வடிவில் தகவல் இருப்பது உறுதியாக தெரிந்தால் மட்டுமே இது கைகொடுக்கும்.

ஜான்ரன் தரவுகள் எந்த வடிவில் இருந்தாலும் அவற்றை தேடி பட்டியலிட்டு விடுகிறது.அதற்கேற்ற வகையில் தரவுகளை உணரக்கூடிய தேடல் தொழில்நுட்பமும் அதன் வசம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

வழக்கமான தேடியந்திரம் போல ஒரு பக்கத்தில் வார்த்தைகளையும் புகைப்படங்களையும் தேட முற்படாமல் இது புகைப்படங்களை தேடி அவற்றில் வரைபடங்களும் அட்டவணையும் இருக்கின்றனவா என அலசி ஆராய்ந்து அதனடப்படையில் முடிவுகளை பட்டியலிடுவதால் புள்ளிவிவரங்கள் அடங்கிய பிடிஎப் கோப்பு போன்றவற்றை முழுமையாக பட்டியலிடுகிறது.

இந்த தேடியந்திரத்தில் எந்த குறிசொல்லை டைப் செய்தாலும் அவை தொடர்பான பிடிஎப் பக்கங்களே வந்து நிற்கின்றன.

முதல் முறையாக இந்த தேடியந்திரத்தை பயன்படுத்துபவர்களுக்கு வழிகாட்டும் வகையில் உதாரணமாக சில தேடல் பதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அந்த தேடல் பதங்களை கிளிக் செய்தால் அவை தொடர்பான புள்ளிவிவர பக்கங்கள் வந்து நிற்கின்றன.

உதாரணமாக இந்தியாவில் அந்நிய முதலீடு என்னும் பதத்தை கிளிக் செய்தால் முதலீடு தொடர்பான புள்ளிவிவரங்கள் அடங்கிய பிடிஎப் பக்கங்கள் தோன்றுகின்றன.

இதே போல ஆப்பிரிக்காவில் செல்போன் பயன்பாடு,சைக்கிள் விபத்துகள்,இங்கிலாந்தில் சாலை விபத்துகள்,பெட்ரோல் பயன்பாடு போன்ற பதங்களுக்கும் இத்தகைய முடிவுகளை பார்க்கலாம்.

முடிவுகளை பரிசிலிக்கும் போது அவற்றை கிளிக் செய்ய கூட வேண்டாம் இடது பக்கத்தில் உள்ள பிடிஎப் அடையாளத்தின் மீது மவுசை நகர்த்தினாலே அந்த பக்கத்தின் தோற்றம் தோன்றுகிறது.

தேடியந்திர முகவரி;http://www.zanran.com/q/

3 responses to “வரைபட விவரங்களுக்கான தேடியந்திரம்.

பின்னூட்டமொன்றை இடுக